தாண்டவம் புரிய வல்ல
தம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலார்
எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்டசீர் அரசின் பாதம்
அடைந்தவர் அறியா முன்னே
காண்டகு காதல் கூரக்
கலந்தஅன் பினராய் உள்ளார்.
|
1
|
களவுபொய் காமம் கோபம்
முதலிய குற்றங் காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை
நிலையினார் மனைப்பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள்
ஆவொடு மேதி மற்றும்
உளவெலாம் அரசின் நாமஞ்
சாற்றும்அவ் வொழுகல் ஆற்றார்.
|
2
|
வடிவுதாங் காணா ராயும்
மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார்
அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து
முறைமையால் வாழும் நாளில்.
|
3
|
பொருப்பரையன் மடப்பிடியி
னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
மருங்குவழி மேவுவார்.
|
4
|
அளவில்சனஞ் செலவொழியா
வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய்
உறுவேனில் பரிவகற்றிக்
குளநிறைந்த நீர்த்தடம்போல்
குளிர்தூங்கும் பரப்பினதாய்
வளமருவும் நிழல்தருதண்
ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்.
|
5
|
| Go to top |
வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்.
|
6
|
இப்பந்தர் இப்பெயரிட்
டிங்கமைத்தார் யார்என்றார்க்
கப்பந்தர் அறிந்தார்கள்
ஆண்டஅர செனும்பெயரால்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள
சாலைகுளங் காவென்றார்.
|
7
|
என்றுரைக்க அரசுகேட்
டிதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கிஅவர்
எவ்விடத்தார் எனவினவத்
துன்றியநூல் மார்பரும்இத்
தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழுததுவும்
சேய்த்தன்று நணித்தென்றார்.
|
8
|
அங்ககன்று முனிவரும்போய்
அப்பூதி அடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன்
சார்வாக உள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர்
செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் தமர்ஒருவர்
எனக்கேட்டு நண்ணினார்.
|
9
|
கடிதணைந்து வாகீசர்
கழல்பணிய மற்றவர்தம்
அடிபணியா முன்பணியும்
அரசின்எதிர் அந்தணனார்
முடிவில்தவஞ் செய்தேன்கொல் முன்பொழியுங் கருணைபுரி
வடிவுடையீர் என்மனையில்
வந்தருளிற் றென்என்றார்.
|
10
|
| Go to top |
ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்.
|
11
|
ஆறணியுஞ் சடைமுடியார்
அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
கோதில்மொழிக் கொற்றவனார்.
|
12
|
நின்றமறை யோர்கேளா
நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர்
நாணில்அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூட்சி
திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தந் திருப்பேரோ
வேறொருபேர் எனவெகுள்வார்.
|
13
|
நம்மையுடை யவர்கழற்கீழ்
நயந்ததிருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பதென
என்போல்வா ருந்தெளியச்
செம்மைபுரி திருநாவுக்
கரசர்திருப் பெயரெழுத
வெம்மைமொழி யான்கேட்க
விளம்பினீர் எனவிளம்பி.
|
14
|
பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்.
|
15
|
| Go to top |
திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்.
|
16
|
அரசறிய உரைசெய்ய
அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசைகுவியக்
கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம்
உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ்
சரணகம லம்பூண்டார்.
|
17
|
மற்றவரை எதிர்வணங்கி
வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம்
பெற்றார்போல் அருமறையோர்
முற்றவுளங் களிகூர
முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ
ஓடினார் பாடினார்.
|
18
|
மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்.
|
19
|
மனைவியா ருடன்மக்கள்
மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரைஉள் ளெழுந்தருளு
வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்.
|
20
|
| Go to top |
ஆசனத்தில் பூசனைகள்
அமர்வித்து விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக்
காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசம்உய்ய வந்தவரைத்
திருவமுது செய்விக்கும்
நேசம்உற விண்ணப்பம்
செயஅவரும் அதுநேர்ந்தார்.
|
21
|
செய்தவர் இசைந்த போது
திருமனை யாரை நோக்கி
எய்திய பேறு நம்பால்
இருந்தவா றென்னே என்று
மைதிகழ் மிடற்றி னான்தன்
அருளினால் வந்த தென்றே
உய்தும்என் றுவந்து கொண்டு
திருவமு தாக்கல் உற்றார்.
|
22
|
தூயநற் கறிக ளான
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி
அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு
வாஎன விரைந்து விட்டார்.
|
23
|
நல்லதாய் தந்தை ஏவ
நான்இது செயப்பெற் றேன்என்
றொல்லையில் அணைந்து தோட்டத்
துள்புக்குப் பெரிய வாழை
மல்லவங் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள ராஒன்
றல்லல்உற் றழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற் றன்றே.
|
24
|
கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்.
|
25
|
| Go to top |
பொருந்திய விடவே கத்தில்
போதுவான் வேகம் முந்த
வருந்தியே அணையும் போழ்து
மாசுணங் கவர்ந்த தியார்க்கும்
அருந்தவர் அமுது செய்யத்
தாழ்க்கயான் அறையேன் என்று
திருந்திய கருத்தி னோடுஞ்
செழுமனை சென்று புக்கான்.
|
26
|
எரிவிடம் முறையே ஏறித்
தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும்
மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி
விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார்
பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.
|
27
|
தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.
|
28
|
பெறலரும் புதல்வன் தன்னைப்
பாயினுள் பெய்து மூடிப்
புறமனை முன்றிற் பாங்கோர்
புடையினில் மறைத்து வைத்தே
அறஇது தெரியா வண்ணம்
அமுதுசெய் விப்போம் என்று
விறலுடைத் தொண்ட னார்பால்
விருப்பொடு விரைந்து வந்தார்.
|
29
|
கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு.
|
30
|
| Go to top |
அருந்தவர் எழுந்து செய்ய
அடியிணை விளக்கி வேறோர்
திருந்தும்ஆ சனத்தில் ஏறிப்
பரிகலந் திருத்து முன்னர்
இருந்துவெண் ணீறு சாத்தி
இயல்புடை இருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப்
புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
|
31
|
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்.
|
32
|
அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.
|
33
|
பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
குற்றது பகர்ந்தார் அன்றே.
|
34
|
நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்.
|
35
|
| Go to top |
தீவிடம் நீங்க உய்ந்த
திருமறை யவர்தஞ் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி
விரைந்தெழு வானைப் போன்று
சேவுகைத் தவர்ஆட் கொண்ட
திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு
புனிதநீ றளித்தார் அன்றே.
|
36
|
பிரிவுறும் ஆவி பெற்ற
பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார்
நின்றஅப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர்
அமுதுசெய் தருளு தற்குச்
சிறிதிடை யூறு செய்தான்
இவனென்று சிந்தை நொந்தார்.
|
37
|
ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்.
|
38
|
புகழ்ந்தகோ மயத்து நீரால்
பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்தவான் சுதையும் போக்கிச்
சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்தஅக் கதலி நீண்ட
குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய்
வலம்பட மன்னு வித்தார்.
|
39
|
திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்.
|
40
|
| Go to top |
மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
கமுதுசெய் தருளி னாரே.
|
41
|
மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்.
|
42
|
அப்பூதி யடிக ளார்தம்
அடிமையைச் சிறப்பித் தான்ற
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை
விரும்புசொன் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர்
எல்லையில் அன்பால் என்றும்
செப்பூதி யங்கைக் கொண்டார்
திருநாவுக் கரசர் பாதம்.
|
43
|
இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே
|
44
|
மான்மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
திருத்தொழில் நவிலல் உற்றேன்.
|
45
|
| Go to top |