விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும் கழுநீர் குவளை மலரக் கயல் பாயும் கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.
|
1
|
பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்த வரும் மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர் குவளை ஆகியன மலர்ந்து கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும் செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர். | |
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக் கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம் உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.
|
2
|
உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான். | |
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான், காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்- கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.
|
3
|
அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன். | |
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்- தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி, கூடாதன செய்த குரங்கணில் முட்டம் ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.
|
4
|
வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச் சூடிய வனும் வலக் காதில் குழையையும் இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும் நன்றாக அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன் எல்லோரிடத்தும் அன்புடையவன். | |
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி, கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்; குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.
|
5
|
இறையார் வளையாள் என்னும் திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும் நீலகண்டனும் யானையின் தோலை உரித்துப் போர்த்த கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில் முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண் சுடராவான். | |
| Go to top |
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக் குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.
|
6
|
தோகைகளை உடைய ஆண் மயில்கள் தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும் பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில் உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம். | |
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து, தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க, கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து, ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.
|
7
|
சிவபிரான் பொன்னையொத்த கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளான். | |
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.
|
8
|
கரிய மேனியை உடைய அரக்கர் தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப் பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும் அடியவர் கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால் தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர். | |
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும் அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும் குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.
|
9
|
மணம் கமழும் தாமரை மலரில் உறையும் நான் முகனும் திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார் வினைகள் இலராவர். | |
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும், வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்! குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.
|
10
|
தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தர் தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக் கொள்ளாதீர். மின்னல்திரள் போலத் திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும் அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச் சென்று வணங்குவதே நம் கடமையாகும். | |
| Go to top |
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.
|
11
|
கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும். | |