கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கிப் பிடித்துப் புடைத்து வளர் கனக குடம் ஒத்துக் கனத்துப் பெருத்த மணி அணியாலே
கதிர் திகழு செப்பைக் கதிக்கப் பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்திப் பொருத்து முலை கமழ் விரை கொள் செச்சைக் கலப்பைப் பொதித்த அதனை விலகாது
கடுவை அடுவைப் பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றிக் குயிற்றிப் புரட்டி வரு கயல் விழி வெருட்டித் துரத்திச் செவிக் குழையின் மிசை தாவும்
களமதனனுக்குச் சயத்தைப் படைத்துலவு கடுமொழி பயிற்ற அக்களைத்துக் கொடிச்சியர்கள் கணியினில் அகப்பட்டு அழுத்து அத் துயர்ப் படுவது ஒழியேனோ
அடலை புனை முக்கண் பரற்குப் பொருள் சொல் அரு மறைதனை உணர்த்திச் செகத்தைப் பெருத்த மயில் அதனை முன் நடத்திக் கணத்தில் திரித்து வரும் அழகோனே
அபகடம் உரைத்து அத்த(ம்) மெத்தப் படைத்து உலகில் எளியரை மருட்டிச் செகத்தில் பிழைக்க எ(ண்)ணும் அசடர் த(ம்) மனத்தைக் கலக்கித் துணித்து அடரும் அதி சூரா
விட அரவு அணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பைச் செவிக் கண் செறித்து மிக விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் விழை மருக
கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறு நெறென வெட்டு உக்ர சத்தித் தனிப்படைய விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே.
மத யானையின் தந்தம் போல ஒளியுடன் வெளிப்பட்டு, யாவரும் மிகவும் வியக்கத்தக்க வகையில் (வேசையரின்) மார்பிடம் முழுவதும் நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்தின ஆபரணத்தின் கனம் கொண்டதும், ஒளி விளங்கும் சிமிழ் போல நன்றாகத் தோன்றும்படி இன்பம் கொடுக்கும் தாமரை மொட்டுப் போன்றதும், அன்புடன் பாராட்டப்பட்டு அமைந்துள்ள மார்பகத்தை நறு மணம் கொண்ட சிவந்த நிறமான கலவைச் சாந்து, நிரம்பியுள்ள தனத்தை விட்டு நீங்காது. விஷத்தையும், மாவடுவையும் போல் அமைந்து, புருவமான வில்லின் கீழ்ச் சிக்க வைத்த செயலுக்கு ஒப்ப நின்று, ஒளி வீசிப் புரளுவதாய் மீன் போன்ற கண்களை விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின் மீது பாய, கள்ளத்தனமான மன்மதனுக்கு வெற்றியைக் கொடுத்து உலவுகின்ற, கடுமையான (விஷம் போன்ற) சொற்களைப் பேச (அதனால்) சோர்ந்து, அந்தக் கொடி போன்ற இடை உடைய விலைமாதர் வலையில் சிக்குண்டு அழுத்தப் படுவதால் நான் துன்புறுவது நீங்க மாட்டேனோ? சாம்பல் பூசுகின்ற, (சூரியன் சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சொல்லி அரிய மறைப் பொருளை உபதேசித்து, பெருத்த மயில் வாகனத்தில் ஏறி முன்பு நடத்தி உலகத்தை ஒரு கணப்பொழுதினில் சுற்றி வலம் வந்த அழகனே, வஞ்சகம் மிக்க மொழிகளைப் பேசி, பொருட் செல்வம் நிரம்ப உள்ளவர்களாய் உலகிலே எளியவர்களைப் பயமுறுத்தி ஜெகத்தில் தாம்மட்டுமே பிழைக்க எண்ணுகின்ற முட்டாள்களின் மனதைக் கலக்கி வெட்டிப் பிளந்து அவர்களை நெருக்கும் அதி சூரனே, நச்சை உடைய (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் உறங்கும் கருணா மூர்த்தியான திருமால், யானை (கஜேந்திரன்) கூச்சலிட்டதை காதில் நன்கு ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக கருடன் மேல் சிறக்க அன்புடன் வந்த ஒப்பற்ற திருமால் விரும்பும் மருகனே, மாமரமாக கடலில் வந்த சூரனை நெறுநெறு என்று வெட்டிய வலிமையான வேலாயுதம் என்ற ஒப்பற்ற படையை உடையவனே, சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம் என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே.
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கிப் பிடித்துப் புடைத்து வளர் கனக குடம் ஒத்துக் கனத்துப் பெருத்த மணி அணியாலே ... மத யானையின் தந்தம் போல ஒளியுடன் வெளிப்பட்டு, யாவரும் மிகவும் வியக்கத்தக்க வகையில் (வேசையரின்) மார்பிடம் முழுவதும் நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்தின ஆபரணத்தின் கனம் கொண்டதும், கதிர் திகழு செப்பைக் கதிக்கப் பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்திப் பொருத்து முலை கமழ் விரை கொள் செச்சைக் கலப்பைப் பொதித்த அதனை விலகாது ... ஒளி விளங்கும் சிமிழ் போல நன்றாகத் தோன்றும்படி இன்பம் கொடுக்கும் தாமரை மொட்டுப் போன்றதும், அன்புடன் பாராட்டப்பட்டு அமைந்துள்ள மார்பகத்தை நறு மணம் கொண்ட சிவந்த நிறமான கலவைச் சாந்து, நிரம்பியுள்ள தனத்தை விட்டு நீங்காது. கடுவை அடுவைப் பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றிக் குயிற்றிப் புரட்டி வரு கயல் விழி வெருட்டித் துரத்திச் செவிக் குழையின் மிசை தாவும் ... விஷத்தையும், மாவடுவையும் போல் அமைந்து, புருவமான வில்லின் கீழ்ச் சிக்க வைத்த செயலுக்கு ஒப்ப நின்று, ஒளி வீசிப் புரளுவதாய் மீன் போன்ற கண்களை விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின் மீது பாய, களமதனனுக்குச் சயத்தைப் படைத்துலவு கடுமொழி பயிற்ற அக்களைத்துக் கொடிச்சியர்கள் கணியினில் அகப்பட்டு அழுத்து அத் துயர்ப் படுவது ஒழியேனோ ... கள்ளத்தனமான மன்மதனுக்கு வெற்றியைக் கொடுத்து உலவுகின்ற, கடுமையான (விஷம் போன்ற) சொற்களைப் பேச (அதனால்) சோர்ந்து, அந்தக் கொடி போன்ற இடை உடைய விலைமாதர் வலையில் சிக்குண்டு அழுத்தப் படுவதால் நான் துன்புறுவது நீங்க மாட்டேனோ? அடலை புனை முக்கண் பரற்குப் பொருள் சொல் அரு மறைதனை உணர்த்திச் செகத்தைப் பெருத்த மயில் அதனை முன் நடத்திக் கணத்தில் திரித்து வரும் அழகோனே ... சாம்பல் பூசுகின்ற, (சூரியன் சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சொல்லி அரிய மறைப் பொருளை உபதேசித்து, பெருத்த மயில் வாகனத்தில் ஏறி முன்பு நடத்தி உலகத்தை ஒரு கணப்பொழுதினில் சுற்றி வலம் வந்த அழகனே, அபகடம் உரைத்து அத்த(ம்) மெத்தப் படைத்து உலகில் எளியரை மருட்டிச் செகத்தில் பிழைக்க எ(ண்)ணும் அசடர் த(ம்) மனத்தைக் கலக்கித் துணித்து அடரும் அதி சூரா ... வஞ்சகம் மிக்க மொழிகளைப் பேசி, பொருட் செல்வம் நிரம்ப உள்ளவர்களாய் உலகிலே எளியவர்களைப் பயமுறுத்தி ஜெகத்தில் தாம்மட்டுமே பிழைக்க எண்ணுகின்ற முட்டாள்களின் மனதைக் கலக்கி வெட்டிப் பிளந்து அவர்களை நெருக்கும் அதி சூரனே, விட அரவு அணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பைச் செவிக் கண் செறித்து மிக விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் விழை மருக ... நச்சை உடைய (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் உறங்கும் கருணா மூர்த்தியான திருமால், யானை (கஜேந்திரன்) கூச்சலிட்டதை காதில் நன்கு ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக கருடன் மேல் சிறக்க அன்புடன் வந்த ஒப்பற்ற திருமால் விரும்பும் மருகனே, கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறு நெறென வெட்டு உக்ர சத்தித் தனிப்படைய விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே. ... மாமரமாக கடலில் வந்த சூரனை நெறுநெறு என்று வெட்டிய வலிமையான வேலாயுதம் என்ற ஒப்பற்ற படையை உடையவனே, சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம் என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே.