ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை
வேதனைப் படு காமா விகாரனை
ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை
அந்தர்யாமி யோகம் அற்று உழல் ஆசா பசாசனை
மோகம் முற்றிய மோடாதி மோடனை
ஊதியத் தவம் நாடாத கேடனை
அன்றில் ஆதி பாதகக் கொலையே சூழ் கபாடனை
நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியர்க்குள் எலாம் மா துரோகனை
மண்ணின் மீதில் பாடு பட்டு அலை மா கோப லோபனை
வீடு பட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ
ஆதி சற்குண சீலா நமோநம
ஆடகத் திரி சூலா நமோநம
ஆதரித்து அருள் பாலா நமோநம
உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆரணற்கு அரியானே நமோநம
மன்றுள் ஆடும் தோதி தித்தமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோபம் அற்றவர் சாமீ நமோநம
தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம
நாத சற் குரு நாதா நமோநம
ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் தம்பிரானே.
ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை, துன்பப்படுகின்ற விகாரமுடைய காமுகனை, பழி கொண்டு திரியும் அசுத்தமான இழிவு உள்ளவனை, எங்கும் வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும் ஆசையாகிய பேய் போன்றவனை, காம மயக்கம் மிகுந்த மூடர்களுக்குள் தலைமையான மூடனை, பயன் தரக் கூடிய தவத்தைத் தேடாத கேடுடையவனை, அன்றில் பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற வஞ்சகனை, ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை, பாபம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் செய்பவனை, இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெரிய கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை, கெடுதல் பட்டு அழிகின்ற, களித்து வீண் பொழுது போக்குபவனை, உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனாகிய என்னை ஆட்கொள்ளுவது எந்நாளோ? முதல்வனே, சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே, போற்றி, போற்றி, பொன்னாலாகிய, மூன்று தலைகளை உடைய சூலாயுதனே, போற்றி, போற்றி, என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே, போற்றி, போற்றி, கடலில் ஆமை வடிவமாகச் சென்றவராகிய திருமாலுக்கு விருப்பமானவனே, போற்றி, போற்றி, ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி, வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி, அம்பலத்தில் நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே, போற்றி, போற்றி, வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி, துக்க நிலையில் இல்லாதவர் துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி, யம தர்மராஜன் அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே, போற்றி, போற்றி, நாதனே, சற்குரு நாதனே, போற்றி, போற்றி, ஒளியில் பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும் தலைவனே.