துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
துடிகொள் நோய்களோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
துறைகளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே
உடல்செய் கோர பாழ்வயிற்றை
நிதமும் ஊணினால் உயர்த்தி
உயிரி னீடு யோக சித்தி பெறலாமே
உருவிலாத பாழில் வெட்ட
வெளியிலாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
கடிது உலாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க்
களமுற ஆனை தேர்நுறுக்கி
தலைகள் ஆறு நாலு பெற்ற
அவனை வாளியால் அடு அத்தன்மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவதாக ஆடு நிர்த்த மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே.
துடிதுடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றிப் போய், இளமையாக இருந்த மேனியில் கபமும் கோழையும் மிகுந்து, இருமலும், காச இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி, இல்லறம், துறவறம் என்ற வகைப்படும் இந்த வாழ்வை விட்டு, உலகிலுள்ள சாத்திர நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி, சுகத்தைத் தரும் சுய அனுபவம் அடைந்து மகிழாமல், உடலை வளர்க்கும் கோரமான பாழும் வயிற்றுக்கு நாள்தோறும் உணவு வகைகளைத் தந்து உடலைக் கொழுக்கச் செய்து, வெறும் ஆயுளை நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ? உருவம் கடந்த பாழ்வெளியில் ஆகாயமாகிய வெட்டவெளியில் இசையுடன் ஆடுகின்ற நடனனே, உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ? வேகமாகத் தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன் அங்கதனும் நிரம்ப மலைகளைக் கடலின் மீது போட்டுக் கட்டிய அணைவழியாக பகைவனது ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும், தேர்ப்படையையும் தூளாக்கி, பத்துத் தலைகள் கொண்ட ராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் ராமனின் மருகனே, வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரின் தலைகளில் உள்ள மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற, (துடிக் கூத்து) நடனம் ஆடிய மயிலின் மீதமர்ந்த வீரனே, முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்) வீற்றிருக்கும் வேல் முருகனே, தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 1316 thalam %E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88 thiru name %E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D