புழுகு ஒடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பி(ல்) லேபனம் புளகித அபிராம பூஷித கொங்கை யானை
பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணிஅணி குழை மீது தாவடி பொருவன கணை போல் விலோசன வந்தியாலே
மெழுகு என உருகா அ(ன்)னார் தமது இதய கலகமோடு மோகன வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன்
மிடை படும் மலம் மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின் விதரண சிவ ஞான போதகம் வந்து தாராய்
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் கக ராசன் மேலிட ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக செய செய முருகா குகா வளர் கந்த வேளே
திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி சூழ்தரு திருவிடை மருதூரில் மேவிய தம்பிரானே.
புனுகு சட்டத்தோடு பன்னீர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளிலும் நிரம்பியதாய் அள்ளி, மார்பில் சந்தனம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசி, புளகாங்கிதம் கொண்ட அழகுள்ளதாய், அலங்காரம் பூண்டதாய் உள்ள மலை போன்ற மார்பகங்களை, பொதுவான இடத்தில் நின்று விலை கூறும் வேசிகளின் ரத்தினம் பதித்த குண்டலங்களின் மீது போர் செய்கின்ற அம்புகள் போன்ற கண்கள் ஏற்படுத்தும் கொடுமையாலே, மெழுகு போல உள்ளம் உருகி அந்த வேசியர்களுடைய உள்ளத்தே தோன்றும் சச்சரவால் மன மயக்கம் கொண்டவனாய் பலவிதமான பரிதாபம் படத் தக்க துன்பம் அடைந்து அடியேன் நெருங்கி வரும் (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் மாயை வசத்தால் மிகவும் மனக் கலக்கம் கொண்ட என் அறிவு தொலைந்து அழிய, சுவாமியே, உன்னுடைய கொடையாக சிவஞான உபதேசத்தை நீ எழுந்தருளி வந்து தந்து உதவுக. (சூரனுடைய) ஏழு மலைகளும் நிலை பெயர்ந்து ஓடவும், கடல் மொகுமொகு என்று கலங்கி அலைகள் வீசவும், மண்ணுலகத்தாரின் துன்பங்கள் கெடவும், அசுரர்களின் சேனைகள் தோற்று ஓடவும், தேவர்கள் சிறையினின்று விடுபடவும், நாய், நரி, கழுகுகள், பறவைகளின் அரசனாகிய கருடன் மேலே வட்டமிடவும், போர்க்களத்தில் பூத கண சேனைகள் நின்று உலாவவும், செழுமை வாய்ந்த பிணிமுகம் என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமான மயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே, அலைகள் ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.
புழுகு ஒடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பி(ல்) லேபனம் புளகித அபிராம பூஷித கொங்கை யானை ... புனுகு சட்டத்தோடு பன்னீர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளிலும் நிரம்பியதாய் அள்ளி, மார்பில் சந்தனம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசி, புளகாங்கிதம் கொண்ட அழகுள்ளதாய், அலங்காரம் பூண்டதாய் உள்ள மலை போன்ற மார்பகங்களை, பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணிஅணி குழை மீது தாவடி பொருவன கணை போல் விலோசன வந்தியாலே ... பொதுவான இடத்தில் நின்று விலை கூறும் வேசிகளின் ரத்தினம் பதித்த குண்டலங்களின் மீது போர் செய்கின்ற அம்புகள் போன்ற கண்கள் ஏற்படுத்தும் கொடுமையாலே, மெழுகு என உருகா அ(ன்)னார் தமது இதய கலகமோடு மோகன வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன் ... மெழுகு போல உள்ளம் உருகி அந்த வேசியர்களுடைய உள்ளத்தே தோன்றும் சச்சரவால் மன மயக்கம் கொண்டவனாய் பலவிதமான பரிதாபம் படத் தக்க துன்பம் அடைந்து அடியேன் மிடை படும் மலம் மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின் விதரண சிவ ஞான போதகம் வந்து தாராய் ... நெருங்கி வரும் (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் மாயை வசத்தால் மிகவும் மனக் கலக்கம் கொண்ட என் அறிவு தொலைந்து அழிய, சுவாமியே, உன்னுடைய கொடையாக சிவஞான உபதேசத்தை நீ எழுந்தருளி வந்து தந்து உதவுக. எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக ... (சூரனுடைய) ஏழு மலைகளும் நிலை பெயர்ந்து ஓடவும், கடல் மொகுமொகு என்று கலங்கி அலைகள் வீசவும், மண்ணுலகத்தாரின் துன்பங்கள் கெடவும், அசுரர்களின் சேனைகள் தோற்று ஓடவும், இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் கக ராசன் மேலிட ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ ... தேவர்கள் சிறையினின்று விடுபடவும், நாய், நரி, கழுகுகள், பறவைகளின் அரசனாகிய கருடன் மேலே வட்டமிடவும், போர்க்களத்தில் பூத கண சேனைகள் நின்று உலாவவும், செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக செய செய முருகா குகா வளர் கந்த வேளே ... செழுமை வாய்ந்த பிணிமுகம் என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமான மயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே, திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி சூழ்தரு திருவிடை மருதூரில் மேவிய தம்பிரானே. ... அலைகள் ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.