வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல்
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ்
ஆம்பல் தோள் கர(ம்) வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார்
பொன் கண்டவுடன் களி கூர்ந்து பேசிகள்
குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள்
கண் சுழலும் படி தாண்டி ஆடிகள் சதிகாரர்
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள்
கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட
ஆழிகள் எண்கிரியும் பொடி சாம்பர் நூறிட அந்தகனும் கயிறு ஆங்கு ஐ வீசிட விடும்வேலா
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே.
வண்டுகள் மொய்க்கும், நறுமணம் கமழும் கூந்தலை உடையவர்களின் கண் அம்பு போன்று இருக்கும். வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றி, வளப்பம் பொருந்திய முத்தை ஒத்துத் திகழும் நன்கு அமைந்த வரிசையான பற்கள், குயிலைப் போன்ற நன்கு பயிலும் மொழிகள், மலை போன்ற மார்பகம், அதில் அழகிய தேமல், அழகிய குமிழம் பூ போன்ற மூக்கு, மூங்கில் போன்ற தோளும், கையும், வஞ்சிக் கொடி போன்ற, நூல் போன்ற நுண்ணிய இடை, இவைகளை உடைய விலைமாதர்கள் பொருளைப் பார்த்தவுடனேயே மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள், கலகத்தை மூட்டும் குரலுடன் எல்லாவற்றையும் பற்றிப் பேசுபவர்கள், கண்கள் சுழலும்படி தாண்டுவதும் ஆடுவதுமாக உள்ள வஞ்சகக்காரிகள், (பணமில்லாதவரிடம்) இரப்போர்கள் ஏந்தும் பையையும், தடி ஒன்றையும் கொடுத்து (பிச்சைக்காரனாகிப்) போவென்று விரட்டி, விஷத்தையும் கலந்து கொடுக்கும் வஞ்சகம் நிறைந்த பாவிகள், (இத்தகையோரின்) அதிகார வரம்பிலும் இவ்வுடல் நலிவுற்று, நாய் போன்ற அடியேனும் திரிவேனோ? தேவர்களும், தவ நிலையை மேற்கொண்டுள்ள தவசிகளும், தாமரையோனும் (பிரமனும்), லக்ஷ்மியின் கணவனான திருமாலும் கோ என்று ஓலம் இட, பயப்பட வேண்டாம் என்னும்படி சென்று வீரத்துடன் அசுரர்களை அவர்கள் உடல் ஒடுங்கி இறந்து ஒழியச் செய்து, கடல்களும், எட்டு மலைகளும் பொடி சாம்பலாய்த் தூளாக, யமனும் தனது பாசக் கயிற்றை அவ்விடம் (போர்க்களத்தில்) வியப்புடன் வீசிட வேலாயுதத்தைச் செலுத்தியவனே, பூச் செண்டை அணிந்துள்ள சடையில் பாம்பு, கங்கை, சந்திரன், எலும்பு (ஆகியவற்றை) அணிந்தவன், பெருமை பொருந்திய திரு நீற்றைப் பூசியுள்ள சிவந்த உடலை உடையவன் (ஆகிய சிவபெருமானுடைய) பிள்ளையே, சிவப்பு நிறம் உடையவனே, வேலனே, முருகோனே, சந்திரனை ஒத்த திருமுகத்தையும், மார்பில் சந்தனப் பூச்சையும் உடையவள், எனது உள்ளத்தில் புகுந்துள்ள உன் தோழி வள்ளியுடன் மனம் மகிழ்ந்து திருமயேந்திரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் ... வண்டுகள் மொய்க்கும், நறுமணம் கமழும் கூந்தலை உடையவர்களின் கண் அம்பு போன்று இருக்கும். வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றி, வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ... வளப்பம் பொருந்திய முத்தை ஒத்துத் திகழும் நன்கு அமைந்த வரிசையான பற்கள், குயிலைப் போன்ற நன்கு பயிலும் மொழிகள், மலை போன்ற மார்பகம், அதில் அழகிய தேமல், அழகிய குமிழம் பூ போன்ற மூக்கு, ஆம்பல் தோள் கர(ம்) வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் ... மூங்கில் போன்ற தோளும், கையும், வஞ்சிக் கொடி போன்ற, நூல் போன்ற நுண்ணிய இடை, இவைகளை உடைய விலைமாதர்கள் பொன் கண்டவுடன் களி கூர்ந்து பேசிகள் ... பொருளைப் பார்த்தவுடனேயே மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள், குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் ... கலகத்தை மூட்டும் குரலுடன் எல்லாவற்றையும் பற்றிப் பேசுபவர்கள், கண் சுழலும் படி தாண்டி ஆடிகள் சதிகாரர் ... கண்கள் சுழலும்படி தாண்டுவதும் ஆடுவதுமாக உள்ள வஞ்சகக்காரிகள், கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் ... (பணமில்லாதவரிடம்) இரப்போர்கள் ஏந்தும் பையையும், தடி ஒன்றையும் கொடுத்து (பிச்சைக்காரனாகிப்) போவென்று விரட்டி, விஷத்தையும் கலந்து கொடுக்கும் வஞ்சகம் நிறைந்த பாவிகள், கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ ... (இத்தகையோரின்) அதிகார வரம்பிலும் இவ்வுடல் நலிவுற்று, நாய் போன்ற அடியேனும் திரிவேனோ? அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என ... தேவர்களும், தவ நிலையை மேற்கொண்டுள்ள தவசிகளும், தாமரையோனும் (பிரமனும்), லக்ஷ்மியின் கணவனான திருமாலும் கோ என்று ஓலம் இட, அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ... பயப்பட வேண்டாம் என்னும்படி சென்று வீரத்துடன் அசுரர்களை அவர்கள் உடல் ஒடுங்கி இறந்து ஒழியச் செய்து, ஆழிகள் எண்கிரியும் பொடி சாம்பர் நூறிட அந்தகனும் கயிறு ஆங்கு ஐ வீசிட விடும்வேலா ... கடல்களும், எட்டு மலைகளும் பொடி சாம்பலாய்த் தூளாக, யமனும் தனது பாசக் கயிற்றை அவ்விடம் (போர்க்களத்தில்) வியப்புடன் வீசிட வேலாயுதத்தைச் செலுத்தியவனே, செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே ... பூச் செண்டை அணிந்துள்ள சடையில் பாம்பு, கங்கை, சந்திரன், எலும்பு (ஆகியவற்றை) அணிந்தவன், பெருமை பொருந்திய திரு நீற்றைப் பூசியுள்ள சிவந்த உடலை உடையவன் (ஆகிய சிவபெருமானுடைய) பிள்ளையே, சிவப்பு நிறம் உடையவனே, வேலனே, முருகோனே, திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு ... சந்திரனை ஒத்த திருமுகத்தையும், மார்பில் சந்தனப் பூச்சையும் உடையவள், எனது உள்ளத்தில் புகுந்துள்ள உன் தோழி வள்ளியுடன் சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே. ... மனம் மகிழ்ந்து திருமயேந்திரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.