பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே. |
1
|
முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
இயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
2
|
தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
3
|
பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. |
4
|
ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. |
5
|
| Go to top |
தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. |
6
|
தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே |
7
|
சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
8
|
சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே. |
9
|
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம்
மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. |
10
|
| Go to top |
பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில்
மங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும்
எங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே. |
11
|