சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-
உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,
கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
1
|
சடை முடியுடையவனும் , பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும் , சரிந்த கோவண ஆடையுடையவனும் , மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணையுடைய உமாதேவியின் கணவனும் , வாயில் களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக் கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ ? | |
எரிதரு வார்சடையானும்; வெள்ளை எருது ஏறியும்;
புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து, ஏத்தவே,
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
2
|
நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும் , வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும் , சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட , அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ? | |
நாதனும், நள் இருள் ஆடினானும், நளிர்போதின்கண்
பாதனும், பாய் புலித்தோலினானும், பசு ஏறியும்,
காதலர் தண் கடவூரினானும், கலந்து ஏத்தவே
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
3
|
எல்லா உலகங்கட்கும் தலைவனும் , மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும் , அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும் , புலித்தோலாடை உடையவனும் , இடபவாகனனும் , அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் செய்த வீரட்டானத்து அரன் அல்லனோ ? | |
மழு அமர் செல்வனும்; மாசு இலாத பலபூதம் முன்
முழவு, ஒலி யாழ், குழல், மொந்தை கொட்ட, முதுகாட்டு இடைக்
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர் தனுள்
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே?
|
4
|
மழுப்படையேந்திய செல்வனும் , குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க , யாழும் குழலும் இசைக்க , மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட , சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ ? | |
சுடர் மணிச் சுண்ணவெண் நீற்றினானும், சுழல்வு ஆயது ஓர்
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்,
கடம் அணி மா உரித் தோலினானும், கடவூர்தனுள்
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
5
|
சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந் துள்ளவனும் , வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள வனும் , அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும் , மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் , திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ? விடமணி கண்டன் - ` நீலமணி மிடற்று ஒருவன் போல ` ( ஔவையார் , புறநானூறு . ) நினைவுகூர்க . | |
| Go to top |
பண் பொலி நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
உண் பலி கொண்டு உழல்வானும்; வானின்(ன்) ஒளி மல்கிய,
கண் பொலி நெற்றி, வெண்திங்களானும்; கடவூர்தனுள்
வெண்பொடிபூப்சியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
6
|
நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும் , நடனம் ஆடுபவனும் , பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும் , நெற்றிக் கண்ணை உடையவனும் , வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும் , திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட் டானத்து அரன் அல்லனோ ? | |
செவ் அழல் ஆய், நிலன் ஆகி, நின்ற சிவமூர்த்தியும்;
முவ் அழல், நால்மறை, ஐந்தும், ஆய முனிகேள்வனும்;
கவ்வு அழல் வாய்க் கதநாகம் ஆர்த்தான்-கடவூர்தனுள்
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே?
|
7
|
செந்நிற நெருப்பாகவும் , நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும் , ஆகவனீயம் , காருகபத்தியம் , தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும் , இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும் , ஞானநூல்களை ஓதல் , ஓதுவித்தல் , கேட்டல் , கேட்பித்தல் , சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும் , கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும் , வெப்பமுடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும் , திருக் கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ ? | |
அடி இரண்டு, ஓர் உடம்பு, ஐஞ்ஞான்கு-இருபதுதோள், தச-
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்;
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்தனுள்
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
8
|
ஓர் உடம்பில் இரண்டு கால்களும் , இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும் , முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும் , திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளி யுள்ள அரன் அல்லனோ ? | |
வரை குடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான், புரிந்து ஏத்தவே,
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்தனுள்
விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
9
|
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும் , ஆயர்களையும் காத்த திருமாலும் , குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க , பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன் , திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ? | |
தேரரும், மாசு கொள் மேனியாரும், தெளியாதது ஓர்
ஆர் அருஞ்சொல் பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்;
கார் இளங் கொன்றை வெண்திங்களானும் கடவூர்தனுள்
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே?
|
10
|
புத்தர்களும் , அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தெளிந்தறிதற்கரிய சொல்லும் , பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான் , கார்காலத்தில் மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும் , வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடி யுள்ளவனும் , வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய , திருக்கட வூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ ? | |
| Go to top |
வெந்த வெண்நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை,
அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான்
சந்தம் எல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்-
பந்தன செந்தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.
|
11
|
விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய் , அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை , அழகிய சீகாழியில் அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும் . | |