பஞ்ச புலனும் பழைய (இ)ரண்டு வினையும் பிணிகள்
பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி பண்டு அற
உடன் பழைய தொண்டர்களுடன் பழகி
பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலவ
கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் கொஞ்ச
மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய்
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல
இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் எந்த
உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள
இந்து நுதலும் புரள கங்குல் மேகம் அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள
அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு(ம்) தம்பிரானே.
(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும், பழைமையாக வரும் நல் வினை, தீ வினைகளும், நோய்களும் பஞ்சு எரிவது போல எரிந்து, பொடி வடிவம் ஆகி முதலிலேயே அற்றுப் போக, தாமதம் இன்றி பழைய அடியார்களுடன் பழகி, சுவாதிஷ்டானத்தில் பிரமனும், மணி பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்திரரும், விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சதாசிவமும் விளங்க, (ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத்தில்) யானை முக விநாயகரும் சீருடன் அமர்ந்திட, (ஆக, ஆறு ஆதாரங்களிலும்) அவரவர்க்கு உரிய உறைவிடங்களில் வந்து விளங்க, (அப்போது) கொஞ்சுவது போன்ற இனிய சிலம்பின் ஓசை, கழலின் ஓசை, விந்து சம்பந்தமான நாத ஒலி இவை எல்லாம் இனிமையாக ஒலிக்க, மயிலின் முதுகின் மேல் நீ வந்து காட்சி கொடுத்து, என் மனக் கவலையை ஒழித்து, உனது திருவடியை இன்று தருவாயாக. இடையும் மெலிவுற்றுச் சுழல, அம்பு போன்ற கண்களும் சுழல, இன்பச் சுவை நிறைந்த மார்பகங்களைக் கரத்தில் கொள்ள முடியாத வகையில் விம்மி நிற்க, ஆடை குலைய, அதிவேகத்துடன் அமுத ரசம் பெருக, பிறை போன்ற நெற்றியும் சுருங்க, இருளும் மேகமும் பயப்படும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு அலைய, பொற் குண்டலங்களும் ஊசலாட, அழகிய பொன் உருவம் விளங்கும் மங்கை தேவயானையை திருமணம் செய்து கொண்ட குமரனே, அன்பர்கள் விளங்கும் திருநெடுங்களம் என்னும் வளப்பம் பொருந்திய தலத்தில், தேவர்களும், பிரமனும் போற்றும் தம்பிரானே.
பஞ்ச புலனும் பழைய (இ)ரண்டு வினையும் பிணிகள் ... (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும், பழைமையாக வரும் நல் வினை, தீ வினைகளும், நோய்களும் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி பண்டு அற ... பஞ்சு எரிவது போல எரிந்து, பொடி வடிவம் ஆகி முதலிலேயே அற்றுப் போக, உடன் பழைய தொண்டர்களுடன் பழகி ... தாமதம் இன்றி பழைய அடியார்களுடன் பழகி, பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ ... சுவாதிஷ்டானத்தில் பிரமனும், மணி பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்திரரும், விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சதாசிவமும் விளங்க, குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலவ ... (ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத்தில்) யானை முக விநாயகரும் சீருடன் அமர்ந்திட, (ஆக, ஆறு ஆதாரங்களிலும்) அவரவர்க்கு உரிய உறைவிடங்களில் வந்து விளங்க, கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் கொஞ்ச ... (அப்போது) கொஞ்சுவது போன்ற இனிய சிலம்பின் ஓசை, கழலின் ஓசை, விந்து சம்பந்தமான நாத ஒலி இவை எல்லாம் இனிமையாக ஒலிக்க, மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் ... மயிலின் முதுகின் மேல் நீ வந்து காட்சி கொடுத்து, என் மனக் கவலையை ஒழித்து, உனது திருவடியை இன்று தருவாயாக. எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல ... இடையும் மெலிவுற்றுச் சுழல, அம்பு போன்ற கண்களும் சுழல, இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் எந்த ... இன்பச் சுவை நிறைந்த மார்பகங்களைக் கரத்தில் கொள்ள முடியாத வகையில் விம்மி நிற்க, உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள ... ஆடை குலைய, அதிவேகத்துடன் அமுத ரசம் பெருக, இந்து நுதலும் புரள கங்குல் மேகம் அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள ... பிறை போன்ற நெற்றியும் சுருங்க, இருளும் மேகமும் பயப்படும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு அலைய, பொற் குண்டலங்களும் ஊசலாட, அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா ... அழகிய பொன் உருவம் விளங்கும் மங்கை தேவயானையை திருமணம் செய்து கொண்ட குமரனே, அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு(ம்) தம்பிரானே. ... அன்பர்கள் விளங்கும் திருநெடுங்களம் என்னும் வளப்பம் பொருந்திய தலத்தில், தேவர்களும், பிரமனும் போற்றும் தம்பிரானே.