படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்
றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர்
கோக்கழற் சிங்கர் என்பார்.
|
1
|
காடவர் குரிசி லாராம்
கழற்பெருஞ் சிங்க னார்தாம்
ஆடக மேரு வில்லார்
அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய
வடபுலங் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக
நன்னெறி வளர்க்கும் நாளில்.
|
2
|
குவலயத் தரனார் மேவும்
கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து
தக்கமெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும்
தென்திரு வாருர் எய்திப்
பவமறுத் தாட்கொள் வார்தங்
கோயிலுள் பணியப் புக்கார்.
|
3
|
அரசியல் ஆயத் தோடும்
அங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர்
முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்தல்
உரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத்
தொருதனித் தேவி மேவி.
|
4
|
கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.
|
5
|
| Go to top |
புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
|
6
|
வார்ந்திழி குருதி சோர
மலர்க்கருங் குழலும் சோரச்
சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை
மயிலெனத் துளங்கி மண்ணில்
சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி
புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட்டு
அரசரும் அணையவந்தார்.
|
7
|
வந்தணை வுற்ற மன்னர்
மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று
பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை
நோக்கிஇவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே
யார்செய்தார் என்னும் எல்லை.
|
8
|
அந்நிலை யணைய வந்து
செருத்துணை யாராம் அன்பர்
முன்னுறு நிலைமை யங்குப்
புகுந்தது மொழிந்த போது
மன்னரும் அவரை நோக்கி
மற்றிதற் குற்ற தண்டம்
தன்னைஅவ் வடைவே யன்றோ
தடிந்திடத் தகுவ தென்று.
|
9
|
கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.
|
10
|
| Go to top |
ஒருதனித் தேவி செங்கை
உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின்
பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய ஓங்கும்
இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச
மலர்மழை பொழிந்த தன்றே.
|
11
|
அரியஅத் திருத்தொண் டாற்றும்
அரசனார் அளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி
மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே
செய்யசே வடியி னீழல்
பெருகிய வுரிமை யாகும்
பேரருள் எய்தி னாரே.
|
12
|
வையகம் நிகழக் காதல்
மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர்
கழலிணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர்
இடங்கழி யார்என் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர்
செய்வினை விளம்ப லுற்றாம்.
|
13
|