வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர்
வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே.
வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும் பாதகிகள் ஆவர். வந்தவரிடம் வீணாகப் பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர். பரத்தையர் எனப்படும் இவர்கள் இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம் கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும், திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல், நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி அறிவுடன் தொழுது, வாழும் வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி அருள்வாயாக. நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள், கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள், சிறந்த ஐந்தாவது சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை அணிந்தவள், உமையவள், காளி, அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள், சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே, கங்கை நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய முருகேசனே, ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம் என்னும் தலத்தில் விளங்கும், திருமாலின் மருகனே, பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள், கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள அழகிய சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே.
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் ... வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும் பாதகிகள் ஆவர். வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர் ... வந்தவரிடம் வீணாகப் பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர். வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும் ... பரத்தையர் எனப்படும் இவர்கள் இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம் கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும், மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே ... திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல், வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ ... நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி அறிவுடன் தொழுது, வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே ... வாழும் வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி அருள்வாயாக. நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி ... நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள், கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள், நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி ... சிறந்த ஐந்தாவது சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை அணிந்தவள், உமையவள், காளி, நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக ... அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள், சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே, நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச ... கங்கை நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய முருகேசனே, ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே ... ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம் என்னும் தலத்தில் விளங்கும், திருமாலின் மருகனே, ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான ... பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள், கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே. ... அழகிய சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே.