சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.370   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
1

காலை யெழும்பல் கலையின்ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி
துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ
விளங்கி யோங்கும் வியப்பினதால்.
2

மிக்க செல்வ மனைகள்தொறும்
விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும்
பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும்
சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்
அடங்க நிதியந் துவன்றுவன.
3

வேத நெறியின் முறைபிறழா
மிக்க ஒழுக்கந் தலைநின்ற
சாதி நான்கும் நிலைதழைக்கும்
தன்மைத் தாகித் தடமதில்சூழ்
சூத வகுள சரளநிரை
துதையுஞ் சோலை வளநகர்தான்
கோதை யரசர் மகோதையெனக்
குலவு பெயரும் உடைத்துலகில்.
4

முருகு விரியும் மலர்ச்சோலை
மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி
அறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச்
சேரர் குலமும் உலகுஞ்செய்
பெருகு தவத்தால் அரனருளால்
பிறந்தார் பெருமாக் கோதையார்.
5
Go to top

திருமா நகரந் திருவவதா
ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல்
எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத்
தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
6

மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.
7

உலகின் இயல்பும் அரசியல்பும்
உறுதி யல்ல எனவுணர்வார்
புலரி யெழுந்து புனல்மூழ்கிப்
புனித வெண்ணீற் றினும்மூழ்கி
நிலவு திருநந் தனவனத்து
நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு
மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.
8

திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு
வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி
மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர
ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.
9

நீரில் மலிந்த கடல்அகழி
நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம்
அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற்
கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன்
தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.
10
Go to top

வந்த மரபின் அரசளிப்பான்
வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர்
சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத்
தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக்
களத்தில் அவர்பால் எய்தினார்.
11

எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
12

இன்பம் பெருகுந் திருத்தொண்டுக்
கிடையூ றாக இவர்மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை
அரசு புரக்கும் அருளுண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை
இடைபெற் றறிவே னெனப்புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம்
செய்தார் முதல்வர் அருளினால்.
13

மேவும் உரிமை அரசளித்தே
விரும்பு காதல் வழிபாடும்
யாவும் யாருங் கழறினவும்
அறியும் உணர்வும் ஈறில்லாத்
தாவில் விறலுந் தண்டாத
கொடையும் படைவா கனம்முதலாம்
காவல் மன்னர்க் குரியனவும்
எல்லாங் கைவந் துறப்பெற்றார்.
14

ஆன அருள்கொண் டஞ்சலிசெய்
திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல்
ஊன மாகுந் திருத்தொண்டுக்
கெனினும் உடையா னருளாலே
மேன்மை மகுடந் தாங்குதற்கு
வேண்டும் அமைச்சர்க் குடன்படலும்
மான அமைச்சர் தாம்பணிந்துஅவ்
வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.
15
Go to top

உரிமை நாளில் ஓரைநலன்
எய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன
வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி
கவித்தார் எல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி
தாங்குங் கழறிற் றறிவார்தாம்.
16

தம்பி ரானார் கோயில்வலங்
கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க
நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர்
வண்ணான் முன்னே வரக்கண்டார்.
17

மழையிற் கரைந்தங் குவரூறி
மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார்
அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல்
யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால்
விரைந்து சென்று கைதொழுதார்.
18

சேரர் பெருமான் தொழக்கண்டு
சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட
தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர்
வருந்தா தேகும் எனமொழிந்தார்.
19

மன்னர் பெருமான் திருத்தொண்டு
கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து
போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட
வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில்
புக்கார் புனைமங் கலம்பொலிய.
20
Go to top

யானை மிசைநின் றிழிந்தருளி
இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி
விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன்
பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற்
றிருந்தார் மன்னர் பெருமானார்.
21

உலகு புரக்கும் குடைவளவர்
உரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய்
நீதி மனுநூல் நெறிநடத்தி
அலகில் அரசர் திறைகொணர
அகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர
மறைகள் வளர மண்ணளிப்பார்.
22

நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
23

வாசத் திருமஞ் சனம்பள்ளித்
தாமஞ் சாந்த மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம்
முதலா யினவும் திருவமுதும்
ஈசற் கேற்ற பரிசினால்
அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர்
பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.
24

நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற்
குரிய வேள்வி பலசெய்தார்.
25
Go to top

இன்ன வண்ணம் இவரொழுக
எழில்கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால
வாயில் இறைவர் வருமன்பால்
பன்னும் இசைப்பா டலிற்பரவும்
பாண னார்பத் திரனார்க்கு
நன்மை நீடு பெருஞ்செல்வம்
நல்க வேண்டி அருள்புரிவார்.
26

இரவு கனவில் எழுந்தருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப்
பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண்
வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம்
தாழா தேகி வருகென்று.
27

அதிர்கழல் உதியர் வேந்தற்
கருள்செய்த பெருமை யாலே
எதிரில்செல் வத்துக்கு ஏற்ற
இருநிதி கொடுக்க வென்று
மதிமலி புரிசை என்னும்
வாசகம் வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத்
திருமுகங் கொடுத்தார் காண.
28

சங்கப் புலவர் திருமுகத்தைத்
தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு
மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர்
தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன்
வந்து மன்னர்க் கறிவித்தார்.
29

கேட்ட பொழுதே கைதலைமேல்
கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழிநீர் வழிந்திழிய
எழுந்து நடுக்கம் மிகவெய்தி
ஓட்டத் தம்பொன் மாளிகையின்
புறத்தி லுருகுஞ் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார்
பாதம் பலகாற் பணிகின்றார்.
30
Go to top

அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
31

பரிவில் போற்றித் திருமுகத்தைப்
பலகால் தொழுது படியெடுக்க
உரிய வகையா லெடுத்தோதி
யும்பர் பெருமா னருள்போற்றி
விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு
மேவும் உரிமைச் சுற்றமெலாம்
பெரிது விரைவிற் கொடுபோந்து
பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.
32

நங்கள் குலமா ளிகையதனுள்
நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு
வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமே
அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற்
சமைய வேற்றிக் கொணருமென.
33

சேரர் பெருமான் அருள்செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால்
தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த
வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள்.
34

பரந்த நிதியின் பரப்பெல்லாம்
பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு
நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள்
முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென
மொழிந்தார் பொறையர் புரவலனார்.
35
Go to top

பாண னார்பத் திரனாரும்
பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம்
கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன
அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும்
கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.
36

இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.
37

பண்பு பெருகும் பெருமாளும்
பாண னார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதல்நீர்
வழியக் கையால் தொழுதணைய
நண்பு சிறக்கு மவர் தம்மை
நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை
புக்கார் திருந்தும் இசைப்பாணர்.
38

வான வரம்பர் குலம்பெருக்கும்
மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை
நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண்
டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
39

அளவில் பெருமை அகிலயோ
னிகளும் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர்கள்
ஒன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகள் முதலான
கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன்செழியர்
மகிழும் கலப்பில் வைகு நாள்.
40
Go to top

வானக் கங்கை நதிபொதிந்த
மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம்
தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார்
ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளா தொழிய மதிமயங்கி.
41

பூசை கடிது முடித்தடியேன்
என்னோ பிழைத்த தெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினிவே
றடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை
யுருவித் திருமார் பினில்நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்
ஒசை மிகவும் இசைப்பித்தார்.
42

ஆடல் சிலம்பின் ஒலிகேளா
வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக்
கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார்
நெடுமால் பிரமன் அருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன்
செய்யா தொழிந்த தென்னென்றார்.
43

என்ற பொழுதில் இறைவர்தாம்
எதிர்நின் றருளா தெழுமொலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்
வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வால் நமைப்போற்றி
யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.
44

என்னே அடியார்க் கிவரருளும்
கருணை யிருந்த வாறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய்
புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர்
தமையுங் காண்பன் எனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார்
நாமச் சேரர் கோமானார்.
45
Go to top

பொன்னார் மௌலிச் சேரலனார்
போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம்
எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர்
வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந்
தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.
46

இட்ட நன்னாள் ஓரையினில்
இறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார்
தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப்
பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர்
கடந்தார் உதியர் தோன்றலார்.
47

யானை யணிகள் பரந்துவழி
யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த
மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து
செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ
போலுங் காட்சி மேவின தால்.
48

புரவித் திரள்கள் ஆயோகப்
பொலிவி னசைவிற் போதுவன
அரவச் சேனைக் கடற்றரங்க
மடுத்து மேன்மே லடர்வனபோல்
விரவிப் பரந்து சென்றனவான்
மிசையு மவலு மொன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ்சேனை
நேமி நெளியச் சென்றனவால்.
49

அந்நாட் டெல்லை கடந்தணைய
அமைச்சர்க் கெல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார்
வேண்டு வாரை யுடன்கொண்டு
கொன்னார் அயில்வேல் மறவர்பயில்
கொங்கு நாடு கடந்தருளிப்
பொன்னாட் டவரும் அணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.
50
Go to top

சென்ற திசையில் சிவனடியார்
சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர்
இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந்
துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார்.
51

பொருவில் பொன்னித் திருநதியின்
கரைவந் தெய்திப் புனிதநீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி
மருங்கு வடபாற் கரையேறித்
திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச்
செம்பொன் மன்றுள் நடம்போற்ற
உருகி மனத்தி னுடன்சென்றார்
ஒழியா அன்பின் வழிவந்தார்.
52

வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.
53

நிலவும் பெருமை எழுநிலைக்கோ
புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப்
புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம்
பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று
ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.
54

அளவில் இன்பப் பெருங்கூத்தர்
ஆட எடுத்த கழல்காட்ட
உளமும் புலமும் ஒருவழிச்சென்று
உருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு
தன்றி மன்றிற் கழல்வைத்
வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு
அளித்த கருணை வழுத்தினார்.
55
Go to top

ஆரா ஆசை ஆனந்தக்
கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழறிற் றறிவார் தாம்.
56

தம்பி ரானார்க் கெதிர்நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும்
ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி
தாமும் எதிரே கேட்பித்தார்.
57

ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும்பேற்றின்
கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியுங் காலமெலாம்
நின்று தொழுது புறம்போந்து
மாடத் திருமா ளிகைவீதி
வணங்கிப் புறத்து வைகினார்.
58

பரவுந் தில்லை வட்டத்துப்
பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட
ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி
இன்பம் சிறக்கும் அந்நாளில்.
59

ஆடும் பெருமான் பாடல்கேட்
டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச்
செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண
நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால்
திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
60
Go to top

அறிவின் எல்லை யாயதிருத்
தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப்
பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந்து
அருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல
வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.
61

வழியில் குழியில் செழுவயலில்
மதகில் மலர்வா விகளில்மடுச்
சுழியில் தரளந் திரைசொரியுந்
துறைநீர்ப் பொன்னி கடந்தேறி
விழியில் திகழுந் திருநுதலார்
விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக்
கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக்
கழனி யாரூர் கண்ணுற்றார்.
62

நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
63

வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
64

முன்பு பணிந்த பெருமாளைத்
தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந்
தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி
ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி
யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.
65
Go to top

ஆன நிலைமை கண்டதிருத்
தொண்டர் அளவில் மகிழ்வெய்த
மானச் சேரர் பெருமானார்
தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பால் சேரமான்
தோழர் என்று பார்பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி
வேந்தர்க் காகி விளங்கியதால்.
66

ஒருவர் ஒருவ ரிற்கலந்த
வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ
தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக்
கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேர மான்தோழர்.
67

சென்று தேவா சிரியனைமுன்
இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்

உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி
வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
68

தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்
தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும்
அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பி ரானார் தாம்கொண்டார்.
69

அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
70
Go to top

சோதி மணிமா ளிகையின்கண்
சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி
நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து
நிறைபூ சனைகள் முறையளித்தார்.
71

தாண்டு புரவிச் சேரர்குலப்
பெருமாள் தமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையார்
அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு
விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க்
கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.
72

அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல்
அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார்
புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவை யார்வந் தறிவித்தார்.
73

சேரர் பெருமான் எழுந்தருளி
அமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய்
தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில்
இரண்டு படியா ஏற்றுதலும்.
74

ஆண்ட நம்பி பெருமாளை
யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி
மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்
கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.
75
Go to top

ஒக்க அமுது செய்தருள
வுயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்
தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையுந்
தாம்வேண் டியவா றினிதருந்தத்
தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத்
தூயவிருந்தின் கடன்முடித்தார்.
76

பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுது மேந்தினார்.
77

ஆய சிறப்பிற் பூசனைகள்
அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு
முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக்
கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய்
நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
78

மலைநாட் டரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப்
பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார்
அருளே போற்றி யுடனமர்ந்தார்.
79

செல்வத் திருவா ரூர்மேவும்
செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி
வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து
வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந்
தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.
80
Go to top

இவ்வா றொழுகும் நாளின்கண்
இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார்
மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.
81

சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று
மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந்
தாமும் உடனே செலத்துணிந்தார்.
82

இருவர் திருவுள் ளமும்இசைந்த
பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி
யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம்
வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு
போது வார்கள் உடன்போத.
83

சேவித் தணையும் பரிசனங்கள்
சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
புகுந்து காரோ ணம்பணிந்தார்.
84

திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்
சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார் வச்செந் தமிழ்மாலை
சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப்
பெருக்கா றுலவு சடைமுடியார்
இடங்கள் பலவும் பணிந்தேத்தி
அருட்கா ரணர்தந் திருமறைக்கா
டணைந்தார் சேர ராரூரர்.
85
Go to top

முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி.
86

நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித்
தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
87

எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்.
88

கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.
89

அங்கு வைகிப் பணிந்தருளால்
போவார் அகன்சோ ணாட்டரனார்
தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப்
பாண்டி நாடு தனைச்சார்ந்து
திங்கண் முடியார் திருப்புத்தூர்
இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு
மங்குல் தவழும் மணிமாட
மதுரை மூதூர் வந்தணைந்தார்.
90
Go to top

சேரமான் தோழரும்அச்
சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை
ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய
வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித்
தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
91

தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட
அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய்
மணிக்கோயில் வந்தணைந்தார்.
92

திருவால வாய்அமர்ந்த
செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி
வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத்
தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து
பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
93

படியேறு புகழ்ச்சேரர்
பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக
அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன்
எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார்
முன்பரவிக் களிகூர்ந்தார்.
94

செம்பியனா ருடன்செழியர்
தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய
நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின்
றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற்
குறைவறுத்தார் பஞ்சவனார்.
95
Go to top

உளம்மகிழக் கும்பிட்டங்
குறையுநாள் உதியருடன்
கிளரொளிப்பூண் வன்றொண்டர்
தாமிருந்த இடங்கெழுமி
வளவனார் மீனவனார்
வளம்பெருக மற்றவரோ
டளவளா வியவிருப்பால்
அமர்ந்துகலந் தினிதிருந்தார்.
96

அந்நாளில் மதுரைநகர்
மருங்கரனார் அமர்பதிகள்
பொன்னாரம் மணிமார்பிற்
புரவலர்மூ வரும்போதச்
செந்நாவின் முனைப்பாடித்
திருநாடர் சென்றிறைஞ்சிச்
சொன்மாலை களுஞ்சாத்தித்
தொழத்திருப்பூ வணத்தணைவார்.
97

நீடுதிருப் பூவணத்துக்
கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர்
மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத்
திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ
தோவென்று பணிந்தணைவார்.
98

சென்றுதிருப் பூவணத்துத்
தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர்
முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி
99

அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச்
சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு
முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால
வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி
இன்புற்றங் கமர்கின்றார்.
100
Go to top

செஞ்சடையார் திருவாப்ப
னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர்
நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால்
இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை
மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
101

பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.
102

கோத்திட்டை எனஎடுத்துக்
கோதில்திருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி
முக்கோக்கள் தம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை
இன்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார்
தங்குதிருப் பரங்குன்றில்.
103

இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.
104

அந்நாட்டுத் திருப்பதிகள்
பலவும்அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன்
நம்பிதாம் எழுந்தருள
மின்னாட்டும் பன்மணிப்பூண்
வேந்தர்இரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன
செய்தமைப்பார் தமைவிடுத்தார்.
105
Go to top

இருபெருவேந் தரும்இயல்பின்
மீண்டதற்பின் எழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர்
புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும்
பணிந்துபோய் மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்கும்
குற்றாலஞ் சென்றடைந்தார்.
106

குற்றாலத் தினிதமர்ந்த
கூத்தர்குரை கழல்வணங்கிச்
சொல்தாம மலர்புனைந்து
குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார்
பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத்
திருநெல்வே லியையணைந்தார்.
107

நெல்வேலி நீற்றழகர்
தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
திருவிரா மேச்சரத்து.
108

மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.
109

திருஇரா மேச்சரத்துச்
செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்
பரிவினால் தொழுதகன்று
பரமர்பதி பிறபணிந்து
பெருவிமா னத்திமையோர்
வணங்குபெருந் திருச்சுழியல்
மருவினார் வன்றொண்டர்
மலைவேந்த ருடன்கூட.
110
Go to top

திருச்சுழியல் இடங்கொண்ட
செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியின் வீழாமைக்
111

அங்கணரைப் பணிந்துறையும்
ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண்
காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந்
திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி.
112

கானப்பேர் யாம்இருப்ப
தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவும்
மாமுடியார் தாம்அகல
ஞானப்பே ராளர்உணர்ந்
ததிசயித்து நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார்
அருளிருந்த பரிசென்பார்.
113

கண்டருளும் படிகழறிற்
114

காளையார் தமைக்கண்டு
தொழப்பெறுவ தென்றென்று
தாளைநா ளும்பரவத்
தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண
வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன
முனைப்பாடி வளநாடர்.
115
Go to top

மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.
116

ஆராத காதலுட
னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர்
சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக்
கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப்
பொருப்பர்திருப் புனவாயில்.
117

புனவாயிற் பதியமர்ந்த
புனிதரா லயம்புக்கு
மனவார்வம் உறச்சித்த
நீநினைஎன் னொடுஎன்று
வினவான தமிழ்பாடி
வீழ்ந்திறைஞ்சி யப்பதியில்
சினவானை யுரித்தணிந்தார்
திருப்பாதந் தொழுதிருந்தார்.
118

திருப்புனவா யிற்பதியில்
அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல
பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று
புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம்
பாம்பணிமா நகர்தன்னில்.
119

பாதாளீச் சரமிறைஞ்சி
அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல்
வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார்
மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந்
திருவாரூர் சென்றணைந்தார்.
120
Go to top

திருநாவ லூர்வேந்தர்
121

வாசமலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி
நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம்
எடுத்தேத்தி எழுந்தருளால்
பாசவினைத் தொடக்கறுப்பார்
பயில்கோயில் பணிந்தணைவார்.
122

பரவையார் மாளிகையில்
பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார
விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க
வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு
பொன்னணிமா ளிகைபுகுந்தார்.
123

பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.
124

மங்கலமாம் பூசனைகள்
பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார்
தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம்
புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா
நல்விளையாட் டினைநயந்தார்.
125
Go to top

நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.
126

விரவு காதல் மீக்கூர
மேவு நாள்கள் பலசெல்லக்
கரவில் ஈகைக் கேரளனார்
தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்
பரவை யார்தங் கொழுநனார்
தம்மைப் பனிந்து கொண்டணைவான்
இரவும் பகலுந் தொழுதிரக்க
இசைந்தார் அவரும் எழுந்தருள.
127

நங்கை பரவை யார்உள்ளத்
திசைவால் நம்பி யெழுந்தருளத்
திங்கள் முடியார் திருவருளைப்
பரவிச் சேர மான்பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்
கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி இருவரும்போய்ப்
புக்கார் புனிதர் பூங்கோயில்.
128

தம்பி ரானைத் தொழுதருளால்
போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர்
நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற்
றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர்
தொழுது மேல்பாற் செல்கின்றார்.
129

பொன்பரப்பி மணிவரன்றிப்
புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த
கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல்
விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன்
பணிந்துபுறத் தணைந்தார்கள்.
130
Go to top

வடகரையில் திருவையா
றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக
வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங்
காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத்
தொழுவதற்கு நினைவுற்றார்.
131

ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.
132

ஆறு பெருகி இருகரையும்
பொருது விசும்பில் எழுவதுபோல்
வேறு நாவாய் ஓடங்கள்
மீது செல்லா வகைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி
நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார்
தரியா தழைத்துப் பாடுவார்.
133

பரவும் பரிசொன் றெடுத்தருளிப்
பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா
றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர்
நின்று தொழுது பாடுதலும்.
134

மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.
135
Go to top

விண்ணின் முட்டும் பெருக்காறு
மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர்
வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக்
கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங்
கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.
136

நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.
137

செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்
சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின்
இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார்.
138

அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.
139

ஆய செயலின் அதிசயத்தைக்
கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம்
பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார்
திருவா ரூரர் சேரருடன்.
140
Go to top

கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.
141

பதிகள் எங்குந் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.
142

திசைகள் தோறும் வரும்பெருமை
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங்
கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்
மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்
தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.
143

கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வே றலங்கரித்து.
144

நகர மாந்தர் எதிர்கொள்ள
நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி
ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார்
சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு
புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.
145
Go to top

இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.
146

தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
147

நல்ல தோழர் நம்பெருமாள்
தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.
148

பூவும் பொரியும் பொற்றுகளும்
பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே
புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவுந் துதிகள் எம்மருங்கும்
பயில வந்து மாளிகையின்
மாவுங் களிறும் நெருங்குமணி
வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.
149

கழறிற் றறியுந் திருவடியும்
கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற் பொலியுந் திருநெடுந்தோள்
முனைவர் தம்மை யுடன்கொண்டு
விழவிற் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்கா சனத்தின்மிசை
நிழல்திக் கொளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர்நின்று.
150
Go to top

செம்பொற் கரக வாசநீர்
தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி
யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது
தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங்
கெல்லாம் இசைய வேண்டுமென.
151

பெருமாள் வேண்ட எதிர்மறுக்க
மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
செய்த வெல்லாங் கண்டிருந்தார்
அருமா னங்கொள் பூசனைகள்
அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமா மதிவெண் குடைவேந்த
ருடனே அமுது செய்துவந்தார்.
152

சேர ருடனே திருவமுது
செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான்
மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள்
இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச்
சாத்தி மிக்க தமக்காக்கி.
153

பாடல் ஆட ல் இன்னியங்கள்
பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
154

செண்டாடும் தொழின்மகிழ்வும்
சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடும் மலர்வாவி
மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத்
தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக்
காவலனார் காதல்செய்நாள்.
155
Go to top

நாவலர்தம் பெருமானும்
திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள்
மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை
மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார்.
156

திருவாரூர் தனைநினைந்து
சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன்
வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக
வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார்
பிரிவாற்றார் பின்செல்வார்.
157

வன்றொண்டர் முன்எய்தி
மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன்
என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே
யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி
அரசாளும் எனமொழிந்தார்.
158

ஆரூரர் மொழிந்தருள
அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி
எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித்
திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல்
நீக்கவும்அஞ் சுவன்என்றார்.
159

மன்னவனார் அதுமொழிய
வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம்
எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர்
நீரிருப்பீர் எனவிறைஞ்ச.
160
Go to top

மற்றவரும் பணிந்திசைந்தே
மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில்
இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா
னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை
ஏற்றிவரப் பண்ணும்என.
161

ஆங்கவரும் அன்றுவரை
ஆயமா கியதனங்கள்
ஓங்கியபொன் நவமணிகள்
ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு
வருக்கமுதல் நலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேல்
தலம்மலியக் கொண்டணைந்தார்.
162

மற்றவற்றின் பரப்பெல்லாம்
வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு
முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத்
தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி
விடையளித்தார் வன்றொண்டர்.
163

ஆரூரர் அவர்தமக்கு
விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு
கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன்
பூண்டிவழிச் செல்கின்றார்.
164

திருமுருகன் பூண்டிஅயல்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ அதுஅறியோம்.
165
Go to top

வென்றிமிகு பூதங்கள்
வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங்
கவரஅருள் வைத்தருள
அன்றினார் புரமெரித்தார்
அருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியில்
இருபாலும் செயிர்த்தெழுந்து.
166

வில்வாங்கி அலகம்பு
விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம்
எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங்
கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார்
ஆரூரர் மருங்கணைந்தார்.
167

ஆரூரர் தம்பால்அவ்
வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார்
அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன்
பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார்
கோயிலைநா டிப்புக்கார்.
168

அங்கணர்தங் கோயிலினை
அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு
வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு
வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந்
திருமுன்பு சென்றணைந்தார்.
169

உருகியஅன் பொடுகைகள்
குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன்
வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு
வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.
170
Go to top

பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.
171

கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.
172

நாவலர்மன் னவர்அருளால்
விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின்
ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை
மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி
அரசுரிமை புரிந்திருந்தார்.
173

இந்நிலைமை யுதியர்பிரான்
எம்பிரான் வன்றொண்டர்
பொன்னிவள நாடகன்று
மகோதையினின் மேற்புகுந்து
மன்னுதிருக் கயிலையினின்
மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந்
திருத்தொழில்பின் மொழிகின்றாம்.
174

மலைமலிந்த திருநாட்டு
மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச்
சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட
நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக்
கணநாதர் திறமுரைப்பாம்.
175
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000