பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.
|
1
|
பந்து வந்தணைகின்ற விரல்களையும் , பவளம் போன்று சிவந்த வாயினையும் , குளிர்ந்த முழுமதி போன்ற முகத் தையும் , அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவ பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும் . அங்குத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து , வலம் வந்து , மனத்தால் , நினைந்து , உடலால் , வணங்கி , சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர் . அத்தலத்தினை நாம் வணங்குவோமாக ! | |
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த நல்வெண் நகை,
தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள்,
தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர் பதி,
பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.
|
2
|
நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும் , கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும் , ஒளிவீசுகின்ற முத்துப் போன்ற வெண்மையான பற்களையும் , இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும் , பின்னிய மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ள இடம் , மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய் . தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.
|
3
|
பாம்பின் படம் போன்ற அல்குலையும் , பஞ்சு போன்ற மென்மையான அடியையும் , வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , செங்கழுநீர்ப் பூக்கள் , தாமரைப் பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும் , பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென் கொள் குரும்பை,
மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை,
வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண்பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
|
4
|
தாமரைமொட்டு , கோங்கின் அரும்பு , ஊறும் தேனை உள்ளே கொண்ட இளநீர் , மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திருமுலைகளை யுடைய உமாதேவியாரை , திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலை போல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற , மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.
|
5
|
பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழி யாளாய் , நிறைந்த கூந்தலையும் , பசுந்தளிர் போன்ற மேனியையு முடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் , வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும் , பசு புண்ணியங்கள் , பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப் பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
| Go to top |
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
|
6
|
ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும் , மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற பற்களையும் , பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமாதேவி யோடு , வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது , உயர்ந்த சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள்,புயல் கால் ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
|
7
|
கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும் , கயல்மீன் போன்ற கண்களையும் , மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையையும் கச்சணிந்த மென்மை யான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு , கங்கையைத் தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி , பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த , போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த , சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன தோள், கதிர் மென்முலை,
தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து
ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணைச்சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
|
8
|
காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும் , கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும் , மூங்கில் போன்ற தோள்களையும் , கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும் , உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவ பெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும் , ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.
|
9
|
மணம் பொருந்திய கூந்தலையும் , ஒளி பொருந்திய வெண்ணிறப் பற்களையும் , கொவ்வைக்கனி போன்ற வாயினையும் , கொடி போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய் , கார்மேக வண்ணனான திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம் , வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக ! | |
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.
|
10
|
தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க் , கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும் , கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும் , வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமாதேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான் . கூறத்தகாத சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும் , சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன் அவனே . அப்பெருமானை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள் போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக . | |
| Go to top |
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன
கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை
ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.
|
11
|
மெலிந்த சிற்றிடையையும் , செழுமையான சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் , தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய் . அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ் , நான்மறை இரண்டிற்குமுரிய திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா . | |