பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே. |
1
|
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்டமூட நிலநின்றுதம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த விதுவொப்பதில்லை யிருபாலுநின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடுபாத மறியாமைநின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே. |
2
|
காலமு நாள்களூழி படையாமுனேக வுருவாகிமூவ ருருவில்
சாலவு மாகிமிக்க சமயங்களாறி னுருவாகிநின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழுமுண்டு குறளாயொராலி னிலைமேல்
பாலனு மாயவற்கொர் பரமாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே. |
3
|
நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலைகுன்றொ டுலகேழுமெங்கு நலியச்
சூடிய கையராகி யிமையோர்கணங்கள் துதியோதிநின்று தொழலும்
ஓடிய தாரகன்ற னுடலம்பிளந்தும் ஒழியாதகோப மொழிய
ஆடிய மாநடத்தெ மனலாடிபாத மவையாநமக்கொர் சரணே. |
4
|
நிலைவலி யின்றியெங்கு நிலனோடுவிண்ணு நிதனஞ்செய்தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி யரியோடுதேவ ரரணம்புகத்த னருளால்
கொலைநலி வாளிமூள வரவங்கைநாணு மனல்பாயநீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்தவள்ள லவனாநமக்கொர் சரணே. |
5
|
| Go to top |
நீலநன் மேனிசெங்கண் வளைவெள்ளெயிற்ற னெரிகேச னேடிவருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யு மளவின்கண்வந்து குறுகிப்
பாலனை யோடவோடப் பயமெய்துவித்த வுயிர்வவ்வுபாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலுமண்டர் தொழுதோதுசூடு கழலே. |
6
|
உயர்தவ மிக்கதக்க னுயர்வேள்விதன்னி லவியுண்ணவந்த விமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனுமுற்ற படிகண்டுநின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமையாதி கமியென்றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணனெந்தை கழல்கண்டுகொள்கை கடனே. |
7
|
நலமலி மங்கைநங்கை விளையாடியோடி நயனத்தலங்கள் கரமா
உலகினை யேழுமுற்று மிருண்மூடமூட விருளோடநெற்றி யொருகண்
அலர்தர வஞ்சிமற்றை நயனங்கைவிட்டு மடவாளிறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல வலர்வித்தமுக்க ணவனாநமக்கொர் சரணே. |
8
|
கழைபடு காடுதென்றல் குயில்கூவவஞ்சு கணையோனணைந்து புகலும்
மழைவடி வண்ணனெண்ணி மகவோனைவிட்ட மலரானதொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ விமையோர்கணங்க ளெரியென்றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணனெந்தை சரணே. |
9
|
தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே. |
10
|
| Go to top |
கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேலுன்வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் மொழிவானைநன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள்
நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத நினைவுற்றதென்றன் மனனே. |
11
|