இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற எனக்கு
இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித் தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு
அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு எனக் குறுகி
கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம் இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன் கழல் புணையைத் தருவாயே
அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ
வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக் கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே
கரக் கரடக் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை
கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக் கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே.
யாசிப்பவர்களுக்கு மிக்க இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று சொல்லும்படியான எனக்கு, இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து, ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து, ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில் துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக. அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை பொடிபட்டு உதிர, எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே, துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை, வேங்கை மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற எனக்கு ... யாசிப்பவர்களுக்கு மிக்க இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று சொல்லும்படியான எனக்கு, இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித் தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு ... இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து, அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு எனக் குறுகி ... ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து, கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம் இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன் கழல் புணையைத் தருவாயே ... ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில் துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக. அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ ... அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை பொடிபட்டு உதிர, வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக் கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே ... எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே, கரக் கரடக் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை ... துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை, கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக் கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே. ... வேங்கை மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.