மூளும்வினை சேர
மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள்
தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செயா
வஞ்சி யதிபார மோகநினைவான போகஞ்செய்வேன்
அண்டர் தேடஅரிதாய
ஞேயங்களாய்நின்ற
மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற அது உளதாகி
நாளும் அதி வேக கால்கொண்டு
தீமண்ட வாசியன லூடு போயொன்றி
வானின்கண் நாமமதி மீதி லூறுங்கலாஇன்ப அமுதூறல் நாடி
அதன் மீது போய் நின்ற ஆநந்த மேலைவெளி யேறி
நீயின்றி நானின்றி நாடி
இனும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே
காளவிட மூணி
மாதங்கி வேதஞ்சொல் பேதை
நெடு நீலி
பாதங்களால்வந்த காலன்விழ மோது சாமுண்டி
பார் அம்பொடு அனல்வாயு காதிமுதிர் வானமே தங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்குலாமங்கை
காளிநட மாடி
நாளன்பர் தாம்வந்து தொழுமாது
வாளமுழு தாளும் ஓர்தண் துழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின் பி(ன்)னாள்
இன்சொல் வாழுமுமை மாதராள் மைந்தனே
எந்தை யிளையோனே
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று வாழுமயில் வீரனே
செந்தில் வாழ்கின்ற பெருமாளே.
தீயைப் போல் மூண்டு பழைய வினைகள் ஒன்று சேர, அதனால் உயர்ந்து எழும்பிய பஞ்ச பூதங்களின் பற்பலவிதமான மாயங்கள் என் நெஞ்சில் வந்து நன்கு மூடப்பெற்று, பக்திநெறிக்குரிய அறச்செயல் ஏதும் செய்யாமல், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்களின் மீதுள்ள மிகுந்த காமநினைவால் அசுத்த போகத்தை நுகர்கின்ற நான், தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிய பொருளாகிய, மெய்யுணர்வினால் ஆராய்ந்து அறியப்படுகின்றவையாக விளங்கும் முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று, அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி, நாள்தோறும் வெகு வேகமாக எழும் பிராணவாயுவைக் கொண்டு, மூலக்கனல் மண்டி எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த, ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும் அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி, அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில் மீது ஏறி அமர்ந்து, நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத முக்தியை உணர்ந்து, இன்னும் பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில் வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ? அவள் (பாற்கடலில் தோன்றிய) ஆலகால விஷத்தை அருந்தியவள், மதங்க முநிவருக்குப் பெண்ணாக அவதரித்தவள், வேதங்களால் புகழப் பெறுபவள், பெரும் தகைமையை உடைய துர்க்கை, (மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க) வந்த யமன் இறந்து விழுமாறு திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மை, பூமி, நீர், தீ, வாயு, பேரொளி மிகுந்த வானம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் தங்கி அந்தர்யாமியாக விளங்கும் கொடியைப் போன்றவள், ஆநந்த நடனம் ஆடுபவரும், ரிஷப வாகனமாம் நந்திமேல் ஏறுபவருமான சிவபிரானின் இடப்பாகத்தில் இன்பமுடன் குலவி அமரும் மங்கை, பத்ரகாளியாக நின்று சிவதாண்டவத்துக்கு எதிர்த்தாண்டவம் செய்தவள், நாள்தோறும் மெய்யடியார்கள் அவளது சன்னிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப் பெறும் தாயார், சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இந்த உலகம் முழுதையும் ஆள்கின்ற, குளிர்ந்த துளசிமாலையை அணிந்த, ஒளிமயமான ரத்தின மாலையை அணிந்த மார்பினனான, திருமாலின் தங்கை, இனிமையான சொற்களை உடையவளான மாதரசி பார்வதி தேவியின் மைந்தனே, எமது பிதாவாகிய சிவபிரானின் இளைய புதல்வனே, குற்றமற்ற மெய்யடியார்கள் வாழ்கின்ற ஊர்களை நாடிச்சென்று, அவர்களைத் தேடி, பல திருவிளையாடல்களைப் புரிந்து, அத்தலங்களிலேயே நிரந்தரமாகத் தங்கும் மயில் வீரனே, திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
மூளும்வினை சேர ... தீயைப் போல் மூண்டு பழைய வினைகள் ஒன்று சேர, மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் ... அதனால் உயர்ந்து எழும்பிய பஞ்ச பூதங்களின் பற்பலவிதமான மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செயா ... என் நெஞ்சில் வந்து நன்கு மூடப்பெற்று, பக்திநெறிக்குரிய அறச்செயல் ஏதும் செய்யாமல், வஞ்சி யதிபார மோகநினைவான போகஞ்செய்வேன் ... வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்களின் மீதுள்ள மிகுந்த காமநினைவால் அசுத்த போகத்தை நுகர்கின்ற நான், அண்டர் தேடஅரிதாய ... தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிய பொருளாகிய, ஞேயங்களாய்நின்ற ... மெய்யுணர்வினால் ஆராய்ந்து அறியப்படுகின்றவையாக விளங்கும் மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற அது உளதாகி ... முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று, அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி, நாளும் அதி வேக கால்கொண்டு ... நாள்தோறும் வெகு வேகமாக எழும் பிராணவாயுவைக் கொண்டு, தீமண்ட வாசியன லூடு போயொன்றி ... மூலக்கனல் மண்டி எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த, வானின்கண் நாமமதி மீதி லூறுங்கலாஇன்ப அமுதூறல் நாடி ... ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும் அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி, அதன் மீது போய் நின்ற ஆநந்த மேலைவெளி யேறி ... அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில் மீது ஏறி அமர்ந்து, நீயின்றி நானின்றி நாடி ... நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத முக்தியை உணர்ந்து, இனும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே ... இன்னும் பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில் வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ? காளவிட மூணி ... அவள் (பாற்கடலில் தோன்றிய) ஆலகால விஷத்தை அருந்தியவள், மாதங்கி வேதஞ்சொல் பேதை ... மதங்க முநிவருக்குப் பெண்ணாக அவதரித்தவள், வேதங்களால் புகழப் பெறுபவள், நெடு நீலி ... பெரும் தகைமையை உடைய துர்க்கை, பாதங்களால்வந்த காலன்விழ மோது சாமுண்டி ... (மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க) வந்த யமன் இறந்து விழுமாறு திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மை, பார் அம்பொடு அனல்வாயு காதிமுதிர் வானமே தங்கி வாழ்வஞ்சி ... பூமி, நீர், தீ, வாயு, பேரொளி மிகுந்த வானம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் தங்கி அந்தர்யாமியாக விளங்கும் கொடியைப் போன்றவள், ஆடல்விடை யேறி பாகங்குலாமங்கை ... ஆநந்த நடனம் ஆடுபவரும், ரிஷப வாகனமாம் நந்திமேல் ஏறுபவருமான சிவபிரானின் இடப்பாகத்தில் இன்பமுடன் குலவி அமரும் மங்கை, காளிநட மாடி ... பத்ரகாளியாக நின்று சிவதாண்டவத்துக்கு எதிர்த்தாண்டவம் செய்தவள், நாளன்பர் தாம்வந்து தொழுமாது ... நாள்தோறும் மெய்யடியார்கள் அவளது சன்னிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப் பெறும் தாயார், வாளமுழு தாளும் ஓர்தண் துழாய்தங்கு ... சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இந்த உலகம் முழுதையும் ஆள்கின்ற, குளிர்ந்த துளசிமாலையை அணிந்த, சோதிமணி மார்ப மாலின் பி(ன்)னாள் ... ஒளிமயமான ரத்தின மாலையை அணிந்த மார்பினனான, திருமாலின் தங்கை, இன்சொல் வாழுமுமை மாதராள் மைந்தனே ... இனிமையான சொற்களை உடையவளான மாதரசி பார்வதி தேவியின் மைந்தனே, எந்தை யிளையோனே ... எமது பிதாவாகிய சிவபிரானின் இளைய புதல்வனே, மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று ... குற்றமற்ற மெய்யடியார்கள் வாழ்கின்ற ஊர்களை நாடிச்சென்று, தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று வாழுமயில் வீரனே ... அவர்களைத் தேடி, பல திருவிளையாடல்களைப் புரிந்து, அத்தலங்களிலேயே நிரந்தரமாகத் தங்கும் மயில் வீரனே, செந்தில் வாழ்கின்ற பெருமாளே. ... திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.