விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள்
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார் தம் விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம இடு மருந்தோடு சோற்றையே இடு விலை மாதர்
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு சரச இங்கித நே(ர்)த்தியாகிய சுழலாலே சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர
உந்தியை வாட்டியே இடை தளரவும் க(ண்)ணை ஆட்டும் வேசியர் உறவாமோ
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான செனம் அடங்கலும் மாற்றியே
உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய
அன்பர்கள் ஏத்தவே அரி அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே.
பரிகாசமானதும் துன்பம் தரக் கூடியதுமான வார்த்தைகளைப் பேசுபவர்கள். துன்பத்துக்கு காரணமான விலைமாதர்கள். அழுக்கு நாற்றம் வீசுபவர்கள். செல்வப் பெருக்கு ஒடுங்கி நிலை மாறுவதற்கு வாய்ப்பு இதுதான் என்று, வருவோர்களுடைய அப்போதைக்கு அப்போது உள்ள நிலைமையைக் கவனித்து, ஆசை காரணமாக, காம இச்சைகளை எழுப்பி தாங்கள் இடுகின்ற மருந்தோடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர்களாகிய விலைமாதர்கள். எல்லா வித நீராடல்களையும் ஆட்டி, மார்பகங்கள் படும்படி குனிந்து, இசை ஞானத்தைக் காட்டி, அதனால் வருகின்ற காம சேட்டை முதலிய இனிமையான முறைப்பட்ட சுழற்சியான ஆடலாலே, தாள ஒத்து முழங்க, வாயில் இசைப் பாடல்கள் பிறக்க, வயிற்றை ஒழுங்காக அசைத்து, இடை தளரவும், கண்களை ஆட்டி அசைக்கும் விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச் செய்து, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும் மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும், துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும், நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து, அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள் திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில் நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய, அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே, தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில் எழுந்தருளி இருக்கும் பெருமாளே.
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் ... பரிகாசமானதும் துன்பம் தரக் கூடியதுமான வார்த்தைகளைப் பேசுபவர்கள். துன்பத்துக்கு காரணமான விலைமாதர்கள். அழுக்கு நாற்றம் வீசுபவர்கள். விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார் தம் விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம இடு மருந்தோடு சோற்றையே இடு விலை மாதர் ... செல்வப் பெருக்கு ஒடுங்கி நிலை மாறுவதற்கு வாய்ப்பு இதுதான் என்று, வருவோர்களுடைய அப்போதைக்கு அப்போது உள்ள நிலைமையைக் கவனித்து, ஆசை காரணமாக, காம இச்சைகளை எழுப்பி தாங்கள் இடுகின்ற மருந்தோடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர்களாகிய விலைமாதர்கள். சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு சரச இங்கித நே(ர்)த்தியாகிய சுழலாலே சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர ... எல்லா வித நீராடல்களையும் ஆட்டி, மார்பகங்கள் படும்படி குனிந்து, இசை ஞானத்தைக் காட்டி, அதனால் வருகின்ற காம சேட்டை முதலிய இனிமையான முறைப்பட்ட சுழற்சியான ஆடலாலே, தாள ஒத்து முழங்க, வாயில் இசைப் பாடல்கள் பிறக்க, உந்தியை வாட்டியே இடை தளரவும் க(ண்)ணை ஆட்டும் வேசியர் உறவாமோ ... வயிற்றை ஒழுங்காக அசைத்து, இடை தளரவும், கண்களை ஆட்டி அசைக்கும் விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான செனம் அடங்கலும் மாற்றியே ... சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச் செய்து, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும் மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும், துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும், நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து, உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய ... அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள் திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில் நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய, அன்பர்கள் ஏத்தவே அரி அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே ... அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே, அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே. ... தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில் எழுந்தருளி இருக்கும் பெருமாளே.