மண், நீர், தீ, வலிமை கொண்ட வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், பொய், கருவிலே பிறப்பு கூடும் அவஸ்தை, சாத்வீகம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்கள், வெகு காலமாய்க் கூடிவரும் நோய்கள், மூளை, ஜீவதாது, ரத்தம், எலும்பு, உடலில் தோன்றும் பசி, உள்ளிருக்கும் மாமிசம் இவை யாவும் கூடிய அறிவற்ற சிறு குடிசையைப் பெரிதெனப் போற்றி இந்த தேகத்தைத் தாங்கி மிகக் கீழானதாகப் பெறப்பட்ட இந்தப் பிறவியிலே ஞானம் கலந்த சிந்தை இல்லாமல் நாயினும் கீழான நான் அலைந்து திரியும் தன்மை நீதி ஆகாது. வீரக் கழல் அணிந்த உன் திருவடிகளை எனக்கு அளித்து, உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிய வேண்டுகிறேன். கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவனே, அழகான தினைப்புனத்து வள்ளிக் கொடி படரும் புயமலைகளை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதனே, குமரனே, போரில் சீறிப் பாயும் பாம்பை அணியும் தந்தை சிவபிரானின் மெய்ப் புதல்வனே, மூன்று தமிழிலும் மகிழும் வித்தகனே, விசேஷமான அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலை போன்ற கணபதியின் தந்தை சிவபிரானுக்கு குருவே, அதே கணபதியின் பராக்ரமம் மிகுந்த தம்பியே, ஞான நிலையில் விளங்குபவனே, விருக்ஷங்கள் பொருந்தி விளங்கும் தலமும், பூமியின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தன்னிடம் வந்து வேண்டினால் அவர்களுக்கு முத்தியைத் தரும் தலமுமாகிய திருவிடைக்கழித் தலத்தில் அமர்ந்த பெருமாளே.