கூர்மை கொண்ட கடைக்கண்ணாலும், மேரு மலை போல மிகவும் மேம்பட்டு எழுகின்ற மார்பகத்தாலும், (இந்த்ரகோபம் என்ற) தம்பலப் பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களாலும், பொருந்தியுள்ள தன்மையில் ஆல் இலை போன்ற அழகிய வயிற்றாலும், பேச்சினாலும், சிறந்த வளையல்களை அணிந்த கைகளாலும், மேகலை என்னும் இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த மெல்லிய இடையினாலும், பொது மகளிர் என்கின்ற சேற்றிலே நான் நாள் தோறும் முழுகி, வாழ் நாளை வீணிலே செலவழித்து, மாயை பொருந்திய அறிவு கொண்டவனாகித் திரிவேனோ? பூமிதனில் மிகுந்த அகந்தை உடையவனாகி போர் செய்யும் துஷ்டனான ராவணனுடைய பெரிய சேனை பொடிபட்டு அழியுமாறு தாக்கிய, கருடக் கொடியைக் கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர் மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே, (கஜமுகாசுரன் என்ற) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட சிவபெருமானின் மகன் முருகனே, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
கூரிய கடைக்க(ண்)ணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் ... கூர்மை கொண்ட கடைக்கண்ணாலும், மேரு மலை போல மிகவும் மேம்பட்டு எழுகின்ற மார்பகத்தாலும், கோப அதரத்தினாலு(ம்) மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும் ... (இந்த்ரகோபம் என்ற) தம்பலப் பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களாலும், பொருந்தியுள்ள தன்மையில் ஆல் இலை போன்ற அழகிய வயிற்றாலும், பேச்சினாலும், சீரிய வளைக் கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர் சேறு தனில் நித்த(ம்) மூழ்கி ... சிறந்த வளையல்களை அணிந்த கைகளாலும், மேகலை என்னும் இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த மெல்லிய இடையினாலும், பொது மகளிர் என்கின்ற சேற்றிலே நான் நாள் தோறும் முழுகி, நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ ... வாழ் நாளை வீணிலே செலவழித்து, மாயை பொருந்திய அறிவு கொண்டவனாகித் திரிவேனோ? தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக ... பூமிதனில் மிகுந்த அகந்தை உடையவனாகி போர் செய்யும் துஷ்டனான ராவணனுடைய பெரிய சேனை பொடிபட்டு அழியுமாறு சாடும் உவணப் பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே ... தாக்கிய, கருடக் கொடியைக் கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர் மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே, வாரணம் உரித்து மாதர் மேகலை வளைக்கை நாண(ம்) மா பலி முதல் கொள் நாதன் முருகோனே ... (கஜமுகாசுரன் என்ற) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட சிவபெருமானின் மகன் முருகனே, வார் உறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. ... கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.