படியை அளவு இடு நெடிய கொண்டலும் சண்டனும்
தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் பரவ அரிய நிருபன்
விரகன் சுடும் சம்பனன் செம் பொன் மேனிப் பரமன்
எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும்
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூலச் சடை முடியில் அணியும் ந(ல்)ல சங்கரன் கும்பிடும்
குமரன் அறுமுகவன் மதுரம் தரும் செம் சொ(ல்)லன் சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று
உய்ந்து பாடித் தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன்
பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன்
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ
கடுகு பொடி தவிடு பட மந்திரம் தந்திரம் பயில வரு(ம்) நிருதர் உடலம் பிளந்து
அம்பரம் கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு(ம்) நின்று
அலகை பல திமிலை கொடு தந்தனம் தந்தனம் கருதி இசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும் துங்க வேலா
அடல் புனையும் இடை மருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர
சிந்துரம் சென்று அடங்கு(ம்) அடவி தனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு(ம்) மார்பா
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில்
அந்தமும் தம்பம் என்று அழகு பெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே.
பூமியை தமது காலால் அளவிட்ட, பெரிய மேக நிறம் கொண்ட திருமாலும், யமனும், ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தவர்கள் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரிய அரசன், நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவன், செம்பொன் போன்ற மேனியை உடைய மேலானவன், அழகு கொண்ட பாம்புகளையும், கங்கை நதியையும், லக்ஷ்மி வாசம் செய்யும் தாமரையையும், நிலவையும், கொன்றையையும், பருத்த குமிழம் பூவையும், அறுகம்புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்கும் குமரன், ஆறு முகத்தவன், இனிமையான செவ்விய சொற்களைப் பேசுபவன், சரவண மடுவில் வந்த முதல்வன், (தேவ) சேனாபதி கந்தன் என்று, ஈடேறும்படிப் பாடி, குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி ஒன்றிலும் நான் சென்றவன் அல்லன். (பிறரோடு ஒன்று) பகிர்ந்து கொள்ள எண்ணி, ஒரு தினை அளவாவது ஈகைக் குணத்தைக் கொண்டு அணுகாதவன் நான். தவ வழியில் ஒழுகி நல் வழியில் சீர் பெறும் தீர்மானமான முயற்சி என் மனதில் உதிக்காதோ? கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபடும்படி, மந்திரமும், தந்திரமும் பயின்று வந்த அசுரர்களின் உடல்களைப் பிளந்து, கடல் கதறி நிரம்ப இரத்த ஆறு பொங்கி ஓடும்படியான களிப்புக்கு இடமான நிறைவைப் பார்த்து, அப்போர்க்களத்தில் சேரும்படி, கழுகும், நரியும், காகமும், கருடனும் அங்கு வந்து கூடி எங்கும் நிற்கவும், பல பேய்கள் கூடி பம்பை மேளத்தைக் கொட்டி தந்தனம் தந்தனம் என்ற ஒலிகளை எழுப்பி இசைகளைப் பொழியும் (பிணத்தை உண்ணும்) ஆசையைப் பார்த்து மகிழ்ச்சி உறுகின்ற பரிசுத்தமான வேலனே, வெற்றி விளங்கும் திருவிடைமருதூரில் வந்து பொருந்தியிருக்கும் குணத்தில் சிறந்த குருபரனே, குமரனே, யானைகள் சென்று உறங்கும் (வள்ளிமலைக்) காட்டில் வசிக்கும் வள்ளியின் சந்தனம் விளங்கும் மார்பில் படியும் திருமார்பனே. சிவந்த ரத்தினங்கள் ஒளி வீசி விளங்கும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான நினது திருவடிகளின் எழிலே நமக்குப் பற்றுக்கோடு என்று உணர்ந்து உறுதி பூண்டு, அந்த நன்னெறியை அழகு வாய்க்கத் தடவிப் பற்றி, தேவர்களும் தொண்டு பூண்டுள்ள தம்பிரானே.
படியை அளவு இடு நெடிய கொண்டலும் சண்டனும் ... பூமியை தமது காலால் அளவிட்ட, பெரிய மேக நிறம் கொண்ட திருமாலும், யமனும், தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் பரவ அரிய நிருபன் ... ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தவர்கள் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரிய அரசன், விரகன் சுடும் சம்பனன் செம் பொன் மேனிப் பரமன் ... நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவன், செம்பொன் போன்ற மேனியை உடைய மேலானவன், எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் ... அழகு கொண்ட பாம்புகளையும், கங்கை நதியையும், லக்ஷ்மி வாசம் செய்யும் தாமரையையும், நிலவையும், கொன்றையையும், பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூலச் சடை முடியில் அணியும் ந(ல்)ல சங்கரன் கும்பிடும் ... பருத்த குமிழம் பூவையும், அறுகம்புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்கும் குமரன் அறுமுகவன் மதுரம் தரும் செம் சொ(ல்)லன் சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று ... குமரன், ஆறு முகத்தவன், இனிமையான செவ்விய சொற்களைப் பேசுபவன், சரவண மடுவில் வந்த முதல்வன், (தேவ) சேனாபதி கந்தன் என்று, உய்ந்து பாடித் தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் ... ஈடேறும்படிப் பாடி, குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி ஒன்றிலும் நான் சென்றவன் அல்லன். பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் ... (பிறரோடு ஒன்று) பகிர்ந்து கொள்ள எண்ணி, ஒரு தினை அளவாவது ஈகைக் குணத்தைக் கொண்டு அணுகாதவன் நான். தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ ... தவ வழியில் ஒழுகி நல் வழியில் சீர் பெறும் தீர்மானமான முயற்சி என் மனதில் உதிக்காதோ? கடுகு பொடி தவிடு பட மந்திரம் தந்திரம் பயில வரு(ம்) நிருதர் உடலம் பிளந்து ... கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபடும்படி, மந்திரமும், தந்திரமும் பயின்று வந்த அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அம்பரம் கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர ... கடல் கதறி நிரம்ப இரத்த ஆறு பொங்கி ஓடும்படியான களிப்புக்கு இடமான நிறைவைப் பார்த்து, அப்போர்க்களத்தில் சேரும்படி, கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு(ம்) நின்று ... கழுகும், நரியும், காகமும், கருடனும் அங்கு வந்து கூடி எங்கும் நிற்கவும், அலகை பல திமிலை கொடு தந்தனம் தந்தனம் கருதி இசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும் துங்க வேலா ... பல பேய்கள் கூடி பம்பை மேளத்தைக் கொட்டி தந்தனம் தந்தனம் என்ற ஒலிகளை எழுப்பி இசைகளைப் பொழியும் (பிணத்தை உண்ணும்) ஆசையைப் பார்த்து மகிழ்ச்சி உறுகின்ற பரிசுத்தமான வேலனே, அடல் புனையும் இடை மருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர ... வெற்றி விளங்கும் திருவிடைமருதூரில் வந்து பொருந்தியிருக்கும் குணத்தில் சிறந்த குருபரனே, குமரனே, சிந்துரம் சென்று அடங்கு(ம்) அடவி தனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு(ம்) மார்பா ... யானைகள் சென்று உறங்கும் (வள்ளிமலைக்) காட்டில் வசிக்கும் வள்ளியின் சந்தனம் விளங்கும் மார்பில் படியும் திருமார்பனே. அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் ... சிவந்த ரத்தினங்கள் ஒளி வீசி விளங்கும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான நினது திருவடிகளின் அந்தமும் தம்பம் என்று அழகு பெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே. ... எழிலே நமக்குப் பற்றுக்கோடு என்று உணர்ந்து உறுதி பூண்டு, அந்த நன்னெறியை அழகு வாய்க்கத் தடவிப் பற்றி, தேவர்களும் தொண்டு பூண்டுள்ள தம்பிரானே.