நாலிரண்டு இதழாலே கோலிய
ஞால் அம் முண்டகம் மேலே தான் இள
ஞாயிறு என்று உறு கோலா காலனும் அதின் மேலே
ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்
யோக மந்திர மூலாதாரனு(ம்)
நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக
மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)
நூல் அறிந்த மணீ மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக
வீசி நின்று உள தூபா தீப
விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய்
ஆல கந்தரி மோடா மோடி
குமாரி பிங்கலை நானா தேசி
அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி அம்பிகை ஞாதா ஆனவர்
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலி த்ரி
சூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூல் ஆய்வாள் சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
ஆறு இதழ்த் தாமரையால் வகுக்கப்பட்ட, தொங்கிப் பொருந்தி உள்ள அந்தத் தாமரையின் மேல் உள்ள (சுவாதிஷ்டானம் என்னும்) ஆதார நிலையில், உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள, ஆடம்பரமான பிரமனும், அந்த ஆதாரத்தின் மேல் நிலையில் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவருமாகிய திருமாலும், யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும், (இம்மூவரும்) தேடி நிற்கும், ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடு நிலையில் வீற்றிருக்க, இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும், சாஸ்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும், மேன்மை வாய்ந்த ஒளி கோடிக் கணக்காய் விளங்கும் (உனது) இடமாகக் கொண்டு, வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதனே, வீர குரு மூர்த்தியே, எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக. விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை, மூப்பு இல்லாதவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள், ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள், துர்க்கைத் தாய், ஆதி நாயகி, அம்பிகை, எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி, காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள், கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணி, காம சாஸ்திரம் கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள், சக்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள், அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவர்களின் பெருமாளே.
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே ... ஆறு இதழ்த் தாமரையால் வகுக்கப்பட்ட, தொங்கிப் பொருந்தி உள்ள அந்தத் தாமரையின் மேல் உள்ள (சுவாதிஷ்டானம் என்னும்) ஆதார நிலையில், தான் இள ஞாயிறு என்று உறு கோலா காலனும் ... உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள, ஆடம்பரமான பிரமனும், அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும் ... அந்த ஆதாரத்தின் மேல் நிலையில் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவருமாகிய திருமாலும், யோக மந்திர மூலாதாரனு(ம்) ... யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும், நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக ... (இம்மூவரும்) தேடி நிற்கும், ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடு நிலையில் வீற்றிருக்க, மேல் இருந்த கிரீடா பீடமு(ம்) ... இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும், நூல் அறிந்த மணீ மா மாடமும் ... சாஸ்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும், மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக ... மேன்மை வாய்ந்த ஒளி கோடிக் கணக்காய் விளங்கும் (உனது) இடமாகக் கொண்டு, வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய ... வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய் ... வீர பண்டிதனே, வீர குரு மூர்த்தியே, எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக. ஆல கந்தரி மோடா மோடி ... விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை, குமாரி பிங்கலை நானா தேசி ... மூப்பு இல்லாதவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள், அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி ... ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள், மாதா மாதவி ஆதி அம்பிகை ... துர்க்கைத் தாய், ஆதி நாயகி, அம்பிகை, ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி ... எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி, கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி ... காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள், காள கண்டி கபாலி மாலினி கலியாணி ... கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணி, காம தந்திர லீலா லோகினி ... காம சாஸ்திரம் கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள், வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே ... சக்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள், அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் பெருமாளே. ... தேவர்களின் பெருமாளே.