பூத் தார் சூடும் கொத்து அலர் குழலியர்
பார்த்தால் வேலும் கட்கமு(ம்) மதன் விடும் போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் போல் தாவி
நாளும் கைப் பொருள் உடையவர் மேல் தாளார் தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயம் கற்ற மை விழியினர்
அமுது ஊறல் வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர்
நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் மாப் பூண் ஆரம் கச்சு அணி முலையினர்
வேட்(கை) பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ
ஆத்தாள் மால் தங்கைச்சி க(ன்)னிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரி புரை ஆள் பேய் பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற நோக்கா ஏதும் செற்றவள் திரு விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே
ஏத்தா நாளும் தர்ப்பண செபமோடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே.
பூவாலாகிய மாலையைச் சூடுபவர்கள். பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை உடையவர்கள். அவர்களது பார்வை வேல் போலவும், வாள் போலவும், மன்மதன் செலுத்தும் போருக்கு என்றே நிறைந்த, பெருகியுள்ள தேன் கொண்ட பூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதர் போலவும் பாய்ந்து, நாள் தோறும், யார் கையில் பொருள் உள்ளதோ அத்தகையோரை தம் மீது அன்பு வரும்படியான ஆசை மயக்கத்தை ஏற்றக்கூடிய மாய வித்தைகளைக் கற்றுள்ள அஞ்சனம் பூசிய கண்ணினர். அமுதம் போன்ற வாயிதழ் ஊறல் வாய்ந்தவர்கள். (வந்தவரின்) மனம் மாறுபடுதல் உண்டாகும்படி பேசும் பொய் நிறைந்த உபாயத்தினர். நூலிலும் தேய்ந்து மிக நுண்ணியதான சிறிய இடை துன்பப்படும்படி ஒளி தாவி வீசுவதும், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில், மாலை, சிறந்த ஆபரணங்கள், முத்து மாலை, கச்சு இவைகளை அணிந்த மார்பை உடையவர்கள். இத்தகைய வேசையர் மீது ஆசை பூண்டு, உடல் நலம் கெட்ட என்னை உன்னுடைய சத்திய வாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி உன்னை வழிபடுமாறு அருள் புரிய மாட்டாயோ? தாயானவள், திருமாலின் தங்கை, கன்னிகை, உமாதேவி, நடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரி புரங்களை எரித்தவள், தான் ஆளும் பேய்களும், பூதங்களும், சுற்றியுள்ள பைரவி, புவனங்களுக்கு ஈசுவரி, எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், வேறுபாடு பொருந்தப் பார்க்காது எதையும் அழித்தவள். திருவிளையாடலாக சிவ பெருமான் (இடது) பக்கத்தில் உறைபவள் ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே, நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே, ஏற்பவர்கள் வரும் போது (அவர்களுக்கு) மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித் தரும் (கொடையாளிகள்) உள்ள, பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
பூத் தார் சூடும் கொத்து அலர் குழலியர் ... பூவாலாகிய மாலையைச் சூடுபவர்கள். பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை உடையவர்கள். பார்த்தால் வேலும் கட்கமு(ம்) மதன் விடும் போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் போல் தாவி ... அவர்களது பார்வை வேல் போலவும், வாள் போலவும், மன்மதன் செலுத்தும் போருக்கு என்றே நிறைந்த, பெருகியுள்ள தேன் கொண்ட பூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதர் போலவும் பாய்ந்து, நாளும் கைப் பொருள் உடையவர் மேல் தாளார் தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயம் கற்ற மை விழியினர் ... நாள் தோறும், யார் கையில் பொருள் உள்ளதோ அத்தகையோரை தம் மீது அன்பு வரும்படியான ஆசை மயக்கத்தை ஏற்றக்கூடிய மாய வித்தைகளைக் கற்றுள்ள அஞ்சனம் பூசிய கண்ணினர். அமுது ஊறல் வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் ... அமுதம் போன்ற வாயிதழ் ஊறல் வாய்ந்தவர்கள். (வந்தவரின்) மனம் மாறுபடுதல் உண்டாகும்படி பேசும் பொய் நிறைந்த உபாயத்தினர். நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் மாப் பூண் ஆரம் கச்சு அணி முலையினர் ... நூலிலும் தேய்ந்து மிக நுண்ணியதான சிறிய இடை துன்பப்படும்படி ஒளி தாவி வீசுவதும், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில், மாலை, சிறந்த ஆபரணங்கள், முத்து மாலை, கச்சு இவைகளை அணிந்த மார்பை உடையவர்கள். வேட்(கை) பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ ... இத்தகைய வேசையர் மீது ஆசை பூண்டு, உடல் நலம் கெட்ட என்னை உன்னுடைய சத்திய வாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி உன்னை வழிபடுமாறு அருள் புரிய மாட்டாயோ? ஆத்தாள் மால் தங்கைச்சி க(ன்)னிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரி புரை ஆள் பேய் பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை ... தாயானவள், திருமாலின் தங்கை, கன்னிகை, உமாதேவி, நடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரி புரங்களை எரித்தவள், தான் ஆளும் பேய்களும், பூதங்களும், சுற்றியுள்ள பைரவி, புவனங்களுக்கு ஈசுவரி, ஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற நோக்கா ஏதும் செற்றவள் திரு விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே ... எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், வேறுபாடு பொருந்தப் பார்க்காது எதையும் அழித்தவள். திருவிளையாடலாக சிவ பெருமான் (இடது) பக்கத்தில் உறைபவள் ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே, ஏத்தா நாளும் தர்ப்பண செபமோடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர ... நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே ... யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே, ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே. ... ஏற்பவர்கள் வரும் போது (அவர்களுக்கு) மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித் தரும் (கொடையாளிகள்) உள்ள, பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.