சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
770   சீகாழி திருப்புகழ் ( - வாரியார் # 774 )  

சந்தனம் பரிமள

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்த தந்தன தனதன தனதன
     தந்த தந்தன தனதன தனதன
          தந்த தந்தன தனதன தனதன ...... தனதான


சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
     கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
          தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர்
சந்த தம்பொலி வழகுள வடிவினர்
     வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
          தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
     தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
          செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித்
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
     னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
          சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய்
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
     சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
          மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
     துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
          வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா
தந்த னந்தன தனதன தனவென
     வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
          தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
     துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
          சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.

சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர்
சரியொடு கொடுவளை தங்கு செம் கையர் அ(ன்)னம் என
வரு நடை மடமாதர்
சந்ததம் பொலி அழகுள வடிவினர் வஞ்சகம் பொதி
மனதினர்
அணுகினர் தங்கள் நெஞ்சக(ம்) மகிழ்வுற நிதி தர அவர் மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள்
தரணியில் அணைபவர் செம் பொன் இங்கு இனி இலை
எனில் மிகுதியும் முனிவாகி
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று
சண்டைகள் புரி தரு மயலியர்
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள் கூர்வாய்
மந்தரம் குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழை
தனில் உதவிய
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன்
மகிழ் துணைவ
நல் வஞ்சி தண் குற மகள் பத மலர் பணி மணவாளா
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல்
தரு மண மலர் தங்கு
சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி
மணிகளும் வெயில் விடு
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே.
சந்தனம், நறு மணமுள்ள புனுகு சட்டம் இவைகளை அணிந்துள்ள மார்பினை உடைய மாதர்கள், கை வளையல்களோடு, வேறு நூதனமான நெளிவளைகளும் அணிந்துள்ள சிவந்த கையினர், அன்னம் போல் நடந்து வரும் அழகிய விலைமாதர்கள், எப்போதும் அழகு பொலிகின்ற வடிவத்தினர், வஞ்சக எண்ணங்கள் நிறைந்துள்ள மனத்தை உடையவர்கள், தம்மை நெருங்கி வந்தவர்கள் தங்களுடைய மனம் மகிழும்படி பொருளைத் தர அவர்கள் மேல் மனதார நயவஞ்சகமான பேச்சுக்களைப் பேசி பொருளைக் கவர்கின்ற தந்திரம் வாய்ந்த யோசனைக்காரர்கள், பூமியில் தம்மை அணைப்பவர்கள் தங்களிடம் செம்பொன் இல்லையே என்று சொன்னால் அதிகமாகக் கோபித்து, ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள் விளைவிக்கும் ஆசைக்காரிகள் (ஆகிய விலைமாதரின்) விஷம் போன்ற உறவும், (அதனால்) வரும் பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல, உன்னுடைய திருவருளைப் பாலிப்பாயாக. மந்தர (மலை போன்ற பெரிய கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களுக்கு உற்ற துயரம் ஒழியும்படி அன்று அடர்ந்த மழையில் உதவி புரிந்த கண்ணனாகிய திருமால், மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்ட திருமால் மெச்சுகின்ற மருகனே, பார்வதி தேவி மகிழும் சரவணபவனே, உயர்வும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானை முகத்தை உடைய விநாயகர் மகிழும் தம்பியே, நல்ல வஞ்சிக் கொடி போன்ற இடை உடையவளும், குளிர்ந்த மனம் உள்ளவளுமான குறப்பெண்ணாகிய வள்ளியின் மலர் போன்ற திருவடியைப் பணியும் கணவனே, தந்த னந்தன தனதன தன என்று வண்டு இசையை வெளி விட்டு ரீங்காரம் செய்யும் நறு மண மலர்கள் உள்ள சண்பக மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளரும் சோலையில், சங்கு நன்கு வெளிப்படுத்துகின்ற முத்தும், நாகங்கள் உமிழும் அழகுள்ள பரிசுத்தமான பிரகாசமான ரத்தினங்களும் ஒளி வீசும் சண்பை என்னும் சீகாழியில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் ...
சந்தனம், நறு மணமுள்ள புனுகு சட்டம் இவைகளை அணிந்துள்ள
மார்பினை உடைய மாதர்கள்,
சரியொடு கொடுவளை தங்கு செம் கையர் அ(ன்)னம் என
வரு நடை மடமாதர்
... கை வளையல்களோடு, வேறு நூதனமான
நெளிவளைகளும் அணிந்துள்ள சிவந்த கையினர், அன்னம் போல்
நடந்து வரும் அழகிய விலைமாதர்கள்,
சந்ததம் பொலி அழகுள வடிவினர் வஞ்சகம் பொதி
மனதினர்
... எப்போதும் அழகு பொலிகின்ற வடிவத்தினர், வஞ்சக
எண்ணங்கள் நிறைந்துள்ள மனத்தை உடையவர்கள்,
அணுகினர் தங்கள் நெஞ்சக(ம்) மகிழ்வுற நிதி தர அவர் மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள்
...
தம்மை நெருங்கி வந்தவர்கள் தங்களுடைய மனம் மகிழும்படி
பொருளைத் தர அவர்கள் மேல் மனதார நயவஞ்சகமான பேச்சுக்களைப்
பேசி பொருளைக் கவர்கின்ற தந்திரம் வாய்ந்த யோசனைக்காரர்கள்,
தரணியில் அணைபவர் செம் பொன் இங்கு இனி இலை
எனில் மிகுதியும் முனிவாகி
... பூமியில் தம்மை அணைப்பவர்கள்
தங்களிடம் செம்பொன் இல்லையே என்று சொன்னால் அதிகமாகக்
கோபித்து,
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று
சண்டைகள் புரி தரு மயலியர்
... ஒரு மாத காலத்தில் நேற்றுக்
கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள்
விளைவிக்கும் ஆசைக்காரிகள் (ஆகிய விலைமாதரின்)
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள் கூர்வாய் ...
விஷம் போன்ற உறவும், (அதனால்) வரும் பொல்லாத வறுமையும்
என்னை விட்டு அகல, உன்னுடைய திருவருளைப் பாலிப்பாயாக.
மந்தரம் குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழை
தனில் உதவிய
... மந்தர (மலை போன்ற பெரிய கோவர்த்தன)
மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களுக்கு உற்ற துயரம் ஒழியும்படி
அன்று அடர்ந்த மழையில் உதவி புரிந்த கண்ணனாகிய திருமால்,
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே ... மேகம்
என்னும்படியான நிறத்தைக் கொண்ட திருமால் மெச்சுகின்ற மருகனே,
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன்
மகிழ் துணைவ
... பார்வதி தேவி மகிழும் சரவணபவனே, உயர்வும்
விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானை முகத்தை உடைய
விநாயகர் மகிழும் தம்பியே,
நல் வஞ்சி தண் குற மகள் பத மலர் பணி மணவாளா ... நல்ல
வஞ்சிக் கொடி போன்ற இடை உடையவளும், குளிர்ந்த மனம்
உள்ளவளுமான குறப்பெண்ணாகிய வள்ளியின் மலர் போன்ற
திருவடியைப் பணியும் கணவனே,
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல்
தரு மண மலர் தங்கு
... தந்த னந்தன தனதன தன என்று வண்டு
இசையை வெளி விட்டு ரீங்காரம் செய்யும் நறு மண மலர்கள் உள்ள
சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே ... சண்பக
மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளரும் சோலையில்,
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி
மணிகளும் வெயில் விடு
... சங்கு நன்கு வெளிப்படுத்துகின்ற
முத்தும், நாகங்கள் உமிழும் அழகுள்ள பரிசுத்தமான பிரகாசமான
ரத்தினங்களும் ஒளி வீசும்
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே. ... சண்பை
என்னும் சீகாழியில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.
Similar songs:

770 - சந்தனம் பரிமள (சீகாழி)

தந்த தந்தன தனதன தனதன
     தந்த தந்தன தனதன தனதன
          தந்த தந்தன தனதன தனதன ...... தனதான

Songs from this thalam சீகாழி

764 - அலைகடல் சிலை

765 - இரதமான தேன்

766 - ஊனத்தசை தோல்கள்

767 - ஒய்யா ரச்சிலை

768 - கட்காமக்ரோத

769 - கொங்கு லாவிய

770 - சந்தனம் பரிமள

771 - சருவி இகழ்ந்து

772 - சிந்து உற்று எழு

773 - செக்கர்வானப் பிறை

774 - தினமணி சார்ங்க

775 - பூமாது உரமேயணி

776 - மதனச்சொற் கார

777 - விடம் என மிகுத்த

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 770