சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்களர் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு அழகேசுவரியம்மை உடனுறை அருள்மிகு களர்முளையீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=GJEnNyvhwho   Add audio link Add Audio

நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

1
நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற, மிண்டிய,
தாளினார் வளரும் தவம் மல்கு திருக்களருள
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா! விரும்பும் அடியாரை
ஆள் உகந்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

2
தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடி போற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றி செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள
நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே!

3
பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாடவீடுகளைக் கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.

அம்பின் நேர் தடங்கண்ணினார் உடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திருக்களருள
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா! இணை அடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

4
வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாடமாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.

கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசை செய,
தெங்கு பைங்கமுகம் புடை சூழ்ந்த திருக்களருள
மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே! பிணை கொண்டு, ஓர் கைத்தலத்து,
அம் கையில் படையாய்! அடைந்தார்க்கு அருளாயே!

5
தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மதுஉண்டு இசைபாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
Go to top

கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயல் இடைச்
சேல், இளங் கயல், ஆர் புனல் சூழ்ந்த திருக்களருள
நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலி
ஆல நீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே!

6
அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

தம் பலம்(ம்) அறியாதவர் மதில் தாங்கு மால்வரையால் அழல் எழத்
திண்பலம் கெடுத்தாய்! திகழ்கின்ற திருக்களருள
வம்பு அலர் மலர் தூவி, நின் அடி வானவர் தொழ, கூத்து உகந்து பே
ரம்பலத்து உறைவாய்! அடைந்தார்க்கு அருளாயே!

7
தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத்தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப் பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக்களருள
நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான் தன் நீள் முடி
அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே!

8
மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள், நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள்வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி,
தெண் நிலாமதியம் பொழில் சேரும் திருக்களருள
உள் நிலாவிய ஒருவனே! இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான்! அடைந்தார்க்கு அருளாயே!

9
யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தெளிந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி, திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.

பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள் பேணிய
தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக்களருள
வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய சொற்கள் ஆன பொய்
ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

10
நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பிரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்குபவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
Go to top

இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.

11
திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத்தவம் சித்திக்கும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்களர்
2.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீருள் ஆர் கயல் வாவி
Tune - சீகாமரம்   (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org