சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.200   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையில்
மன்ன முன்னாள் வரைகிழிய
ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் பகைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
1

செம்மை வெண்ணீற் றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம் பியநெறியார்
நான்கு வேதம் முறைபயின்றார்
தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந்
தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
2

கோதில் மான்தோல் புரிமுந்நூல்
குலவும் மார்பில் குழைக்குடுமி
ஓது கிடைசூழ் சிறுவர்களும்
உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்குந் தாரகையும்
மதியும் போலப் புணர்மடங்கள்
மீது முழங்கு முகிலொதுங்க
வேத ஒலிகள் முழங்குவன.
3

யாகம் நிலவும் சாலைதொறும்
மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வருமாலும்
அயனும் ஊரும் படர்சிறைப்புள்
மாகம் இகந்து வந்திருக்கும்
சேக்கை யெனவும் வானவர்கோன்
நாகம் அணையுங் கந்தெனவும்
நாட்டும் யூப ஈட்டமுள.
4

தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும்
ஓம தேனுச் செல்வனவும்
தாம்பா டியசா மங்கணிப்போர்
சமிதை யிடக்கொண் டணைவனவும்
பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி
மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம்பான் மையினில் விளங்குவன
அணிநீள் மறுகு பலவுமுள.
5
Go to top

வாழ்பொற் பதிமற் றதன்மருங்கு
மண்ணித் திரைகள் வயல்வரம்பின்
தாழ்வில் தரளஞ் சொரிகுலைப்பால்
சமைத்த யாகத் தடஞ்சாலை
சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள
தொடங்கு சடங்கு முடித்தேறும்
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள்
விண்ணோர் ஏறும் விமானங்கள்.
6

மடையில் கழுநீர் செழுநீர்சூழ்
வயலில் சாலிக் கதிர்க்கற்றை
புடையில் சுரும்பு மிடைகமுகு
புனலில் பரம்பு பூம்பாளை
அடையில் பயிலுந் தாமரைநீள்
அலரில் துயிலும் கயல்கள்வழி
நடையில் படர்மென் கொடிமௌவல்
நனையில் திகழுஞ் சினைக்காஞ்சி.
7

சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக் கியவளவர்
போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்
வருந்தொல் மரபின் முடிசூட்டுந்
தன்மை நிலவு பதிஐந்தின்
ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.
8

பண்ணின் பயனாம் நல்லிசையும்
பாலின் பயனாம் இன்சுவையும்
கண்ணின் பயனாம் பெருகொளியும்
கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும்
விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும்போல்
மண்ணின் பயனாம் அப்பதியின்
வளத்தின் பெருமை வரம்புடைத்தோ.
9

பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு காசிபகோத்
திரத்துத் தலைமை சால்மரபில்
அருமை மணியும் அளித்ததுவே
நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும் ஒருவடிவாம்
எச்ச தத்தன் உளனானான்.
10
Go to top

மற்றை மறையோன் திருமனைவி
வாய்ந்த மரபின் வந்துதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத்
தொழிலாள் உலகில் துணைப்புதல்வற்
பெற்று விளங்குந் தவஞ்செய்தாள்
பெறும்பே றெல்லைப் பயன்பெறுவாள்
பற்றை யெறியும் பற்றுவரச்
சார்பா யுள்ள பவித்திரையாம்.
11

நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக
ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.
12

ஐந்து வருடம் அவர்க்கணைய
அங்கம் ஆறும் உடன்நிறைந்த
சந்த மறைகள் உட்படமுன்
தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை யறிவின் தொடர்ச்சியினால்
முகைக்கும் மலரின் வாசம்போல்
சிந்தை மலர உடன்மலரும்
செவ்வி யுணர்வு சிறந்ததால்.
13

நிகழும் முறைமை ஆண்டேழும்
நிரம்பும் பருவம் வந்தெய்தப்
புகழும் பெருமை உபநயனப்
பொருவில் சடங்கு முடித்தறிவின்
இகழு நெறிய அல்லாத
எல்லாம் இயைந்த வெனினும்தம்
திகழு மரபின் ஓதுவிக்கும்
செய்கை பயந்தார் செய்வித்தார்.
14

குலவு மறையும் பலகலையும்
கொளுத்து வதன்முன் கொண்டமைந்த
நிலவும் உணர்வின் திறங்கண்டு
நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கெல்லை
ஆடுங் கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில்
தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
15
Go to top

நடமே புரியும் சேவடியார் நம்மை
உடையார் எனும்மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின்கண்
ஒழியா தூறும் வழியன்பின்
கடனே இயல்பாய் முயற்றிவருங்
காதல் மேன்மேல் எழுங்கருத்தின்
திடநேர் நிற்குஞ் செம்மலார்
திகழு நாளில் ஆங்கொருநாள்.
16

ஓது கிடையின் உடன்போவார்
ஊர்ஆன் நிரையின் உடன்புக்க
போது மற்றங் கொருபுனிற்றா
போற்றும் அவன்மேன் மருப்போச்ச
யாது மொன்றுங் கூசாதே
யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப
மீது சென்று மிகும்பரிவால்
வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.
17

பாவுங் கலைகள் ஆகமநூல்
பரப்பின் தொகுதிப் பான்மையினால்
மேவும் பெருமை அருமறைகள்
மூல மாக விளங்குலகில்
யாவுந் தெளிந்த பொருளின்நிலையே
எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி
அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.
18

தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லா மென்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்துந் தாமுடைய
அல்ல வோநல் ஆனினங்கள்.

19

ஆய சிறப்பி னால்பெற்ற
அன்றே மன்றுள் நடம்புரியும்
நாய னார்க்கு வளர்மதியும்
நதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேய வேணித் திருமுடிமேல்
விரும்பி யாடி அருளுதற்குத்
தூய திருமஞ் சனம்ஐந்தும்
அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
20
Go to top

சீலம் உடைய கோக்குலங்கள்
சிறக்குந் தகைமைத் தேவருடன்
கால முழுதும் உலகனைத்தும்
காக்கும் முதற்கா ரணராகும்
நீல கண்டர் செய்யசடை
நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதா ரஞ்செய்யும்
மூர்த்தம் என்றால் முடிவென்னோ.
21

உள்ளுந் தகைமை இனிப்பிறவே
றுளவே உழைமான் மறிக்கன்று
துள்ளுங் கரத்தார் அணிபணியின்
சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம்
பிராட்டி யுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர்
குலமன் றோஇச் சுரபிகுலம்.
22

என்றின் னனவே பலவும்நினைந்
திதத்தின் வழியே மேய்த்திந்தக்
கன்று பயில்ஆன் நிரைகாக்கும்
இதன்மே லில்லை கடனிதுவே
மன்றுள் ஆடுஞ் சேவடிகள்
வழுத்து நெறியா வதும்என்று
நின்ற ஆயன் தனைநோக்கி
நிரைமேய்ப் பொழிக நீயென்பார்.
23

யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும்
தானேர் இறைஞ்சி விட்டகன்றான்
தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம்
அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு
வானே யென்ன நிரைகாக்க
வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
24

கோலும் கயிறும் கொண்டுகுழைக்
குடுமி அலையக் குலவுமான்
தோலும் நூலுஞ் சிறுமார்பில்
துவள அரைக்கோ வணஞ்சுடரப்
பாலும் பயனும் பெருகவரும்
பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவைவேண்டுந்
தனையும் மிசையுந் தலைச்சென்று.
25
Go to top

பதவு காலங் களின்மேய்த்தும்
பறித்தும் அளித்தும் பரிவகற்றி
இதமுண் துறையுள் நற்றண்ணீர்
ஊட்டி அச்சம் எதிர்நீக்கி
அதர்நல் லனமுன் செலநீழல்
அமர்வித் தமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாமல்
உடையோர் இல்லந் தொறுமுய்த்தார்.
26

மண்ணிக் கரையின் வளர்புறவின்
மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித் திலநீர் மருதத்தண்
டலைசூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச்
சமிதை யுடன்மேல் எரிகொண்டு
நண்ணிக் கங்குல் முன்புகுதும்
நன்னாள் பலவாம் அந்நாளில்.
27

ஆய நிரையின் குலமெல்லாம்
அழகின் விளங்கி மிகப்பல்கி
மேய இனிய புல்லுணவும்
விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி
எய்த இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடிபெருகிச்
சொரிய முலைகள் சுரந்தனவால்.
28

பூணுந் தொழில்வேள் விச்சடங்கு
புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவில் முன்னையினும்
அனேக மடங்கு கறப்பனவாய்ப்
பேணுந் தகுதி அன்பால்இப்
பிரம சாரி மேய்த்ததற்பின்
மாணுந் திறத்த வானவென
மறையோர் எல்லாம் மனமகிழ்ந்தார்.
29

அனைத்துத் திறத்தும் ஆனினங்கள்
அணைந்த மகிழ்ச்சி அளவின்றி
மனைக்கண் கன்று பிரிந்தாலும்
மருவுஞ் சிறிய மறைக்கன்று
தனைக்கண் டருகு சார்ந்துருகித்
தாயாந் தன்மை நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக்கண்கள்
கறவா மேபால் பொழிந்தனவால்.
30
Go to top

தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
31

அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணிமணற்
புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும் வகுத்தமைத்தார்.
32

ஆத்தி மலரும் செழுந்தளிரும்
முதலா அருகு வளர்புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து
புனிதர் சடிலத் திருமுடிமேல்
சாத்த லாகுந் திருப்பள்ளித்
தாமம் பலவுந் தாங்கொய்து
கோத்த இலைப்பூங் கூடையினில்
கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார்.
33

நல்ல நவகும் பங்கள்பெற
நாடிக் கொண்டு நாணற்பூங்
கொல்லை இடத்துங் குறைமறைவும்
மேவுங் கோக்கள் உடன்கூட
ஒல்லை யணைந்து பாலாக்கள்
ஒன்றுக் கொருகா லாகவெதிர்
செல்ல அவையுங் கனைத்துமுலை
தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
34

கொண்டு மடுத்த குடம்நிறையக்
கொணர்ந்து விரும்புங் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல்ஆ
லயத்துள் அவைமுன் தாபித்து
வண்டு மருவுந் திருப்பள்ளித்
தாமங் கொண்டு வரன்முறையே
பண்டைப் பரிவால் அருச்சித்துப்
பாலின் திருமஞ் சனமாட்டி.
35
Go to top

மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.
36

பெருமை பிறங்குஞ் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளை யார்தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான்
உவக்கும் பூசை உறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றில்
தேடா தனஅன் பினில்நிரப்பி
வரும்அந் நெறியே அர்ச்சனைசெய்
தருளி வணங்கி மகிழ்கின்றார்.
37

இறையோன் அடிக்கீழ் மறையவனார்
எடுத்துத் திருமஞ் சனமாட்டும்
நிறைபூ சனைக்குக் குடங்கள்பால்
நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள்
குறைபா டின்றி மடிபெருகக்
குவிந்த முலைப்பால் குறைவின்றி
மறையோர் மனையின் முன்புதரும்
வளங்கள் பொலிய வைகுமால்.
38

செயலிப் படியே பலநாளும்
சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற் றதுவே திருவிளையாட்
டாக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்றிதனைக்
கண்டித் திறத்தை யறியாத
அயல்மற் றொருவன் அப்பதியில்
அந்த ணாளர்க் கறிவித்தான்.
39

அச்சொற் கேட்ட அருமறையோர்
ஆயன் அறியான் என்றவற்றின்
இச்சை வழியே யான்மேய்ப்பேன்
என்றெம் பசுக்கள் தமைக்கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன்
பொல்லாங் குரைக்க அவன்தாதை
எச்ச தத்தன் தனையழைமின்
என்றார் அவையில் இருந்தார்கள்.
40
Go to top

ஆங்கு மருங்கு நின்றார்கள்
அவ்வந் தணன்தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை
அழைத்துக் கொண்டு வரப்பகர்ந்த
ஓங்கு சபையோர் அவனைப்பார்த்
தூர்ஆன் நிரைமேய்த் துன்மகன்செய்
தீங்கு தன்னைக் கேளென்று
புகுந்த பரிசு செப்புவார்.
41

அந்தண் மறையோர் ஆகுதிக்குக்
கறக்கும் பசுக்க ளானவெலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால்
திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல்
கந்தம் மலிபூம் புனல்மண்ணி
மணலில் கறந்து பாலுகுத்து
வந்த பரிசே செய்கின்றான்
என்றான் என்று வாய்மொழிந்தார்.
42

மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.
43

அந்த ணாளர் தமைவிடைகொண்
டந்தி தொழுது மனைபுகுந்து
வந்த பழியொன் றெனநினைந்தே
மகனார் தமக்கு வாய்நேரான்
இந்த நிலைமை அறிவேனென்
றிரவு கழிந்து நிரைமேய்க்க
மைந்த னார்தாம் போயினபின்
மறைந்து சென்றான் மறைமுதியோன்.
44

சென்ற மறையோன் திருமகனார்
சிறந்த ஊர்ஆன் நிரைகொடுபோய்
மன்றல் மருவும் புறவின்கண்
மேய்ப்பார் மண்ணி மணற்குறையில்
அன்று திரளக் கொடுசென்ற
அதனை யறிந்து மறைந்தப்பால்
நின்ற குரவின் மிசையேறி
நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.
45
Go to top

அன்பு புரியும் பிரமசா
ரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணற்கோயில்
ஆக்கி முகைமென் மலர்கொய்து
பின்பு வரும்ஆன் முலைபொழிபால்
பெருகுங் குடங்கள் பேணுமிடந்
தன்பாற் கொணர்ந்து தாபித்துப்
பிறவும் வேண்டு வனசமைத்தார்.
46

நின்ற விதியின் விளையாட்டால்
நிறைந்த அரும்பூ சனைதொடங்கி
ஒன்றும் உள்ளத் துண்மையினால்
உடைய நாதன் திருமுடிமேல்
மன்றல் விரவுந் திருப்பள்ளித்
தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறைதீம் பாற்குடங்கள்
எடுத்து நயப்புற் றாட்டுதலும்.
47

பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவுஞ் சடைமுடியார்
அருளாம் என்ன அறிவழிந்து
குரவு மேவும் முதுமறையோன்
கோபம் மேவும் படிகண்டான்.
48

கண்ட போதே விரைந்திழிந்து
கடிது சென்று கைத்தண்டு
கொண்டு மகனார் திருமுதுகில்
புடைத்துக் கொடிதாம் மொழிகூறத்
தொண்டு புரியுஞ் சிறியபெருந்
தோன்ற லார்தம் பெருமான்மேல்
மண்டு காதல் அருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.
49

மேலாம் பெரியோர் பலகாலும்
வெகுண்டோன் அடிக்க வேறுணரார்
பாலார் திருமஞ் சனமாட்டும்
பணியிற் சலியா ததுகண்டு
மாலா மறையோன் மிகச்செயிர்த்து
வைத்த திருமஞ் சனக்குடப்பால்
காலா லிடறிச் சிந்தினான் கையாற்
கடைமைத் தலைநின்றான்.
50
Go to top

சிந்தும் பொழுதில் அதுநோக்கும்
சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை யெனவே அறிந்தவன்தன்
தாள்கள் சிந்துந் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்தகோல்
எடுத்தார்க் கதுவே முறைமையினால்
வந்து மழுவா யிடஎறிந்தார்
மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.
51

எறிந்த அதுவே அர்ச்சனையில்
இடையூ றகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும்
துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூ றகற்றினராய்
முன்போல் அருச்சித் திடப்புகலும்
செறிந்த சடைநீள் முடியாரும்
தேவி யோடும் விடையேறி.
52

பூத கணங்கள் புடைசூழப்
புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்தேத்த
விமல மூர்த்தி திருவுள்ளம்
காதல் கூர வெளிப்படலும்
கண்டு தொழுது மனங்களித்துப்
பாத மலர்கள் மேல்விழுந்தார்
பத்தி முதிர்ந்த பாலகனார்.
53

தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம்பொருட்டால்
ஈன்ற தாதை விழவெறிந்தாய்
அடுத்த தாதை இனியுனக்கு
நாம்என் றருள்செய் தணைத்தருளி
மடுத்த கருணை யால்தடவி
உச்சி மோந்து மகிழ்ந்தருள.
54

செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி யெழுந்த திருவருளின்
மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்க அமரர் துதிசெய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
55
Go to top

அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
56

எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப
எங்கும் மலர்மா ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர்
பாடி ஆடிக் களிபயிலச்
சொல்லார் மறைகள் துதிசெய்யச்
சூழ்பல் லியங்கள் எழச்சைவ
நல்லா றோங்க நாயகமாம்
நங்கள் பெருமான் தொழுதணைந்தார்.
57

ஞாலம் அறியப் பிழைபுரிந்து
நம்பர் அருளால் நான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப்
பிள்ளை யார்தந் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு
குற்றம் நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான் முதுமறையோன்.
58

வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.
59

நேசம் நிறைந்த உள்ளத்தால்
நீலம் நிறைந்த மணிகண்டத்
தீசன் அடியார் பெருமையினை
எல்லா உயிரும் தொழவெடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பணித்த திருவாளன்
வாச மலர்மென் கழல்வணங்க
வந்த பிறப்பை வணங்குவாம்
60
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000