சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவலிதாயம் (பாடி) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு தாயம்மை உடனுறை அருள்மிகு வலிதாயநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://sivaya.org/audio/1.003 pathorodu pala.mp3  https://www.youtube.com/watch?v=txUbmVG11Xo   Add audio link Add Audio

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

1
வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினைமுடிபு கொள்க. சிவனடியார்கள் விளங்குகின்ற அழகிய மலர்களை அகங்கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலகமக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில்,
மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.

2
படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும் பொய்யாகப் பலியேற்பது போலப் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும் நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையமாட்டா.

ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,
செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில்
வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.

3
வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும் இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன் நுண்ணியன் அருகிலிருப்பவன் செந்நிற மேனியன் நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும் வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.

ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒரு பூதப்படை சூழ;
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.

4
அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி உழலும் எம்பெருமான் உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

5
வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம் தீர்தல் எளிதன்று.
Go to top

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,
கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.

6
வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக் காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும் சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான் மகிழ்ந்துறையும் திருவலிதாயத்தைத்தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி,
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.

7
வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால் தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுலகெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி,
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.

8
உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துயரம் கெடும் என வினை முடிபு காண்க . திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும் மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் .

பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த,
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.

9
வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும் மிகப் பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும் திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத்தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.

ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்!
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

10
வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர் . மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர் . குற்றம் தீர அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர் .
Go to top

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.

11
வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால் தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார் குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலிதாயம் (பாடி)
1.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பத்தரோடு பலரும் பொலிய மலர்
Tune - நட்டபாடை   (திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர் தாயம்மை)

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group