முகமெ லாநெய் பூசித் தயங்கு நுதலின் மீதி லேபொட் டணிந்து முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர் முதிரு மார பாரத் தனங்கள் மிசையி லாவி யாய்நெக் கழிந்து முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச் செகமெ லாமு லாவிக் கரந்து திருட னாகி யேசற் றுழன்று திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல் தெளியு ஞான மோதிக் கரைந்து சிவபு ராண நூலிற் பயின்று செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும் அகர மாதி யாம க்ஷரங்க ளவனி கால்வி ணாரப் பொடங்கி அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி அமரர் காண வேயத் தமன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே சகல வேத சாமுத் ரியங்கள் சமய மாறு லோகத் ரயங்கள் தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம் தவறி லாம லாளப் பிறந்த தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.
முகம் எ(ல்)லாம் நெய் பூசித் தயங்கு(ம்) நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர்
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி
செகம் எ(ல்)லாம் உலாவிக் கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடிப் பறந்து திரியாமல்
தெளிவு ஞானம் ஓதிக் கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளைப் பரிந்து தர வேணும்
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பு ஒடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் தவறு இ(ல்)லாமல் ஆளப் பிறந்த தமிழ் செய்
மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே.
முகம் முழுமையும் வாசனைத் தைலத்தைப் பூசியும், விளங்கும் நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டும், வாசனை உள்ள பூ மாலையை கூந்தலில் அணிந்து கொண்டும் உள்ள அழகிய மாதர்களின் முற்றினதும் முத்து மாலை அணிந்தனவும் கனத்ததுமான மார்பகங்களில் உயிராய் (உள்ளம்) நெகிழ்ந்து அழிந்து எப்போதும் காம மயக்கத்தால் வசப்பட்டு நான் அலைந்து பொருள் தேடி, உலகம் முழுதும் உலவித் திரிந்தும், (பிறரிடமிருந்து) ஒளித்தும், திருட்டுத் தொழிலனாகி சற்று அலைந்து திமிர்பிடித்து அங்கும் இங்கும் ஓடிப் பறந்து திரியாமல், தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும், சிவ புராண நூல்களில் பயின்றும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும். அகரம் முதலான (51) அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர் இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற் பொருளாக விளங்கி, தேவர்கள் தரிசிக்க (தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே, எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான சம்பந்தனே, பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே.
முகம் எ(ல்)லாம் நெய் பூசித் தயங்கு(ம்) நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் ... முகம் முழுமையும் வாசனைத் தைலத்தைப் பூசியும், விளங்கும் நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டும், வாசனை உள்ள பூ மாலையை கூந்தலில் அணிந்து கொண்டும் உள்ள அழகிய மாதர்களின் முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி ... முற்றினதும் முத்து மாலை அணிந்தனவும் கனத்ததுமான மார்பகங்களில் உயிராய் (உள்ளம்) நெகிழ்ந்து அழிந்து எப்போதும் காம மயக்கத்தால் வசப்பட்டு நான் அலைந்து பொருள் தேடி, செகம் எ(ல்)லாம் உலாவிக் கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடிப் பறந்து திரியாமல் ... உலகம் முழுதும் உலவித் திரிந்தும், (பிறரிடமிருந்து) ஒளித்தும், திருட்டுத் தொழிலனாகி சற்று அலைந்து திமிர்பிடித்து அங்கும் இங்கும் ஓடிப் பறந்து திரியாமல், தெளிவு ஞானம் ஓதிக் கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளைப் பரிந்து தர வேணும் ... தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும், சிவ புராண நூல்களில் பயின்றும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும். அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பு ஒடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி ... அகரம் முதலான (51) அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர் இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற் பொருளாக விளங்கி, அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே ... தேவர்கள் தரிசிக்க (தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே, சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் தவறு இ(ல்)லாமல் ஆளப் பிறந்த தமிழ் செய் ... எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான சம்பந்தனே, மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே. ... பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே.