தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.
|
1
|
அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம்பெருகச்
செங்கோலுய்த்து அறம்அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச்
சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட
பொன்னார மணிமார்பில்
புரவலனார் பொலிகின்றார்.
|
2
|
ஆயஅர சளிப்பார்பால்
அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர்
நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும்
பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை
பரப்பியமர் கடக்கின்றார்.
|
3
|
எடுத்துடன்ற முனைஞாட்பின்
இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும்
பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந்
தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம்
வடிவேல்வாங் கிடப்பெருக.
|
4
|
வயப்பரியின் களிப்பொலியும்
மறவர்படைக் கலஒலியும்
கயப்பொருப்பின் முழக்கொலியும்
கலந்தெழுபல் லியஒலியும்
வியக்குமுகக் கடைநாளின்
மேகமுழக் கெனமீளச்
சயத்தொடர்வல் லியுமின்று
தாம்விடுக்கும் படிதயங்க.
|
5
|
| Go to top |
தீயுமிழும் படைவழங்கும்
செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக்
குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள்
பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய
உணவளித்த தெனப்பிறங்க.
|
6
|
இனையகடுஞ் சமர்விளைய
இகலுழந்த பறந்தலையில்
பனைநெடுங்கை மதயானைப்
பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து
முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை
பூழியர்வேம் புடன்புனைந்து.
|
7
|
வளவர்பிரான் திருமகளார்
மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந்
தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க்
கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி
அருள்பெருக அரசளித்தார்.
|
8
|
திரைசெய்கட லுலகின்கண்
திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி
ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம்
அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத்
தின்புற்றுப் பணிந்திருந்தார்.
|
9
|
பொன்மதில்சூழ் புகலிகா
வலர்அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார்
செங்கமலக் கழல்வணங்கிப்
பன்மணிகள் திரையோதம்
பரப்புநெடுங் கடற்பரப்பைத்
தொன்மயிலை வாயிலார்
திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
|
10
|
| Go to top |