சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
சிவவாக்கியர் பாடல்
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய

சரியை விலக்கல்

1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே  (ஓம்)

2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)

இதுவுமது

3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே      (ஓம்)

யோக நிலை

4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.   (ஓம்)

விராட் சொரூபம்

5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே          (ஓம்)

தெய்வ சொரூபம்

6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே           (ஓம்)

தேகநிலை

7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே              (ஓம்)

அட்சர நிலை

8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே          (ஓம்)

இதுவுமது

9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே      (ஓம்)

ஞானநிலை

10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை              (ஓம்)

ஞானம்

11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே         (ஓம்)

அட்சர நிலை

12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே   (ஓம்)

பிரணவம்

13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே           (ஓம்)    
 
பஞ்சாட்சர மகிமை

14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
 நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
 நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய  உண்மையை நன்குரை செய்நாதனே         (ஓம்)

கடவுளின் உண்மை கூறல்

15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே  (ஓம்)

இராம நாம மகிமை

16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே            (ஓம்)

அத்துவிதம்

17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே  (ஓம்)

அம்பலம்

18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே      (ஓம்)

பஞ்சாட்சரம்

19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே     (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

20. ஓம்நம சிவாயமே  உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே  உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே  உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே  உட்கலந்து  நிற்குமே      (ஓம்)


Back to top

This page was last modified on Thu, 09 May 2024 05:44:51 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

sivavaakiyar paadal