ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி யாடையணி காட்டி ...... அநுராக ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி ஆதரவு காட்டி ...... எவரோடும் ஈரநகை காட்டி நேரமிகை காட்டி யேவினைகள் காட்டி ...... யுறவாடி ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி யீடழிதல் காட்ட ...... லமையாதோ வீரவப ராட்டு சூரர்படை காட்டில் வீழனலை யூட்டி ...... மயிலூர்தி வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு வேலைவிளை யாட்டு ...... வயலூரா சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலிகுற வாட்டி ...... மணவாளா தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
ஆரம் முலை காட்டி மார நிலை காட்டி
ஆடை அணி காட்டி அநுராக ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி
ஆதரவு காட்டி எவரோடும் ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே
வினைகள் காட்டி உறவாடி ஏதம் மயல் காட்டும் மாதர் வலை காட்டி
ஈடு அழிதல் காட்டல் அமையாதோ
வீர அபர ஆட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி
வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா
மலை நாட்டில் சேர வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே.
முத்து மாலை அணிந்த மார்பகத்தைக் காட்டி, மன்மதனுடைய காமநிலைகளைக் காட்டி, ஆடை ஆபரணங்களைக் காட்டி, காம இச்சையை ஊட்டும் விஷம் கொண்ட கண்களைக் காட்டி, பண் ஒலி கொண்ட பேச்சைக் காட்டி, அன்பினைக் காட்டி, யாரோடும் குளிர்ந்த சிரிப்பைக் காட்டி, பொழுதெல்லாம் மிகுதியான உறவைக் காட்டியே, அவர்களுடைய தொழிலுக்கு உரிய செயல்களைக் காட்டி, நட்பைக் காட்டி, கேடு விளைவிக்கும் காம மயக்கத்தைக் காட்டும் விலைமாதர்கள் தமது காம வலையை விரித்து, எனது வலிமை எல்லாம் தொலைந்து போகும்படி செய்வித்தல் அடங்காதோ? வீரத்துடன் எதிர்க்கும் வல்லமை கொண்ட சூரர்களின் சேனை என்னும் காட்டில் நெருப்பு விழும்படி புகுவித்து மயில்வாகனம் ஏறுபவனே, வேலாயுதத்தை அதன் உறையிலிருந்து எடுத்து நீட்டிக் கடலில் விளையாட்டைச் செய்த வயலூரா, வள்ளிமலை நாட்டில் உன்னுடன் இணைவதற்கு அன்புடன் விரும்பிய, நல்லொழுக்கம் நிறைந்த, குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, உனது ஒளி வாய்ந்த புகழை விளக்கமுறச் சொல்லிய, ஆசை மிகும் கூட்டத்தாராகிய, தேவர்களைச் சிறையினின்றும் நீக்கிய பெருமாளே.
ஆரம் முலை காட்டி மார நிலை காட்டி ... முத்து மாலை அணிந்த மார்பகத்தைக் காட்டி, மன்மதனுடைய காமநிலைகளைக் காட்டி, ஆடை அணி காட்டி அநுராக ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ... ஆடை ஆபரணங்களைக் காட்டி, காம இச்சையை ஊட்டும் விஷம் கொண்ட கண்களைக் காட்டி, பண் ஒலி கொண்ட பேச்சைக் காட்டி, ஆதரவு காட்டி எவரோடும் ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே ... அன்பினைக் காட்டி, யாரோடும் குளிர்ந்த சிரிப்பைக் காட்டி, பொழுதெல்லாம் மிகுதியான உறவைக் காட்டியே, வினைகள் காட்டி உறவாடி ஏதம் மயல் காட்டும் மாதர் வலை காட்டி ... அவர்களுடைய தொழிலுக்கு உரிய செயல்களைக் காட்டி, நட்பைக் காட்டி, கேடு விளைவிக்கும் காம மயக்கத்தைக் காட்டும் விலைமாதர்கள் தமது காம வலையை விரித்து, ஈடு அழிதல் காட்டல் அமையாதோ ... எனது வலிமை எல்லாம் தொலைந்து போகும்படி செய்வித்தல் அடங்காதோ? வீர அபர ஆட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி ... வீரத்துடன் எதிர்க்கும் வல்லமை கொண்ட சூரர்களின் சேனை என்னும் காட்டில் நெருப்பு விழும்படி புகுவித்து மயில்வாகனம் ஏறுபவனே, வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா ... வேலாயுதத்தை அதன் உறையிலிருந்து எடுத்து நீட்டிக் கடலில் விளையாட்டைச் செய்த வயலூரா, மலை நாட்டில் சேர வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா ... வள்ளிமலை நாட்டில் உன்னுடன் இணைவதற்கு அன்புடன் விரும்பிய, நல்லொழுக்கம் நிறைந்த, குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே. ... உனது ஒளி வாய்ந்த புகழை விளக்கமுறச் சொல்லிய, ஆசை மிகும் கூட்டத்தாராகிய, தேவர்களைச் சிறையினின்றும் நீக்கிய பெருமாளே.