புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும்
புது நில வருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும்
பொரு என இகன்று அகன்ற அங்கும் இங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் புவி இளைஞர் முன் பயின்று
அம் பொனின் கம்பித குழை மோதிக் குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும் படி அமர் புரிந்து
அரும் சங்கடம் சந்ததம் கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர் பால்
குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும் த்ரி வித கரணங்களும் கந்த நின் செம் பதம் குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்பு உறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்று(ம்) பத்திரு தோளும்
தொலைவு இல் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழனி மலையும் பரங் குன்றமும் செந்திலும் துதி செயு(ம்) மெய் அன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி வாழ்வாய்
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறும் தும்பையும் கொன்றையும் கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடைக் குரு நாதா
கன குடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய்
நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே.
(முதல் 9 வரிகள் விலைமாதர் கண்களை வர்ணிக்கின்றன). கடலும், மன்மதனுடைய பாணங்களும், வண்டும், கரிய கயல் மீனும், கெண்டை மீனும், யமனும், தாமரையும், புதிய நிலவை (சந்திரிகையை) உண்ணும் (சகோரப்) பட்சியும், விஷமும், கிரவுஞ்ச மலையைத் தூளாக்கிய (உனது) வேலும் ஒப்பாகும் என்னும்படி, பகை பூண்டதாய், அகன்றதாய், பல திசைகளில் சுழல்வதாய், மத்தியிலும், ஓரத்திலும் சிவந்ததாய், வஞ்சகமான எண்ணத்தை அடக்கியதாய், பூமியில் உள்ள இளைஞர்கள் முன்பு இனிமையை (திறமையுடன்) காட்டி, அழகிய பொன்னால் ஆன, அசைகின்ற குண்டலங்கள் மீது மோதி, ஆரவார நடிப்புடன் (காண்பவரின்) ஐம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப் போர் செய்து, கொடிய வேதனை உண்டாகும்படி எப்போதும் கொடுமை செய்யும் கொடி ஏந்தி உள்ளதும், விஷம் தங்குவதுமான கடைக் கண் பார்வை கொண்ட விலைமாதர்களிடத்தில், விளங்கும் பல வகையான செவ்விய பொருள்களை மீண்டும் மீண்டும் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்த வேளே, உனது செம்மை நிறைந்த திருவடியை அணுகுதற்கு, காலையும் மாலையும் உலகத் தொடர்பு நீங்கி ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ? பூங்கொத்துக்கள் விரிந்த கடப்ப மரத்தின் மலர்களால் ஆகிய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், மலையில் விளையும் பசுமையான சந்தனமும், குங்குமமும், கூட்டப்பட்ட கலவைச் சாந்தும் ஒன்று கூடி நெருங்கிப் பொதிந்துள்ளனவும், எப்போதும் நன்மையே பாலிக்கும் பன்னிரண்டு தோள்களும், அழிவு இல்லாத உனது ஆறு முகங்களையும், உனது பூஜைக்கு உரிய நூல்களையும், மந்திரங்களையும், பழனி மலையையும், திருப்பரங்குன்றத்தையும், திருச்செந்தூரையும் துதி செய்து போற்றுகின்ற மெய் அன்பர்களுடைய மனத்தில் புகுந்தும், வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, கூட்டமான படங்களை உடைய பாம்பும், கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே, சிறப்பு வாய்ந்த குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த காவிரி நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(முதல் 9 வரிகள் விலைமாதர் கண்களை வர்ணிக்கின்றன). புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் ... கடலும், மன்மதனுடைய பாணங்களும், வண்டும், கரிய கயல் மீனும், கெண்டை மீனும், யமனும், தாமரையும், புது நில வருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் ... புதிய நிலவை (சந்திரிகையை) உண்ணும் (சகோரப்) பட்சியும், விஷமும், கிரவுஞ்ச மலையைத் தூளாக்கிய (உனது) வேலும் பொரு என இகன்று அகன்ற அங்கும் இங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் புவி இளைஞர் முன் பயின்று ... ஒப்பாகும் என்னும்படி, பகை பூண்டதாய், அகன்றதாய், பல திசைகளில் சுழல்வதாய், மத்தியிலும், ஓரத்திலும் சிவந்ததாய், வஞ்சகமான எண்ணத்தை அடக்கியதாய், பூமியில் உள்ள இளைஞர்கள் முன்பு இனிமையை (திறமையுடன்) காட்டி, அம் பொனின் கம்பித குழை மோதிக் குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும் படி அமர் புரிந்து ... அழகிய பொன்னால் ஆன, அசைகின்ற குண்டலங்கள் மீது மோதி, ஆரவார நடிப்புடன் (காண்பவரின்) ஐம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப் போர் செய்து, அரும் சங்கடம் சந்ததம் கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர் பால் ... கொடிய வேதனை உண்டாகும்படி எப்போதும் கொடுமை செய்யும் கொடி ஏந்தி உள்ளதும், விஷம் தங்குவதுமான கடைக் கண் பார்வை கொண்ட விலைமாதர்களிடத்தில், குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும் த்ரி வித கரணங்களும் கந்த நின் செம் பதம் குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ ... விளங்கும் பல வகையான செவ்விய பொருள்களை மீண்டும் மீண்டும் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்த வேளே, உனது செம்மை நிறைந்த திருவடியை அணுகுதற்கு, காலையும் மாலையும் உலகத் தொடர்பு நீங்கி ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ? துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்பு உறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்று(ம்) பத்திரு தோளும் ... பூங்கொத்துக்கள் விரிந்த கடப்ப மரத்தின் மலர்களால் ஆகிய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், மலையில் விளையும் பசுமையான சந்தனமும், குங்குமமும், கூட்டப்பட்ட கலவைச் சாந்தும் ஒன்று கூடி நெருங்கிப் பொதிந்துள்ளனவும், எப்போதும் நன்மையே பாலிக்கும் பன்னிரண்டு தோள்களும், தொலைவு இல் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழனி மலையும் பரங் குன்றமும் செந்திலும் துதி செயு(ம்) மெய் அன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி வாழ்வாய் ... அழிவு இல்லாத உனது ஆறு முகங்களையும், உனது பூஜைக்கு உரிய நூல்களையும், மந்திரங்களையும், பழனி மலையையும், திருப்பரங்குன்றத்தையும், திருச்செந்தூரையும் துதி செய்து போற்றுகின்ற மெய் அன்பர்களுடைய மனத்தில் புகுந்தும், வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறும் தும்பையும் கொன்றையும் கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடைக் குரு நாதா ... கூட்டமான படங்களை உடைய பாம்பும், கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே, கன குடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய் ... சிறப்பு வாய்ந்த குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே. ... காவிரி நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.