வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி, தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா, கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த, ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.
|
1
|
வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன்போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில் எரி யேந்தி ஆடும் இறைவர் உலகமக்கள் உணர்ந்து போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார். | |
சூலப் படை ஒன்று ஏந்தி, இரவில் சுடுகாடு இடம் ஆக, கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே, பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார் ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே.
|
2
|
முத்தலைச்சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும் குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் முழங்கவும் பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதிதேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார். | |
கண் கொள் நுதலார், கறை கொள் மிடற்றார், கரியின் உரி-தோலார், விண் கொள் மதி சேர் சடையார், விடை ஆர் கொடியார், வெண் நீறு பெண் கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான், எமை ஆள்வார் எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே.
|
3
|
கண் ஒன்றைக்கொண்ட நுதலினரும் விடக்கறை பொருந்திய கண்டத்தினரும் யானையின் தோலை உரித்துப் போர்த்தவரும் வானில் விளங்கும் மதியைச்சூடிய சடையினரும் விடைக் கொடியினரும் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும் சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார். | |
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும், குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ, பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும் இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
|
4
|
சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய்மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ பறை குழல் இவற்றோடு காலிற்கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார். | |
நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார், கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ, பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரி ஆடும் எம்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே.
|
5
|
நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர் இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற்பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப்பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர். | |
| Go to top |
நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும் ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும் சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை- ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
|
6
|
உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலைபாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடியகணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர்தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர். | |
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும் எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
|
7
|
உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளிவிளங்கும் இறைவர். வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர். | |
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் நெருக்கி அடர்த்து, நிமலா, போற்றி! என்று நின்று ஏத்த, இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
|
8
|
உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர் எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால்விரலால் நெருக்கி அடர்த்து பின் அவன் `நிமலா போற்றி` என்று ஏத்த இரக்கம் காட்டி அருள்புரிந்தவராவார். | |
வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான் மகளோடும் பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்-ஈங்கோய்மலையாரே.
|
9
|
ஈங்கோய்மலை இறைவர் வரிகளோடு கூடிய புலித் தோலை உடையாகக் கட்டியவர். மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர். தம்திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரிஉருவத்தோடு ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார். | |
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும், மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும், உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி, இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே.
|
10
|
அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம் மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும் பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தித்திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது உமையம்மையாரோடு உடனாய் இண்டை சூடிய சடைமுடியினனாய் இமையோர் தலைவனாய் ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக. | |
| Go to top |
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள், அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன், எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே.
|
11
|
திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர். | |