நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!
|
1
|
நீண்டுயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியவராய் வேதவிதிப்படி வளர்க்கப்பெற்றுச் சுழன்றெரியும் தீயில் ஆடுதலை விரும்பும் இறைவர் உறையும் அனேகதங்காவதம் என்னும் தலத்தைப் பாடுதலை விரும்பும் மனத்தினராய பக்தர்கள் வினைகளையும் அவற்றால் விளையும் பற்றுக்களையும் அறுப்பர். | |
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்,
நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!
|
2
|
சூலத்தையும் மழுவையும் படைக்கலங்களாகக் கொண்டு, உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை உண்டு உலகைக் காத்தருளிய பெருமான், அனேகதங்காவதத்தில் நீலநிறம் பொருந்திய பெரிய கண்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கும் அழகினராய், அவ்வம்மையோடு குலாவும் செயல்களுக்கு அளவில்லை. | |
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர்
அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை
நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?
|
3
|
செம்பினால் இயன்ற ஒப்பற்ற மும்மதில்களும் எரியச் சினத்தை முனையிலே உடைய ஓர் அம்பினால் எய்து தேவர்கட்கு அருள்புரிந்த வில்லாளியும், அனேகதங்காவதத்தில் பூங்கொம்பு போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிக் கொல்லேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட நம்பனுமாகிய பெருமான் திருப்பெயரைச் சொல்லாதவை நாக்கள் எனல் ஆகுமோ? | |
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.
|
4
|
`தந்தத் திந்தத் தடம்` என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது. | |
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து
போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர்
புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.
|
5
|
திங்களும் ஞாயிறும் உயர்ச்சியை அறிய முடியாது, பக்கத்தே விலகிச் சென்று உறையும் வானளாவிய கோயிலை உடைய தாய்ப், பசும்பொன் போன்ற அழகிய நீர்த்துளிகளை உடையவாய்ப் பறை போன்று ஒலித்து ஒழுகும் அருவிகளை அடுத்துள்ளது ஆகிய அனேகதங்காவதத்தை, எம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக் கொண்டு உகந்தருளுகின்றான். | |
| Go to top |
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்!
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல்
ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.
|
6
|
தேனை மிகுதியாகப் பெற்ற மணம் கமழும் சிறந்த மலர்களைப் பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே! வீடுபேறு அடைதற்குப் பின்பற்றும் சரியை, கிரியை முதலான நெறிகளில் நின்று அவனை உணர நீவிர் வல்லீராயின் யானைகள் ஏறி உலாவும் அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்துள் விளங்கும் ஆன் ஐந்தாடும் முடியானாகிய சிவபிரான் உங்கட்கு அவ்வானுலகப் பேற்றினை வழங்கியருளுவான். | |
வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழ, வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள்
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.
|
7
|
யானைகள் அஞ்சி ஓடுமாறு ஒலித்துப்பாய்வனவும், ஒளிபொருந்திய முத்துக்கள், வெண்பளிங்கு ஆகியன நீரை ஊடுருவி வீழ்வனவும், வயிரங்களைக் கொழித்து அகில்மரங்களை உந்திக்கொண்டு வருவனவும் ஆகிய வெண்மையான அருவிகள் பாயும் அழகியசாரலை உடைய அனேகதங்காவதத்தை அடைந்து அங்கு வாழும் பெருமான் திருவடிகளை அடைவதே மெய்ந்நெறியாகும். | |
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்,
ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.
|
8
|
அன்பு ஒருசிறிதும் இன்றித் தன் வலிமையைப் பெரிது என எண்ணி எழுந்த இராவணனை வீரம் அற்றவனாகச் செய்தருளிய, கயிலை மலைக்குரியவனும், ஆரமாகப் பாம்பை அணி பவனும் ஆகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு நினைபவர் வினைகள் மாயும். | |
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.
|
9
|
திருமால் நான்முகனோடு கூடி அடிமுடி அறிய முற்பட்டபோது அவர்கள் அறிய முடியுமா என எண்ணி ஐயுறும் வண்ணம் அவர்கட்கு இடையே எழுந்ததோர் அழற்பிழம்பாகிய சிவபெருமான் எழுந்தருளிய அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்தை நண்ணும் இயல்புடையார் வினைகள் நாசமாகும். | |
மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர்,
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.
|
10
|
சிறந்த சிவபதத்தை அறியாதவராகிய சமண புத்தர்கள் `ஏ ஏ` என இகழத்தக்கவர்களாய் இறுமாப்புடையவர்களாய் உழல்கின்றவர் ஆவர். நாம் அடையத்தக்கது ஆகிய சிவபதத்தை அறியும் அவா உடையீராயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை ஆராய்ந்துணர்தலே நீவிர் செய்யத்தக்க கருமம் ஆகும். | |
| Go to top |
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.
|
11
|
பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த காரணத்தால் அப்பெயர் பெற்ற தோணிபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தன் நல்லோர்கள் திருமுன்னர், அல்லல்தீர உரைத்தருளிய அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச் சுடும் துன்பங்கள் நம்மை அடைய மாட்டா. | |