மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள் விளங்கவே துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர் தொன்மூதூர் அன்னம் படியும் புனலா ரரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.
|
1
|
மேவா வசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் ஏவா ரெரிவெங் கணையா லெய்தா னெய்துமூர் நாவா னாத னாம மோதி நாடோறும் பூவா னீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.
|
2
|
பல்லார் தலைசேர் மாலை சூடிப் பாம்பும்பூண் டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக் கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால் பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப் புனிதரே.
|
3
|
வரியேர் வளையா ளரிவை யஞ்ச வருகின்ற கரியே ருரிவை போர்த்த கடவுள் கருதுமூர் அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.
|
4
|
என்போ டரவ மேனத் தெயிறோ டெழிலாமை மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர் அன்போ டுருகு மடியார்க் கன்ப ரமருமூர் பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.
|
5
|
| Go to top |
வள்ளி முலைதோய் குமரன் றாதை வான்றோயும் வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் தெள்ளி வருநீ ரரிசிற் றென்பால் சிறைவண்டும் புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
|
6
|
நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி னீர்மையான் சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர் அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
|
7
|
இத்தே ரேக விம்மலை பேர்ப்ப னென்றேந்தும் பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப் பாதந்தான் வைத்தா ரருள்செய் வரதன் மருவும் மூரான புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
|
8
|
முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு அடிதேட ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா னூர்போலும் கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
|
9
|
கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு மெய்யல்ல பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா வென்பார்க் கையுறவின்றி யழகாமே.
|
10
|
| Go to top |
நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன் பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட புத்தூர்மேல் செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள் அறவன் கழல்சேர்ந் தன்போ டின்ப மடைவாரே.
|
11
|