நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், (சத்துவம், ராஜதம், தாம
ம் என்ற) முக்குணங்கள் வைக்கப்பட்டதும், நிரம்பப் பொய்யானதும், ரத்தம் கூடியதுமான இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, பயனற்றதும், கவலைகளுக்கு இடமானதும், மனக் குழப்பம் தருவதுமான பல நூல்களைக் கற்று, அந்நூல்களில் உள்ள பொருளைக் கொஞ்சமும் அறியாமல், கொஞ்சிப் பேசியும், உள்ளம் களித்தும், நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகியும், நெருங்கி உறவாடிக் கூடியும் பசப்புகின்ற கொடி போன்ற பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், குவளை மலர் போன்ற கண்களின் ஓரப்பார்வையிலும் நிலை தடுமாறி நான் அலைச்சல் உறுவேனோ? தினை விதைக்கப்பட்ட நல்ல புனக்கொல்லையில் இருந்த குறப்பெண்ணான வள்ளியை அணைகின்ற அழகிய தோள்களை உடைய வீரனே, தெள்ளத் தெளியும்படி ஒப்பற்ற பிரணவத்தை செந்நிறமான சடையை உடைய சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே, தங்க மயமான சிகரங்களை உடைய சிறந்த கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படிக் கோபித்துச் சண்டை செய்த ஒளி வீசும் வேலைக் கையில் ஏந்தியவனே, கடலின் உப்பு நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து ... நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், (சத்துவம், ராஜதம், தாம
ம் என்ற) முக்குணங்கள் வைக்கப்பட்டதும்,
அடர் பொய்க் குருதிக் குடில் பேணா ... நிரம்பப் பொய்யானதும், ரத்தம் கூடியதுமான இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி,
அவலக் கவலைச் சவலைக் கலை கற்று ... பயனற்றதும், கவலைகளுக்கு இடமானதும், மனக் குழப்பம் தருவதுமான பல நூல்களைக் கற்று,
அதனில் பொருள் சற்று அறியாதே ... அந்நூல்களில் உள்ள பொருளைக் கொஞ்சமும் அறியாமல்,
குனகித் தனகிக் கனல் ஒத்து உருகிக் குலவிக் கலவி ... கொஞ்சிப் பேசியும், உள்ளம் களித்தும், நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகியும், நெருங்கி உறவாடிக் கூடியும் பசப்புகின்ற
கொடியார் தம் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையில் குலை பட்டு அலையக் கடவேனோ ... கொடி போன்ற பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், குவளை மலர் போன்ற கண்களின் ஓரப்பார்வையிலும் நிலை தடுமாறி நான் அலைச்சல் உறுவேனோ?
தினை வித்தின நல் புனம் உற்ற குறத் திருவைப் புணர் பொற் புய வீரா ... தினை விதைக்கப்பட்ட நல்ல புனக்கொல்லையில் இருந்த குறப்பெண்ணான வள்ளியை அணைகின்ற அழகிய தோள்களை உடைய வீரனே,
தெளியத் தெளியப் பவளச் சடிலச் சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே ... தெள்ளத் தெளியும்படி ஒப்பற்ற பிரணவத்தை செந்நிறமான சடையை உடைய சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே,
கனகச் சிகரக் குல வெற்பு உருவக் கறுவிப் பொரு கைக் கதிர் வேலா ... தங்க மயமான சிகரங்களை உடைய சிறந்த கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படிக் கோபித்துச் சண்டை செய்த ஒளி வீசும் வேலைக் கையில் ஏந்தியவனே,
கழியைக் கிழியக் கயல் தத்தும் இடைக்கழியில் குமரப் பெருமாளே. ... கடலின் உப்பு நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.