சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவேணுபுரம் (சீர்காழி) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://sivaya.org/audio/1.009 Vandaar kuzhal.mp3  https://www.youtube.com/watch?v=Ju46thqI25s   Add audio link Add Audio

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

1
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமையம்மை தன்னிற் பிரியாதிருக்கத் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும் பிறையணிந்த திருமுடியை உடையவனும் ஆகிய பெருமானது ஊர் தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் வெண்மையான பெரிய மாடங்கள் விண்ணைத் தாங்குவனபோல உயர்ந்து விளங்கும் வேணுபுரமாகும்.

படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,
கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர்
புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.

2
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில் புரிவோனும் அவற்றின் முடிந்த பயனாய வீட்டின்ப வடிவாய் விளங்குவோனும் பருமை நுண்மை இவற்றிற்கோர் எல்லையாக இருப்பவனும் வேதங்களை ஓதும் கணங்களை உடையோனும் வஞ்சகமான பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது ஊர் பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கும் கமுகம் பாளையின் மணத்தோடு புன்னை மலர்களின் மணத்தைத் தாங்கி மெல்லெனப் பெருமிதத்தோடு வரும் தென்றல் காற்று மிகுந்து வீசும் வேணுபுரம் ஆகும்.

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.

3
தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மதநீர் ஒழுகும் யானையை அம்முனிவர்கள் வெருவுமாறு உரித்துப் போர்த்தவரும் படத்தோடு கூடிய பாம்பைக் குழையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானது பழமையான ஊர் நடனத்துக்குரிய சதிகளோடு கூடிய நடையையும் அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் மேலான விடத்தன்மையோடு கூடிய கண்களையும் உடைய அழகிய மகளிர் பலர் வாழும் வேணுபுரம் ஆகும்.

தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர,
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.

4
தக்கனது தலையை வீரபத்திரக் கடவுளைக் கொண்டு அரியச் செய்து பிழையை உணர்ந்து அவன் வேண்டியபோது அவனுக்கு மிகுதியான வரங்கள் பலவற்றை அளித்தருளிய வானோர் தலைவனாகிய சிவபெருமானது ஊர் மேகங்கள் முழவாக ஒலிக்க நாற்புறமும் மயில்கள் ஆடுவதும் மிகுதியான தேனை வண்டுகள் அருந்தும் வளமுடையதுமான பொழில்கள் சூழ்ந்த வேணுபுரமாகும்.

நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,
தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

5
அன்போடு வழிபடும் நாம் எவ்வுருவில் நினைக்கின்றோமோ அவ்வுருவில் தோன்றி நம்மை ஆட்கொள்பவனும் தன்னை நணுகாதவராகிய அசுரர்களின் வானில் திரிந்த மூன்று புரங்கள் வெந்தழியுமாறு வில்லை வளைத்துக் கணை தொடுத்து எரியூட்டியவனும் ஆகிய சிவபிரானது ஊர் மரங்களில் அமர்ந்த மந்திகள் தேனின் சுவை பொருந்தியனவாய்ப் பழுத்துத் தோன்றிய வாழைப் பழங்களைக் கண்டு அவற்றை உண்ணுதற் பொருட்டு மேல் நோக்கியவாறே தாம் ஏறிப் பறிக்க இயலாத தம் நிலைக்கு வருந்தும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும். வாழை மரத்தில் குரங்கு ஏறாதன்றோ
Go to top

மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.

6
மண்ணுலக மக்களும் விண்ணகத் தேவரும் கண்டு நடுங்கி மிகவும் அஞ்சுமாறு நிலமெல்லாம் நிறைந்த நீர் மூடிக் கடல் ஊழி வெள்ளமாய் ஓங்க அவ்வெள்ளத்திலும் அழியாது உயர்ந்து தோணியாய்த் தோன்றுமாறு செய்த சிவபிரானது ஊர் தண்ணிய மணம் கமழும் தாமரை மலர்கள் சாயுமாறு இளவாளை மீன்கள் வானிடை எழுந்து குதிக்கும் நீர்வளம் சான்ற பெரிய வேணுபுரம் ஆகும்.

மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.

7
மலையரையன் மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிமை சான்ற இராவணனின் தலைகள் தோள்கள் ஆகியவை நெரியுமாறு கால் விரலை ஊன்றிய சிவபிரானது ஊர் ஆறு அங்கங்களோடு வேதங்களின் தொகுதியைக் கற்றுணர்ந்தோர் தம்முள் கூடும் கூட்டத்தில் விலை மதிப்புடைய சொற்களைத் தேர்ந்து பேசும் கல்வி நலம் சான்றவர் வாழும் வேணுபுரம் ஆகும்.

வயம் உண்ட தவமாலும் அடி காணாது அலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்
வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

8
உலகை உண்ட திருமாலும் தன் அடிகளைக் காணாது அலமருமாறு செய்தவனும் மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடைய பிரமனது கிள்ளப்பட்ட தலையோட்டினை ஏந்தியவனுமாகிய சிவபிரானது ஊர்; ஆழ்ந்த நீர் நிலைகளில் வாழும் சங்குகள் கடல் தரும் உப்பங்கழியைவிடுத்துச் செந்நெல் விளைந்த அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரமாகும்.

மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.

9
அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர் கூட்டத்தினரோடு புத்த மதத்தினராகிய தேரர்களும் ஒளி பொருந்திய திருவடிகளை வணங்காமையால் அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய ஆடை தோயும் அல்குலையும் உடுக்கை போன்ற இடையையும் பருத்த தனங்களையும் ஆடவர் மேல் தம் குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும்.

வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.

10
ஞானசம்பந்தரின் ஏதம் இல்லாத இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாடுவார் சிவகதி பெறுவார் என வினை முடிபு கொள்க./n மங்கல ஒலிகள் பலவற்றோடு வேத ஒலியாலும் மிக்குத்தோன்றும் வேணுபுரத்துப் பெருமானின் பாதங்களை மனத்துட் கொண்டு பாடப்பெற்ற ஞானசம்பந்தரின் துன்பந்தரல் இல்லாத இப்பதிகப் பாடல்களை இசையோடு பாடவல்லவர் துயர் நீங்குவர்; முடிவில் சிவகதியைப் பெறுவர்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவேணுபுரம் (சீர்காழி)
1.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்டு ஆர் குழல் அரிவையொடு
Tune - நட்டபாடை   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.017   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிலவும், புனலும், நிறை வாள்
Tune - இந்தளம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்
Tune - காந்தாரம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000