வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும் செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும் இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்து இல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல, ஒரு குறிக்கோளுடன் வாழவும், உன் திருவடி மலரினைப் பார்த்து யான் இளைப்பாறவும், வினைவசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை பலவித அலங்காரங்களைச் செய்து துன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு இனிமேல் முடிவு பெறவே முடியாதோ? கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல பாலன் மார்க்கண்டேயனிடம் (யமன்) குறிவைத்துத் தொடரவும், தமது நீண்ட திருவடியை நீட்டி பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த பரமசிவனார் (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக) தமது முடியைத் தாழ்த்தி வணங்க, வஜ்ராயுதனாம் இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க, பொன்னிறமான பிரம்மனை சிறையிலிட்ட ஆய்க்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசனே, கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும், திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்சகிரியையும் பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமாளே.