மன்னி நீடிய செங்கதி
ரவன்வழி மரபில்
தொன்மை யாம்முதற் சோழர்தந்
திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப்
பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகைப்பட்
டினத்திரு நகரம்.
|
1
|
தாம நித்திலக் கோவைகள்
சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழல் மாதர்பந்
தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக்
கருங்கடல் முகந்த
மாமு கிற்குலம் மலையென
ஏறுவ மருங்கு.
|
2
|
பெருமை யில்செறி பேரொலி
பிறங்கலின் நிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட
மாதலின் யாவும்
தருத லில்கடல் தன்னினும்
பெரிதெனத் திரைபோல்
கரிப ரித்தொகை மணிதுகில்
சொரிவதாங் கலத்தால்.
|
3
|
நீடு தொல்புகழ் நிலம்பதி
னெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பலபொருள்
மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள்தனக் குடியுடன்
குவலயங் காணும்
ஆடி மண்டலம் போல்வதவ்
வணிகிளர் மூதூர்.
|
4
|
அந்நெ டுந்திரு நகர்மருங்
கலைகடல் விளிம்பில்
பன்னெ டுந்திரை நுரைதவழ்
பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத்
துணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது
தடநுளைப் பாடி.
|
5
|
| Go to top |
புயல ளப்பில வெனவலை
புறம்பணை குரம்பை
அயல ளப்பன மீன்விலைப்
பசும்பொனி னடுக்கல்
வியல ளக்கரில் விடுந்திமில்
வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர்
கருநெடுங் கண்கள்.
|
6
|
உணங்கல் மீன்கவர் வுறுநசைக்
குருகுடன் அணைந்த
கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப்
புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்
அணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று
இழியல மருளும்.
|
7
|
வலைநெ டுந்தொடர் வடம்புடை
வலிப்பவர் ஒலியும்
விலைப கர்ந்துமீன் குவைகொடுப்
பவர்விளி ஒலியும்
தலைசி றந்தவெள் வளைசொரி
பவர்தழங் கொலியும்
அலைநெ டுங்கடல் அதிரொலிக்
கெதிரொலி யனைய.
|
8
|
அனைய தாகிய அந்நுளைப்
பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங்
குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர்
அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர்
எனநிகழ் மேலோர்.
|
9
|
ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்
தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்
பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன்
படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்குவை யுலப்பில
வுடையராய் உயர்வார்.
|
10
|
| Go to top |
முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்
தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை
மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக்
கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன்
புடன்என்றும் விருப்பால்.
|
11
|
வாகு சேர்வலை நாள்ஒன்றில்
மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற்
கெனவிடும் இயல்பால்
ஆகு நாள்களில் அனேகநாள்
அடுத்தொரு மீனே
மேக நீர்படி வேலையில்
படவிட்டு வந்தார்.
|
12
|
மீன்வி லைப்பெரு குணவினில்
மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி
அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர்
பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற்
கெனவிட்டு மகிழ்ந்தார்.
|
13
|
சால நாள்கள்இப் படிவரத்
தாம்உண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
பெனும்அமு துண்பார்.
|
14
|
ஆன நாள்ஒன்றில் அவ்வொரு
மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற்
சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல
கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன்
றிடுவலைப் படுத்தார்.
|
15
|
| Go to top |
வாங்கு நீள்வலை அலைகடற்
கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென
வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக்
காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று
படுத்தனம் என்றார்.
|
16
|
என்று மற்றுளோர் இயம்பவும்
ஏறுசீர்த் தொண்டர்
பொன் திரட்சுடர் நவமணி
பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது என்னையா
ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத்
திரையொடுந் திரித்தார்.
|
17
|
அகில லோகமும் பொருள்முதற்
றாம்எனும் அளவில்
புகலு மப்பெரும் பற்றினைப்
புரையற எறிந்த
இகலில் மெய்த்திருத் தொண்டர்முன்
இறைவர்தாம் விடைமேல்
முகில்வி சும்பிடை யணைந்தனர்
பொழிந்தனர் முகைப்பூ.
|
18
|
பஞ்ச நாதமும் எழுந்தன
அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை
யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர்
சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங்
குறத்தலை யளித்தார்.
|
19
|
தம்ம றம்புரி மரபினில்
தகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி அதிபத்தர்
விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கள்
முறைமையிற் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர்
திருத்தொண்டு பகர்வாம்.
|
20
|
| Go to top |