வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு வாதை வகை செய் கரும் க(ண்)ணும்
எங்கணும் அரிதான வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்) வாயு(ம்)நகை முக வெண் ப(ல்)லு(ம்) நண்புடன் வாரும் இரும் எனும் இன் சொ(ல்)லும்
மிஞ்சிய பனி நீரும் தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையும் அம் கையும்
எவரேனும் தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி காதல் மனைவி பரம்பரை அம்பிகை
ஆதி மலை மகள் மங்கலி பிங்கலை கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் த்ரி அம்பகி மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு கந்த நிரந்தர மேலை வயலை உகந்து உ(ள்)ள(ம்) நின்று அருள் பெருமாளே.
வாளின் நுனியைக் காட்டிலும், விஷத்தைக் காட்டிலும், கொடிய யம ராஜனுடைய தொழிலைக் காட்டிலும், அம்பைக் காட்டிலும் பெரிய வேதனை வகைகளைச் செய்கின்ற கரிய கண்ணும், எங்கும் கிட்டுதற்கு அரிய பாற்கடல் அமுது வெளிப்பட்டு வடியும் சிவந்த வாயும், சிரித்த முகமும், வெண்மையான பற்களும், நட்பைக் காட்டி வாருங்கள், அமருங்கள் எனக் கூறுகின்ற இனிமையான மொழியும், மிகுந்த பன்னீரும், பூந்தாதுடன் புதிய செஞ்சாந்தும், குளிர்ச்சி தரும் அகிலும், புனுகு சட்டமும் அணிகின்ற ஆடம்பரத்துடன் கூடிய ஒளி பெருகுவதான மார்பகங்களும், அழகிய கைகளும், யாராயிருந்த போதிலும் தோய்கின்ற சேறு என்று சொல்லக் கூடிய பெண்குறியும், கொப்பூழும், உலக மாயை குடி கொண்டுள்ள இந்த உடலில் நன்கு காலம் கழிக்கும் வேசியர்களை எதிரில் பார்த்து நான் மருட்சி அடைதலை ஒழிக்க மாட்டேனோ? காளி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பராகாச வடிவை உடையவள், அழகி, கரிய நிறத்தி, கெளரி, பயத்தை போக்குபவள், சங்கரி, கருணை நிறைந்த சிவாம்பிகை, சுத்த மாயையாகிய சக்தி, துர்க்கை, திரிபுரத்துப் பகைவர்களை எரித்த சிவனது ஆசை மனையாட்டி, முழு முதல் தேவியான அம்பிகை, ஆதி இமவானின் மகள், என்றும் சுமங்கலியாக இருப்பவள், பொன்னிறம் படைத்தவள், (சுடு)காட்டில் நடனமாட விருப்பம் கொண்டவள், செம்மையான லக்ஷ்மி, பிரமன் தேவி சரஸ்வதி, மன்மதன் மனைவியாகிய ரதி, (வசிட்டர் மனைவியாகிய) அருந்ததி, இந்திர(ன்) தேவி இந்திராணி முதலான தேவதைகள் வணங்கும் முக்கண்ணி, மேக நிறம் கொண்ட திருமாலின் தங்கை (ஆகிய பார்வதி) பெற்றருளிய இளையவனே, வேலையும், மயிலையும் நினைக்கின்ற அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள் பாலிக்கும் கந்தனே, முடிவே இல்லாத மேலை வயலூர் என்னும் தலத்தில் மனம் மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே.
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு வாதை வகை செய் கரும் க(ண்)ணும் ... வாளின் நுனியைக் காட்டிலும், விஷத்தைக் காட்டிலும், கொடிய யம ராஜனுடைய தொழிலைக் காட்டிலும், அம்பைக் காட்டிலும் பெரிய வேதனை வகைகளைச் செய்கின்ற கரிய கண்ணும், எங்கணும் அரிதான வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்) வாயு(ம்)நகை முக வெண் ப(ல்)லு(ம்) நண்புடன் வாரும் இரும் எனும் இன் சொ(ல்)லும் ... எங்கும் கிட்டுதற்கு அரிய பாற்கடல் அமுது வெளிப்பட்டு வடியும் சிவந்த வாயும், சிரித்த முகமும், வெண்மையான பற்களும், நட்பைக் காட்டி வாருங்கள், அமருங்கள் எனக் கூறுகின்ற இனிமையான மொழியும், மிஞ்சிய பனி நீரும் தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் ... மிகுந்த பன்னீரும், பூந்தாதுடன் புதிய செஞ்சாந்தும், குளிர்ச்சி தரும் அகிலும், புனுகு சட்டமும் அணிகின்ற ஆடம்பரத்துடன் கூடிய ஒளி பெருகுவதான மார்பகங்களும், அழகிய கைகளும், எவரேனும் தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ ... யாராயிருந்த போதிலும் தோய்கின்ற சேறு என்று சொல்லக் கூடிய பெண்குறியும், கொப்பூழும், உலக மாயை குடி கொண்டுள்ள இந்த உடலில் நன்கு காலம் கழிக்கும் வேசியர்களை எதிரில் பார்த்து நான் மருட்சி அடைதலை ஒழிக்க மாட்டேனோ? காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி காதல் மனைவி பரம்பரை அம்பிகை ... காளி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பராகாச வடிவை உடையவள், அழகி, கரிய நிறத்தி, கெளரி, பயத்தை போக்குபவள், சங்கரி, கருணை நிறைந்த சிவாம்பிகை, சுத்த மாயையாகிய சக்தி, துர்க்கை, திரிபுரத்துப் பகைவர்களை எரித்த சிவனது ஆசை மனையாட்டி, முழு முதல் தேவியான அம்பிகை, ஆதி மலை மகள் மங்கலி பிங்கலை கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் த்ரி அம்பகி மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே ... ஆதி இமவானின் மகள், என்றும் சுமங்கலியாக இருப்பவள், பொன்னிறம் படைத்தவள், (சுடு)காட்டில் நடனமாட விருப்பம் கொண்டவள், செம்மையான லக்ஷ்மி, பிரமன் தேவி சரஸ்வதி, மன்மதன் மனைவியாகிய ரதி, (வசிட்டர் மனைவியாகிய) அருந்ததி, இந்திர(ன்) தேவி இந்திராணி முதலான தேவதைகள் வணங்கும் முக்கண்ணி, மேக நிறம் கொண்ட திருமாலின் தங்கை (ஆகிய பார்வதி) பெற்றருளிய இளையவனே, வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு கந்த நிரந்தர மேலை வயலை உகந்து உ(ள்)ள(ம்) நின்று அருள் பெருமாளே. ... வேலையும், மயிலையும் நினைக்கின்ற அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள் பாலிக்கும் கந்தனே, முடிவே இல்லாத மேலை வயலூர் என்னும் தலத்தில் மனம் மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே.