புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் பொருளையும், உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும், தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும், யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அற்புதமான சிறந்த வாழ்வையும், ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும். (தக்ஷயாகத்தில் நடைபெற்ற) சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு தாங்காமல்) கங்கையில் விட்டுவிட இணைந்திருக்கும் சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே, தனியாக வள்ளிமலைக் காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை தழுவிய அழகு புயங்களையும் திருமார்பையும் உடையவனே, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த ஞானமும் வலிமையும் வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே, செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் உள்ள அழகிய திருவிடைக்கழியில் மேவும் பெருமாளே.