கோடாத நெறிவிளங்கும்
குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
நரசிங்க முனையரையர்.
|
1
|
இம்முனையர் பெருந்தகையார்
இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவர் அடியடைவே
அரும்பெரும்பேறு எனஅடைவார்.
|
2
|
சினவிடையார் கோயில்தொறும்
திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க
வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல்
அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக்
கடனாற்றிச் செல்கின்றார்.
|
3
|
ஆறணிந்த சடைமுடியார்க்
காதிரைநாள் தொறும்என்றும்
வேறுநிறை வழிபாடு
விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந்
தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித்
தின்னமுதும் நுகர்விப்பார்.
|
4
|
ஆனசெயல் முறைபுரிவார்
ஒருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு
விளங்கியபொன் னிடும்பொழுதில்
மானநிலை யழிதன்மை
வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியராய்
ஒருவர்நீ றணிந்தணைந்தார்.
|
5
|
| Go to top |
மற்றவர்தம் வடிவிருந்த
படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
கொண்டாடிப் பேணுவார்.
|
6
|
சீலமில ரேயெனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம்இகழ்ந் தருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த
படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய
மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
|
7
|
இவ்வகையே திருத்தொண்டின்
அருமைநெறி எந்நாளும்
செவ்வியஅன் பினல்ஆற்றித்
திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வாள் அரவணிந்தார்
பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின்
மீளாத நிலைபெற்றார்.
|
8
|
விடநாகம் அணிந்தபிரான்
மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகும் நரசிங்க
முனையர்பிரான் கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத்
தனஞ்சொரியுங் கலஞ்சேரும்
கடல்நாகை அதிபத்தர்
கடல்நாகைக் கவினுரைப்பாம்.
|
9
|