சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மா கரி பெற்றவன்
வெகு கோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர்க் கவி
சண்ட மாருதம் மற்றுள கவி ராஜப் பங்கி பால சரச்வதி
சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான்
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில பஞ்ச பாதகரைப் புகழ் செயலாமோ
வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு வெருண்டு
மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரிய குமரா
பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி
செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே.
சங்கு வாத்தியம் என்ன, நீண்ட கிரீடம், பொன்னாலாகிய கழல் என்ன, மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக் கொடி என்ன, பல்லக்கு என்ன, குதிரை, யானை என்ன - இவைகளை எல்லாம் உடையவன், பல கோடிக் கணக்கான அழகிய வார்த்தைகளைக் கற்றவன், மந்திர வாதத்தில் வல்லவன், நான்கு வகைக் கவிகளிலும்1 வல்லவன், கொடுங் காற்றைப் போல பேச வல்லவன், மற்றும் பல பேர்கள் உள்ள கவிராஜன் என்ற பட்டத்தை உடையவன், பால சரஸ்வதி என்னும் விருதைப் பெற்றவன், சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த அறிவு நூல்களை எடுத்து ஓத வல்ல புலவன் நான். பழைய இருபத்தொரு வள்ளல்களுக்கு ஒப்பானவன் எதிரே உள்ள நீயும் என்றெல்லாம் கூறி ஐம்பெரும் பாதகங்களைச்2 செய்பவர்களான சிலரை அங்ஙனம் புகழ்கின்ற செயல் ஆகுமோ? விரும்பத் தக்க துதிக்கையை உடைய கஜேந்திரன் என்ற யானை காட்டிடையே ஒரு பொய்கையில் வலிய முதலைக்கு மருட்சி உற்று, ஆதி மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம் போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும் திருமாலின் மருகனே, கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்ட3 கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும் மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே, கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே, செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்4 வீற்றிருக்கும் பெருமாளே.
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை ... சங்கு வாத்தியம் என்ன, நீண்ட கிரீடம், பொன்னாலாகிய கழல் என்ன, மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக் கொடி என்ன, தண்டு மா கரி பெற்றவன் ... பல்லக்கு என்ன, குதிரை, யானை என்ன - இவைகளை எல்லாம் உடையவன், வெகு கோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர்க் கவி ... பல கோடிக் கணக்கான அழகிய வார்த்தைகளைக் கற்றவன், மந்திர வாதத்தில் வல்லவன், நான்கு வகைக் கவிகளிலும்1 வல்லவன், சண்ட மாருதம் மற்றுள கவி ராஜப் பங்கி பால சரச்வதி ... கொடுங் காற்றைப் போல பேச வல்லவன், மற்றும் பல பேர்கள் உள்ள கவிராஜன் என்ற பட்டத்தை உடையவன், பால சரஸ்வதி என்னும் விருதைப் பெற்றவன், சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் ... சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த அறிவு நூல்களை எடுத்து ஓத வல்ல புலவன் நான். பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில பஞ்ச பாதகரைப் புகழ் செயலாமோ ... பழைய இருபத்தொரு வள்ளல்களுக்கு ஒப்பானவன் எதிரே உள்ள நீயும் என்றெல்லாம் கூறி ஐம்பெரும் பாதகங்களைச்2 செய்பவர்களான சிலரை அங்ஙனம் புகழ்கின்ற செயல் ஆகுமோ? வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு வெருண்டு ... விரும்பத் தக்க துதிக்கையை உடைய கஜேந்திரன் என்ற யானை காட்டிடையே ஒரு பொய்கையில் வலிய முதலைக்கு மருட்சி உற்று, மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே ... ஆதி மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம் போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும் திருமாலின் மருகனே, கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரிய குமரா ... கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்ட3 கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும் மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே, பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி ... கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே, செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே. ... செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்4 வீற்றிருக்கும் பெருமாளே.