சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் சங்கட மகிபர்
தொழு ஆக்கினை முடிசூடி தண்டிகை களிறு பரி மேல் தனி வெண் குடை நிழலில் உலவா
கன சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா
திரள் கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம்
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய(ம்) நன்று என மனது மகிழ் பார்த்திபர்
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட
சகுனி கவறால் பொருள் பங்கு உடை அவனி பதி தோற்றிட
அயலே போய்ப் பண்டையில் விதியை நினையாப் பனிரண்டுடை வருஷ முறையாப் பல பண்புடன்
மறைவின் முறையால் திருவருளாலே வஞ்சனை நழுவி நிரை மீட்சியில்
முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில் வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள்
மண் கொள விசையன் விடு தேர்ப் பரி உந்தினன் மருக வயலூரக் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே.
துயரமான சரித்திரத்தைக் கொண்ட பிற நாட்டவர்களும், மந்திரிகளும், இள வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும், துன்ப நிலையில் இருந்த அரசர்களும், தொழுது நிற்கும்படி கட்டளை செலுத்தவல்ல திருமுடியைச் சூடிக் கொண்டு, பல்லக்கு, யானை, குதிரை இவைகளின் மேல் ஏறி வீற்றிருந்து, ஒப்பற்ற வெண்கொற்றக் குடை நிழலில் செல்பவர்களாய், பெருமை தங்கிய, சிறப்புற்ற, செல்வ வாழ்வான மிக்க பாக்கிய நிலையைக் கொண்டவர்களாய், வெண்சாமரங்கள் வீசப்பட, செருக்குடன் பஞ்சணை மெத்தையில் வீற்றிருந்து, நிரம்பிய ஊது கொம்புகள், குழல்கள் முதலான பலவித வாத்தியங்களினின்றும் எழுகின்ற இசை ஒலி பெருக, நறு மணம் கமழும் பெண்களின் விசேஷ நாட்டியங்களை இவை நன்றாயுள்ளன என்று மனம் மகிழும் பேரரசர்கள், படைப்போனாகிய பிரமனது கணக்கில் உட்படுத்தி, யமன் அவர்களைப் படுத்தப் போகின்ற துன்பங்களை அறியவில்லையோ? தருமன் முதலாய பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள, சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால், வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து, பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து, அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன் திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால் கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின், முன்பு தங்களுக்கு இருந்த இல்லற நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத் துரியோதனன்) இணங்காத நாளில், அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில் அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே, தேவர்கள் சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில் உறையும் பெருமாளே.
சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் சங்கட மகிபர் ... துயரமான சரித்திரத்தைக் கொண்ட பிற நாட்டவர்களும், மந்திரிகளும், இள வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும், துன்ப நிலையில் இருந்த அரசர்களும், தொழு ஆக்கினை முடிசூடி தண்டிகை களிறு பரி மேல் தனி வெண் குடை நிழலில் உலவா ... தொழுது நிற்கும்படி கட்டளை செலுத்தவல்ல திருமுடியைச் சூடிக் கொண்டு, பல்லக்கு, யானை, குதிரை இவைகளின் மேல் ஏறி வீற்றிருந்து, ஒப்பற்ற வெண்கொற்றக் குடை நிழலில் செல்பவர்களாய், கன சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய் ... பெருமை தங்கிய, சிறப்புற்ற, செல்வ வாழ்வான மிக்க பாக்கிய நிலையைக் கொண்டவர்களாய், குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா ... வெண்சாமரங்கள் வீசப்பட, செருக்குடன் பஞ்சணை மெத்தையில் வீற்றிருந்து, திரள் கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம் ... நிரம்பிய ஊது கொம்புகள், குழல்கள் முதலான பலவித வாத்தியங்களினின்றும் எழுகின்ற இசை ஒலி பெருக, கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய(ம்) நன்று என மனது மகிழ் பார்த்திபர் ... நறு மணம் கமழும் பெண்களின் விசேஷ நாட்டியங்களை இவை நன்றாயுள்ளன என்று மனம் மகிழும் பேரரசர்கள், கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே ... படைப்போனாகிய பிரமனது கணக்கில் உட்படுத்தி, யமன் அவர்களைப் படுத்தப் போகின்ற துன்பங்களை அறியவில்லையோ? பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட ... தருமன் முதலாய பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள, சகுனி கவறால் பொருள் பங்கு உடை அவனி பதி தோற்றிட ... சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால், அயலே போய்ப் பண்டையில் விதியை நினையாப் பனிரண்டுடை வருஷ முறையாப் பல பண்புடன் ... வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து, பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து, மறைவின் முறையால் திருவருளாலே வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் ... அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன் திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால் கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின், முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில் வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் ... முன்பு தங்களுக்கு இருந்த இல்லற நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத் துரியோதனன்) இணங்காத நாளில், மண் கொள விசையன் விடு தேர்ப் பரி உந்தினன் மருக வயலூரக் குக ... அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில் அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே, வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே. ... தேவர்கள் சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில் உறையும் பெருமாளே.