முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக் கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர்
முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபட(ம்) மொச்சிய பச்சை அகில் மணத் தன பாரம் கட்டி அணைத்து நகநுதி பட்ட கழுத்தில் இறுகிய கைத் தலம் எய்த்து
வசனம் அற்று உயிர் சோரும் கட்ட(ம்) முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ
வெட்டிய கட்கம் முனை கொ(ண்)டு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு விதப் படை வீரா
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா
கிட்டிய பல் கொ(ண்)டு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்ப புரத்தில் அறு முகப் பெருமாளே.
மயக்குவதாகி இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுகின்ற கடைக் கண்ணின் தன்மை இதுவே என்று (காண்போர்) உள்ளத்தைக் கவர்ந்து உறவு முறையைக் கூட்டி வைக்கும் பொது மகளிர்களின், முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடை இறுக்கச் சுற்றியுள்ள, பூசிய அகிலின் நறு மணம் கொண்ட மார்புப் பாரங்களைக் கட்டிப் பிடித்துத் தழுவி, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில் அழுத்தமாக அணைத்த கைகள் சோர்ந்து, பேச்சும் அற்றுப்போய், உயிரும் சோரும்படியான கடினமான புணர்தலின் அனுபவத்தை விட்டு ஒழித்த தூர்த்த காமுகனாகிய எனக்கு, வகைப்பட்ட ஒழுக்க நெறி ஒன்றை (உன் திருவடியை) அன்புடனே தந்து அருள்வாயாக. வெட்ட வல்ல வாளின் முனையைக் கொண்டு (பகைவர்களை) அழித்த குணம் கொண்ட வீரனே, போர்க் களத்தில் வலிமையாளனே, கோபம் கொள்பவனே, பலவிதமான படை வீரனே, வெற்றியைப் பெறுகின்ற வேடர்கள் பெற்ற கொடி போன்ற வள்ளியின் மீது மிகவும் மகிழ்ச்சி கொண்ட பேரறிஞனே, சித்த மூர்த்தியே, வயலூரில் வீற்றிருக்கும் குமரேசனே, (அச்சத்தால்) பற்கள் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள் அளவு கடந்து பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே, (நான் என்னும் ஆணவம்) அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களை விரும்பி திருவருள் பாலிக்கும் மேலானவனே, பசுபதீசுரர் என்னும் நாமம் படைத்த சிவபெருமானுடைய தலமாகிய கெர்ப்ப புரத்தில் (கருவூர் என்னும் ஊரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக் கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் ... மயக்குவதாகி இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுகின்ற கடைக் கண்ணின் தன்மை இதுவே என்று (காண்போர்) உள்ளத்தைக் கவர்ந்து உறவு முறையைக் கூட்டி வைக்கும் பொது மகளிர்களின், முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபட(ம்) மொச்சிய பச்சை அகில் மணத் தன பாரம் கட்டி அணைத்து நகநுதி பட்ட கழுத்தில் இறுகிய கைத் தலம் எய்த்து ... முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடை இறுக்கச் சுற்றியுள்ள, பூசிய அகிலின் நறு மணம் கொண்ட மார்புப் பாரங்களைக் கட்டிப் பிடித்துத் தழுவி, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில் அழுத்தமாக அணைத்த கைகள் சோர்ந்து, வசனம் அற்று உயிர் சோரும் கட்ட(ம்) முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ ... பேச்சும் அற்றுப்போய், உயிரும் சோரும்படியான கடினமான புணர்தலின் அனுபவத்தை விட்டு ஒழித்த தூர்த்த காமுகனாகிய எனக்கு, வகைப்பட்ட ஒழுக்க நெறி ஒன்றை (உன் திருவடியை) அன்புடனே தந்து அருள்வாயாக. வெட்டிய கட்கம் முனை கொ(ண்)டு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு விதப் படை வீரா ... வெட்ட வல்ல வாளின் முனையைக் கொண்டு (பகைவர்களை) அழித்த குணம் கொண்ட வீரனே, போர்க் களத்தில் வலிமையாளனே, கோபம் கொள்பவனே, பலவிதமான படை வீரனே, வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா ... வெற்றியைப் பெறுகின்ற வேடர்கள் பெற்ற கொடி போன்ற வள்ளியின் மீது மிகவும் மகிழ்ச்சி கொண்ட பேரறிஞனே, சித்த மூர்த்தியே, வயலூரில் வீற்றிருக்கும் குமரேசனே, கிட்டிய பல் கொ(ண்)டு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா ... (அச்சத்தால்) பற்கள் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள் அளவு கடந்து பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே, கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்ப புரத்தில் அறு முகப் பெருமாளே. ... (நான் என்னும் ஆணவம்) அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களை விரும்பி திருவருள் பாலிக்கும் மேலானவனே, பசுபதீசுரர் என்னும் நாமம் படைத்த சிவபெருமானுடைய தலமாகிய கெர்ப்ப புரத்தில் (கருவூர் என்னும் ஊரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.