பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு, செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்; அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.
|
1
|
திருப்பேணு பெருந்துறை இறைவர் படம் பொருந் திய பெரிய நாகம் பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர் வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று `ஐயம் இடுக` என்று கேட்டு ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும் தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர். | |
மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய, சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.
|
2
|
குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார் அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய் ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன் சக்தி ஆகிய இருவருமாய் அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார். | |
செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி, கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன, பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.
|
3
|
யானையின் கை போன்ற நீண்ட வாழைக்குலையில் பழுத்த பழங்களிலும் காய்த்த குலைகளிலும் கமுக மரங்களின் பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர் கொன்றைப்பூமாலை கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர். | |
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி, நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி, மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.
|
4
|
நிலம் வானம் நீர் தீ காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய் ஐந்து புலங்களை வென்றவராய் பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும் இறைவர் திருவெண்ணீறு அணிந்து நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய் மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும் அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர். | |
பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய, துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்; அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல் மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.
|
5
|
அரிசிலாற்றின் அலைகள் மோதும் கரையில் அமைந்ததும் நீல மணிபோலும் நிறம் அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய பேணுபெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர். | |
| Go to top |
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை, விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர், பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம் பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.
|
6
|
திருப்பேணுபெருந்துறை இறைவர் தம்மை மதியாதவரான அசுரர்களின் முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில்வன்மை காட்டிய எந்தையாராவர். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர். இசை நலம் கெழுமிய பாடல்களோடு ஆடி மகிழும் பசுபதியாய ஈசனும் ஆவர். ஒரு பாகம் பெண்ணுமாய் ஒரு பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியுடைய தலைவராவர். | |
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட, வேதம் ஆறு அங்கம் பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல், பெரியோர் ஏத்தும் பெருமான்- தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே.
|
7
|
தழைத்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின் கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள் கூடி விளங்கும் திருப்பேணுபெருந்துறை இறைவர் விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்கண் தம்வினைகெட நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதிவரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவர். | |
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும் முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.
|
8
|
ஆண் அன்னம் கன்னிமையுடைய பெண் அன்னத் தோடு ஆடியும் கூடியும் மகிழும் பேணு பெருந்துறை இறைவர் அழகிய கடற்கரைச் சோலைகளும் வெண்மையான கடல் அலைகளும் சூழ்ந்துள்ளதும் நாற்புறங்களிலும் கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை மலையைக் கால் விரலால் ஊன்றி அவனுடைய சிறந்த வலிமையுடைய மார்பும் தோள்களும் வலிமை குன்றுமாறு செய்து பின் அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய மூர்த்தியாவார். | |
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின் உள் வாய் அல்லிமேல் உறைவானும், உணர்வு அரியான்; உமைகேள்வன்- முள் வாய் தாளின் தாமரைமொட்டு இன்முகம் மலர, கயல் பாய, கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.
|
9
|
முட்களையுடைய தண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால் இயற்கை மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர் கொக்கு வடிவங்கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும் நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும் தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர். | |
குண்டும் தேரும், கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்! தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே.
|
10
|
இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும் தேரர்களாகிய புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய் வம்பு செய்யும் இயல்பினராய் வீண் தவம் புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை விரும்புமின். யோகதண்டம் பாம்பு தலைமாலை சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர் வண்டுகளும் தேனும் நிறைந்து வாழும் பொழில்களும் சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார். | |
| Go to top |
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.
|
11
|
வாயில்களையுடைய மாட வீடுகள் நன்கமைந்த வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும் அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர் எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர். | |