மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம், நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்- கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும் இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
1
|
கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன் சீபருப்பதம் துருத்தி மாற்பேறு குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும் சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ? | |
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள் தலைமகன், திருக்கழிப்பாலை நிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்- கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை இளையவர் மதிமுகத்து உலவும் இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
2
|
அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ? | |
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் காலன் ஆம், எனது உரை தனது உரை ஆக, கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும் ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
3
|
பால வடிவோடும் விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும் ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ? | |
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல், விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத் தாங்கிய விமலன்- குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள, இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
4
|
உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர் திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன் கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும் மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும் வளமையான கொடிகள் வளர்ந்த வில்வமரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ! | |
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்- கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடுஞ்சாரல் ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
5
|
தேன் அமுது ஆகியன போல இனிப்பவனாய் தெய்வம் தானேயானவன் . தீ நீர் வாயு வான் மண் ஆகிய ஐம்பூத வடிவினன் . தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் . உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன் . மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறை களை யுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக் களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ ? | |
| Go to top |
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான், மற்று ஓர் தனம் இலான், எனது உரை தனது உரை ஆக, தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்- புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து, ஈண்டி வந்து, எங்கும் இனம் எலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
6
|
தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற்பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடுபேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங் களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன்மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ? | |
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து உளான், நித்தமா ஏத்தும் ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன்- பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை வண்டு இனம் பாடும் ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
7
|
நீர் தீ ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறிவருபவன். அத்தகையோன் மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ? | |
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில் ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல், ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
8
|
நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன் கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும் யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ? | |
கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா, உளம் அழை எனது உரை தனது உரை ஆக, ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன்- வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு மணி அணி மாலை, இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
9
|
ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும் நான்முகனும் கீழே அகழ்ந்து சென்று அடியையும் மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன் வளமான மழை போல மூங்கிலில் தேங்கிய பனி நீர் காற்றால் பொழிவதும் மலைப் பாம்புகள் ஊர்வதும் அழகிய மணிகள்மாலை போல நிறைந்து தோன்றுவதும் மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ? | |
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கியப்பேய்கள் பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான்- கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக வண்டொடு தேன் இனம் முரலும், இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
|
10
|
ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும் சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன் பெரிதான அரும்புகளை உடைய முல்லையும் பொன்போன்று மலரும் வேங்கையும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும் தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும் நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ? | |
| Go to top |
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்- எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார், போய் வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று, வீடு எளிது ஆமே.
|
11
|
மணம் நிரம்பியதும் கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள். | |