வஞ்சங்கொண்டும் திட ராவணனும்
பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண்புஞ் சரியாமென வெகுசேனை
வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்தும்
தன் சம்பிரதாயமும் வம்பும் தும்பும் பல பேசியும்
எதிரே கைமிஞ்சு என்றுஞ் சண்டைசெய்போது
குரங்குந் துஞ்சுங்கனல் போல வெகுண்டும்
குன்றுங் கரடார் மரமதும்வீசி
மிண்டும் துங்கங்களினாலெ தகர்ந்து
அங்கம் கம் கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்த நிசாசரர் வகைசேரவும்
சண்டன் தென்றிசை நாடிவிழுந்து
அங்குஞ் சென்று எம தூதர்கள்உந்து உந்து உந்தென்றிடவே
தசை நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென்றுங் குதி போட
உயர்ந்த அம்புங் கொண்டு வெல் மாதவன் மருகோனே
தஞ்சந்தஞ்சம் சிறியேன்மதி கொஞ்சங்கொஞ்சம் துரையே
அருள் தந்து என்று இன்பந்தரு வீடது தருவாயே
சங்கங் கஞ்சங்கயல் சூழ்தடம் எங்கெங்கும் பொங்க
மகாபுநிதம் தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்டவனும், வலிமை வாய்ந்தவனுமான ராவணன், பந்து போல வேகமாய்ச் செல்லும் வலிய குதிரை, தேர், யானை, மற்றும் மேக வரிசைக்கு நிகராக அடுக்கிய அனேகம் காலாட்படைகளுடன், போர்க்களத்துக்கு கூட்டி வந்து, அம்புக் கூட்டங்கள் நிறைந்து எதிர்த்தாலும், தனது சாமர்த்தியப் பெருமைப் பேச்சும், வீண் பேச்சும், இழிவான வார்த்தைகளும் பலவாகப் பேசியும், எதிரில் உள்ள சேனையோடு மிகவும் இடைவிடாது போரிட்ட போது, குரங்குச் சேனைகள் நிலையான நெருப்பைப் போல கோபம் கொண்டு, மலைகளையும், கரடுமுரடான மரங்களையும் பிடுங்கி வீசி, பேர்த்து எடுக்கப்பட்ட மலைப்பாறைகளினாலே நொறுக்கி, அசுரர்களின் உடம்பு, தலை, கரம், மார்பு இவைகளுடன் ஒளிவீசும் மற்ற உடற்பகுதிகளையும் சிதற அடித்து, அசுரர்களின் இனம் முழுவதையும், யமனுடைய தெற்குத் திசையை நாடிச்சென்று விழச்செய்து, அங்கு சென்றும் யம தூதர்கள் அசுரர்களைத் தள்ளு, தள்ளு, தள்ளு என்று கூறும்படியாக மாமிசம், கொழுப்பு மூளை இவற்றை சில பேய்கள் பார்த்தும், உண்டும், டிண்டிண்டென்றும் தாளமுடன் குதித்துக் கூத்தாடவும், சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற ராமனின் (திருமாலின்) மருகனே, அடைக்கலம், அடைக்கலம், சிறியேனுடைய அறிவு மிகக் கொஞ்சம், கொஞ்சம், துரையே, அருள் பாலித்து எப்போது எனக்கு இன்பம் தருகின்ற மோக்ஷ வீட்டைக் கொடுக்கப் போகிறாய்? சங்குகளும், தாமரையும், கயல் மீன்களும் உள்ள குளங்கள் பல இடங்களிலும் பொங்கி நிறைந்திருக்க, மிகுந்த பரிசுத்தம் துலங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே.