போதில் இருந்து விடாச் சதுர் வேத(ம்) மொழிந்தவனால் பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
போது உயர் செம் தழலாப் பெரு வான(ம்) நிறைந்த விடாப் புகழாளன் அரும் சிவ கீர்த்தியன்
நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குரு நாதன் எனும்படி போற்றிட
ஆன பதங்களை நாக் கருதிடவே என் ஆசை எ(ண்)ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே
காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின்
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவு(ம்) மருங்கு அதனால்
செறி குழை ஓலை சாதனம் என்று உரையாப் பரிதாபம் எனும்படி வாய்த் தடுமாறி மனம் தளராத் தனி திரிவோனே
சாகரம் அன்று எரியாக் கொடு சூரர் உகும்படியாத் திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே.
தாமரைப் பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு அரிதான வகையில், தக்க சமயத்தில் (அவர்கள் இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன் உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு, அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும் வகையில் (உன்னைப்) போற்றி செய்ய, இருந்த உனது திருவடிகளை எனது நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? காதை நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும் கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின் இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின் கருமை நிறைந்த கூந்தலால், மலை போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால், நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து, மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே, சமுத்திரம் அன்று எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற, வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே.
போதில் இருந்து விடாச் சதுர் வேத(ம்) மொழிந்தவனால் பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான ... தாமரைப் பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு அரிதான வகையில், போது உயர் செம் தழலாப் பெரு வான(ம்) நிறைந்த விடாப் புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் ... தக்க சமயத்தில் (அவர்கள் இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன் நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குரு நாதன் எனும்படி போற்றிட ... உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு, அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும் வகையில் (உன்னைப்) போற்றி செய்ய, ஆன பதங்களை நாக் கருதிடவே என் ஆசை எ(ண்)ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே ... இருந்த உனது திருவடிகளை எனது நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் ... காதை நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும் கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின் இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின் கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவு(ம்) மருங்கு அதனால் ... கருமை நிறைந்த கூந்தலால், மலை போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால், செறி குழை ஓலை சாதனம் என்று உரையாப் பரிதாபம் எனும்படி வாய்த் தடுமாறி மனம் தளராத் தனி திரிவோனே ... நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து, மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே, சாகரம் அன்று எரியாக் கொடு சூரர் உகும்படியாத் திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே. ... சமுத்திரம் அன்று எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற, வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே.