வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும் ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத் துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும் பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!
|
1
|
வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில் மலர்ந்த தாமரை மலர்களின் விளைந்ததேனை வயிறார உண்டு தன் பெண் வண்டோடு களித்து சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு கொண்டு ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற் சூடியவரும் எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட மார்பினருமாகிய திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு அவரிடம் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக. | |
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே! செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும் வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!
|
2
|
எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீக்குதற்கரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி பத மந்திரங்களை ஓதிப்பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும் முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக. | |
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக் கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை, செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும் பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!
|
3
|
பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில் முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே! சண்பக மரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின் பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக. | |
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால் பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர் சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும் ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!
|
4
|
உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையே! `காதல் மிக்கூர்தலால் அணிகலன் களைப் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கப்பெற்று உன் அடியவள் வருந்துகிறாள்` என்று வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக. | |
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்! தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும் நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!
|
5
|
அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழு மையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக. | |
| Go to top |
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச, வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள் தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!
|
6
|
வளமான சேற்றிடை முளைத்து மலர்ந்த தாமரை மலர்மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரையாக வீச அரச போகத்தில் வீற்றிருக்கும் அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களாக. | |
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை, அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்; தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும் கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!
|
7
|
வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத்துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக. | |
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி, ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே! தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர் கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!
|
8
|
பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக. | |
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்; பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்; சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும் வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!
|
9
|
அழகமைந்த வாயாகியஅலகினை உடைய நாகண வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால் இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில்வல்ல மறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற் பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக. | |
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால் முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம் துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம் பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!
|
10
|
அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என் பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக. | |
| Go to top |
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம் கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத் தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.
|
11
|
தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலை போன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினையவல்லவர் சிவலோகம் சேர்வர். | |